பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறை வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும், அதனால் நாட்டிற்கு கிடைத்த பொருளாதாரப் பயன்கள் குறித்தும் எப்போதும் அரசியல் அரங்கில் கடுமையான காரசார விவாதங்கள் நடப்பது வழக்கம்.
நாட்டின் பணத்தைச் விரயம் செய்து பிரதமர் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்கிறார் என்ற குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, இத்தகைய உயர்மட்டப் பயணங்களால்தான் நாட்டிற்குப் பன்னாட்டு முதலீடுகள் குவிகின்றன என்ற ஆதரவுக் குரல்களும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன.
ராஜ்யசபாவில் எம்பிக்கள் சஞ்சய் சிங் மற்றும் டாக்டர் வி. சிவதாசன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த வெளியுறவுத் துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா, நடப்பாண்டில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக அரசு ரூ. 74.5 கோடி செலவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதைச் சேர்த்து 2021 முதல் இன்றுவரை சுமார் 550 கோடி ரூபாய் பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவாகியிருக்கிறது.
இதோடு, ஏப்ரல் 2021 முதல் டிசம்பர் 2025 வரையிலான காலத்தில் இந்தியாவிற்கு 381.8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நேரடி அந்நிய முதலீடு (FDI) கிடைத்துள்ளதாகவும் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு பயணத்திலும் எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டது எனக் கூறப்படவில்லை என்றாலும் பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் தொடர்பு இருப்பதாக வாதாடப்படுகிறது.
இதனை காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிட்டு, அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மேற்கொண்ட அமெரிக்கா (ரூ. 10.74 கோடி - 2011), ரஷ்யா (ரூ. 9.96 கோடி - 2013), பிரான்ஸ் (ரூ. 8.33 கோடி - 2011) மற்றும் ஜெர்மனி (ரூ. 6.02 கோடி - 2013) பயணங்களின் செலவுகளையும் வெளியுறவுத் துறை முன்வைத்துள்ளது.
பிரதமரின் உயர்மட்டப் பயணங்கள், இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்கான வழிமுறை என்பதை மறுக்க முடியாது என்றும், அத்தகைய பயணங்களின் போது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் தொழில்நுட்பம், புத்தாக்கம், வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் விநியோகச் சங்கிலி மீள்தன்மை உள்ளிட்ட துறைகளில் கூட்டாண்மைகளை ஆழப்படுத்த உதவியுள்ளன என்றும் அரசு தெரிவிக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.