உத்தரப்பிரதேச அரசியல் களத்தில் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்த சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் மறைந்த முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ், இன்று அதிகாலை லக்னோவில் காலமானார். அவருக்கு வயது 38. இன்று புதன்கிழமை காலை 6.15 மணியளவில் அவரது குடும்பத்தினர் அவரை லக்னோவில் உள்ள சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் ஒன்றுவிட்ட தம்பியான இவரது திடீர் மரணம், யாதவ் குடும்பத்தினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதீக் யாதவ் மரணமடைந்த சமயத்தில் அவரது மனைவி அபர்ணா யாதவ் அங்கு இல்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதீக் யாதவின் மரணத்திற்கான காரணம் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. அவரது உடலில் வெளிப்படையாக எந்தவொரு காயங்களும் இல்லை என்று ஆரம்பக்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தை விலக்குவதற்காக, லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் (KGMU) மருத்துவர்கள் குழு ஒன்று பிரேதப் பரிசோதனை செய்ய உள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் இது இயற்கையான மரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது தெரியவரும். தற்போது அவரது உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் உறவினர்கள் அங்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இவர் அரசியலில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், உத்தரப்பிரதேசத்தின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவராகவே பார்க்கப்பட்டார். பிரதீக் யாதவ் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ (MBA) பட்டம் பெற்றவர். இவர் ஒரு வெற்றிகரமான ரியல் எஸ்டேட் தொழிலதிபராகவும், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவராகவும் திகழ்ந்தார். கடந்த 2016-ஆம் ஆண்டு லக்னோவின் முதல் நவீன ஜிம்மை இவர்தான் தொடங்கி வைத்தார். அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், ஒரு தொழில்முனைவோராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவர் அதிகம் விரும்பினார்.
உடல் அழகைப் பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட பிரதீக் யாதவ், கடந்த 2012-ஆம் ஆண்டு சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடிபில்டிங் இணையதளம் ஒன்றில் International transformation of the month என்ற விருதைப் பெற்றார். சிறுவயதில் சற்று பருமனாக இருந்த இவர், தனது தந்தை முலாயம் சிங் யாதவ் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த ஊக்கமூட்டும் பேச்சின் காரணமாகவே தனது உடலை இப்படி மாற்றியதாகத் பெருமையுடன் கூறி வந்தார். விளையாட்டு மற்றும் ஆரோக்கியம் மட்டுமின்றி, விலங்குகளின் நலன் மீதும் அவருக்கு மிகுந்த அக்கறை இருந்தது. விலங்குகளைப் பாதுகாப்பதற்கும், அவற்றைப் பராமரிப்பதற்கும் பல சமூக முயற்சிகளுக்கு அவர் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தார்.
இருப்பினும், பிரதீக் யாதவின் திருமண வாழ்க்கை அவ்வளவு சுமூகமாக இருக்கவில்லை என்பதுதான் சோகமான உண்மை. அவர் கடந்த 2011-ஆம் ஆண்டு அபர்ணா யாதவை மணந்து கொண்டார். அபர்ணா யாதவ் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் ஒரு முக்கியமான தலைவராக உள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், கடந்த ஜனவரி மாதம் பிரதீக் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெறப்போவதாக அறிவித்திருந்தார். தனது மனைவி அபர்ணா யாதவ் குடும்ப உறவுகளைச் சிதைத்துவிட்டதாகவும், அவர் புகழ் மற்றும் அதிகாரத்தின் மீது மட்டுமே ஆசைப்படுகிறார் என்றும் அதில் மிகக் கடுமையாகச் சாடியிருந்தார்.
அந்த பதிவில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "சுயநலமான இந்த பெண்ணிடமிருந்து நான் விரைவில் விவாகரத்து பெறப்போகிறேன். அவர் எனது குடும்ப பந்தங்களை அழித்துவிட்டார். அவருக்குத் தேவையெல்லாம் புகழும் செல்வாக்கும் மட்டுமே" என்று உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருந்தார். மேலும், தான் மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் தனது மனைவி தனக்கு ஆதரவாக இருக்கவில்லை என்றும், அவர் மீது அக்கறை காட்டவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவாகரத்து அறிவிப்பு அப்போது உத்தரப்பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது, ஆனால் அதன் பிறகு அவர்கள் சட்ட ரீதியாகப் பிரிந்தார்களா என்பது குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
முலாயம் சிங் யாதவின் மறைவிற்குப் பிறகு, யாதவ் குடும்பத்திற்குள் நிலவி வந்த அரசியல் மற்றும் குடும்பப் பூசல்கள் அவ்வப்போது செய்திகளில் இடம்பெற்று வந்தன. குறிப்பாக அகிலேஷ் யாதவுக்கும், பிரதீக் யாதவின் மனைவியான அபர்ணா யாதவுக்கும் இடையே இருந்த அரசியல் கருத்து வேறுபாடுகள் ஊருக்கே தெரிந்த விஷயம். இப்படிப்பட்ட ஒரு சிக்கலான குடும்பச் சூழலில், பிரதீக் யாதவ் இவ்வளவு இளம் வயதில் உயிரிழந்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவரது மரணம் தற்செயலானதா அல்லது மன அழுத்தம் காரணமாக ஏற்பட்டதா என்பது குறித்துப் பல யூகங்கள் சமூக வலைதளங்களில் உலவி வருகின்றன.
பிரதீக் யாதவின் மரணச் செய்தி கேட்டவுடன், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர். லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாதவ் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த பேரிழப்பு அந்த குடும்பத்தை மீண்டும் ஒன்று சேர்க்குமா அல்லது மேலும் விரிசல்களை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.