Hussain Shah's heroic death Admin
இந்தியா

“மதத்தை தாண்டி வாழும் மனித நேயம்” - பஹல்காம் தாக்குதலில் மக்களை காத்து.. உயிரை விட்ட..! சூப்பர் ஹீரோ உசேன் ஷா!

உள்ளூர் வாசியை, அதிலும் ஒரு இஸ்லாமியரை கொன்றதற்கான கரணம் என்ன?

Mahalakshmi Somasundaram

உலகையே உலுக்கிய சம்பவம் தான் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல். இதில் மொத்தம் 26 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் கதறி கண்ணீர் விடும் காணொளிகள் வெளியாகி காண்போரை கதி கலங்கச் செய்தது.

இந்த சம்பவத்தால் நாடே சோகத்திலும் கோபத்திலும் உள்ளது. இதில் ஒரு முக்கிய தகவலாக உள்ளூர் வாசியான இஸ்லாமியர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.

சுற்றுலா பயணிகளை மட்டுமே குறி வைத்து தாக்கிய தீவிரவாதிகள், உள்ளூர் வாசியை, அதிலும் ஒரு இஸ்லாமியரை கொன்றதற்கான கரணம் என்ன? அப்படி அவர் என்ன செய்தார்? என்பதை பற்றி இக்கட்டுரையில் தெளிவாக காண்போம்.

செட் அடில் உசேன்ஷா

காஷ்மீரில் உள்ள சுற்றுலா தளமான பஹல்காம் பகுதியில் வசித்து வருபவர் தான் இந்த உசேன்ஷா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் சுற்றுலா பயணிகளை குதிரையில் சவாரி அழைத்து செல்லும் வேலையை செய்துள்ளார்.

இதுபோலத்தான் கடந்த செவ்வாய்க்கிழமையும் சுற்றுலா பயணிகளை குதிரையில் அழைத்து சென்றுள்ளார். மதியம் 3 மணி அளவில் பயங்கரவாத தாக்குதலை கேள்விப்பட்ட உஸ்ஸென்ஷாவின் தந்தை, அவருக்கு போன் செய்துள்ளார். போன் ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது.

இதனால் பயந்த பெற்றோர்கள், காவல் நிலையத்திற்கு சென்று உசேன்ஷாவை பற்றி சொல்ல, போலீசார் தகவல்களை சேகரித்து, பயங்கரவாத தாக்குதலில் அவர் இறந்துவிட்டார் எனக் கூறியுள்ளனர்.

நடந்தது என்ன

உசேன்ஷா சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் போது தீவிரவாதிகள் அங்கிருந்த சுற்றுலா பயணிகளை தாக்கியுள்ளனர். இதை பார்த்த அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடிக்கொண்டிருந்தபோது, சுற்றுலா பயணிகளை காப்பாற்ற உசேன்ஷா அங்கிருந்த தீவிரவாதிகளில் ஒருவரை எதிர்த்து அவரிடமிருந்த துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் உசேன்ஷாவை தாக்கி, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். சுற்றுலா பயணிகளை காப்பாற்றுவதற்காக தீவிரவாதிகளை எதிர்த்து தன் உயிரை தியாகம் செய்துள்ளார்.

முதல்வர் இரங்கல்

உசேன்ஷாவை பற்றி அறிந்த காஷ்மீர் முதல்வர், அவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு உசேனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உசேனின் குடுபத்திற்கு தேவையான உதவிகளை செய்து, அவரின் குடும்பத்திற்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் ‘பிறரின் உயிரை காப்பாற்ற தனது உயிரை கொடுத்து வீர மரணமடைந்த உசேனை நினைத்து பெருமைப்படுவதாகவும்’ கூறியிருக்கிறார் .

குவியும் பாராட்டுக்கள்

சுற்றுலா பயணிகளின் உயிரை காப்பாற்ற, தன் உயிரை துச்சமாக நினைத்து, தீவிரவாதிகளை எதிர்த்த, உசேன்ஷாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மதத்தையும் மொழியையும் கடந்து மனித நேயம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது, உசேன்ஷாவின் இந்த செயல்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்