தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக் நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் தான். விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் ஜனவரி 9-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் இந்த படத்தின் தணிக்கை வாரிய வழக்கின் தீர்ப்பு 9 ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
அதனை தொடர்ந்து ஜனநாயகம் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. எனவே தணிக்கை வாரிய குழுவை பாஜக பயன்படுத்தி இந்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜனநாயகன் படத்திற்கு ஆதரவு வலுத்துள்ளது. விஜய்க்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கருத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
பிரவீன் சக்கரவர்த்தி:
காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு குழு தலைவரான பிரவீன் சக்கவர்த்தி ஏற்கனவே கடந்த மாதம் தமிழகம் வந்து தாவெக தலைவர் விஜய்யை சந்தித்த அரசியல் காலத்தில் பேசு பொருளாக இருந்தது அதனை தொடர்ந்து தற்போது ஜனநாயகன் படத்திற்கு எதிராக எழுந்துள்ள சிக்கலை எதிர்த்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
“ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, ராகுல்காந்தி பிரதமர் மோடி தமிழ் சினிமாவை அடக்குவதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பெருமையையும் அவமதிக்க வேண்டாம் என்று எச்சரித்திருந்தார். ஆனால் நரேந்திர மோடி #ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழை வேண்டுமென்றே நிறுத்தி அதன் வெளியீட்டைத் தடுப்பதன் மூலம் மீண்டும் தமிழ் மக்களை அவமதிக்கிறார்.”
கிரிஷ் ராயா சோடங்கர்
கோவா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட உறுப்பினருமான கிரிஷ் ராயா சோடங்கர் ஜனநாயகன் படத்திற்கு எதிராக எழுந்துள்ள சிக்கலை எதிர்த்து தனது கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
“நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் தொடர்பான சர்ச்சைகள் அரசியல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்த கவலையை கிளப்பியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தாலும், ஒரு கலைஞரின் படைப்புகளை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அரசியல் ஆதாயத்திற்காக சினிமாக்களை தணிக்கை செய்வதை தமிழக மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அரசியல் சண்டைகளில் கலையையும் பொழுது போக்கையும் சிப்பாய்களாகப் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அநீதி இழைக்கும் அதிகாரிகளுக்கு உங்கள் அழுத்தம் காரணமாக விஜய்யின் படம் தாமதமாகிறது. அரசியலை கலைக்கு அப்பாற்பட்டு ஆக்கச் சுதந்திரத்தை மதிப்போம்.
மோடி ஜி, உங்கள் 56 அங்குல மார்பு உரிமையை அரசியல்வாதி விஜய் அல்ல நடிகர் விஜய் என்று எடுத்து நிரூபியுங்கள்.உங்கள் மிரட்டல் அரசியல் தமிழகத்தில் வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஜோதிமணி
காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி ஜனநாயகன் படத்திற்கு எதிராக எழுந்துள்ள சிக்கலை எதிர்த்து தனது கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
“ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல். நமது அரசியல் சார்பு,விருப்பு வெறுப்புகளைத் தாண்டி கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இதைக் கண்டிக்க வேண்டும். ஒரு திரைப்படம் என்பது பல கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் கடின உழைப்பில் உருவாகிறது.
அதை இப்படி முடக்க நினைப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது. அதுவும் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்படுவது இன்னும் ஆபத்தானது. அமலாக்கத்துறை,சிபிஐ ,வருமான வரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது. இதை நாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
நான் தணிக்கை குழு உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதன் செயல்பாடுகளை நான் நன்கு அறிவேன்.என்னளவில் இந்த தொழில்நுட்ப யுகத்தில் தணிக்கை வாரியம் என்பது காலாவதியாகிப் போன ஒரு அமைப்பு. ஒரு திரைப்படத்தை ஏற்பதும்,மறுப்பதும் மக்கள் கையில் தான் இருக்கிறது.
ஒரு திரைப்படத்தை நாம் தணிக்கை செய்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான தணிக்கை செய்யப்படாத வீடியோக்கள் ,காட்சிகள் தொலைக்காட்சி, யு டியூப்,சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிக்கொண்டிருக்கிறது. இதை பல கோடிப்பேர் பார்க்கின்றனர். இந்தச் சூழலில் திரைப்படத்தை மட்டும் தணிக்கை செய்வதால் எவ்வித மாற்றமும் ஏற்பட போவதில்லை என்பதே நிதர்சனம்.
பெண்களை ஆபாசமாகப் பேசுவது,சித்தரிப்பது,இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது தணிக்கை விதிகளின் படி தவறானது. ஆனால் இவை இல்லாமல் வெளிவருகிற படங்கள் மிகவும் குறைவு. தணிக்கை வாரியம் இம்மாதிரியான விசயங்களில் பெரும்பாலும் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. சான்றிதழை மறுப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே தணிக்கை வாரியம் என்பது கலைக்கப்பட வேண்டியது. அதுவரை அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
மாணிக்கம் தாகூர்
காங்கரஸ் பாராளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர் ஜனநாயகன் படத்திற்கு எதிராக எழுந்துள்ள சிக்கலை எதிர்த்து தனது கருத்தை வெளியிப்படுத்தியுள்ளார். அதில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சார திரைப்படங்கள் ஈர்க்கப்படாமலும், நம்பகத்தன்மை இல்லாமலும், பொது நலன் இல்லாமலும் இருக்கும்போது, மோடி-ஷா ஆட்சி நம்பிக்கையுடன் அல்ல, கட்டுப்பாட்டோடு பதிலளிக்கிறது. இப்போது திரைப்படத் துறை நெருக்கடியில் உள்ளது.
பிரிவு 19(1)(a) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்கிறது. ஆனால் தகவல் தொழில்நுட்ப அமைச்சரின்
கீழ் இந்த உரிமை சட்டத்தின் மூலம் அல்ல, பயத்தின் மூலம் முறையாக பலவீனப்படுத்தப்படுகிறது. ED, CBI, IT - எதிர்ப்புகளை மௌனமாக்குவதற்கான முன்னணி உறுப்புகளாக மாற்றப்படுகிறது.
இப்போது சென்சார் வாரியம் கூட சினிமா மற்றும் கருத்துக்களை கட்டுப்படுத்த ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாகக் குறைக்கப்படுகின்றன, அதே நேரத்தில் பாஜக-ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் "கலாச்சாரம்" என்று கடத்தப்படுகிறது.சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை. அதற்கு அரசியலமைப்பு பாதுகாப்பு தேவை.கலை அதிகாரத்தின் முன் மண்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது.” என தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.