``ஊழல் நடவடிக்கை வேண்டும்.." ராஜ்மோகன் மீது பிடியை இறுக்கும் திமுக.. ஆளுநருக்கு பறந்த கடிதம்! 
தமிழ்நாடு

``ஊழல் நடவடிக்கை வேண்டும்.." ராஜ்மோகன் மீது பிடியை இறுக்கும் திமுக.. ஆளுநருக்கு பறந்த கடிதம்!

இந்த மனுவை தகுதிவாய்ந்த அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சுதந்திரமான பரிசீலனையை உறுதி செய்ய வேண்டும் மற்றும் இவ்விவகாரத்தில் முடிவெடுக்கும் எந்தவொரு நிலையிலிருந்தும் அமைச்சரை விலக்கி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Antony Ajay R

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்மோகன் பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை, தொல்லியல் துறை, திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் எழுதுபொருள்-அச்சுத் துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

கடந்த 1.11.2026 அன்று தமிழ்நாடு நாளை முன்னிட்டு, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்ற தலைவர் பொறுப்பிற்கு ரூ. 5 கோடி கொடுக்க ஒருவர் முன்வந்ததாகவும், அவரை தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் லயோலா மணி தன்னிடம் அழைத்து வந்ததாகவும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. சார்பில் சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான இ. பரந்தாமன் 2.11.2026 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அவர்களுக்கு புகார் மனு அளித்திருந்தார்.

அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏதுவாக லஞ்ச ஒழிப்பு சட்டம் 1988ன்படி வழக்குத் தொடர அனுமதி வேண்டி இன்று (23.11.2026) தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தலைமை செயலருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு எதிராக, ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் பிரிவுகள் 8 மற்றும் 12 (மற்றும் மாற்றுப் பிரிவாக பிரிவு 7A) ஆகியவற்றின் கீழான குற்றங்களை - பாரதிய நியாய சன்ஹிதா, 2023-ன் 45, 46, 49 மற்றும் 61(2) ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடர வேண்டும் எனவும் அவற்றை விசாரிப்பதற்கும் புலனாய்வு செய்வதற்கும் ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் பிரிவு 17A-ன் கீழ் முன் அனுமதி கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மேலும், இந்த மனுவை தகுதிவாய்ந்த அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சுதந்திரமான பரிசீலனையை உறுதி செய்ய வேண்டும் மற்றும் இவ்விவகாரத்தில் முடிவெடுக்கும் எந்தவொரு நிலையிலிருந்தும் அமைச்சரை விலக்கி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் பரந்தாமன், "நான் ஒரு வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவேன். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்கு நியமனம் செய்வது தொடர்பாக ரூ.5 கோடி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் பகிரங்கமாகத் தெரிவித்த கருத்துகளால் வெளிப்பட்டுள்ள தீவிரமான குற்றச்சாட்டுகள் மீது சுதந்திரமான விசாரணை மற்றும் புலனாய்வு நடத்துவதற்குத் தகுந்த தலையீட்டையும், ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் (இனி "ஊழல் தடுப்புச் சட்டம்" எனக் குறிப்பிடப்படும்) பிரிவு 17A-ன் கீழ் முன் அனுமதியையும் கோரி, பொது நலன் கருதி இந்த மனுவை ஆளுநர் அவர்களின் முன்பாகப் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்." என எழுதியுள்ளார்.

மேலும், "ரூ.5 கோடி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் முன்மொழிவு, அந்த முன்மொழிவைச் செய்த நபரின் அடையாளம், இடைத்தரகரின் பங்கு மற்றும் வேறு எந்த நபர்களின் ஈடுபாடு ஆகியவை குறித்து, சட்டத்திற்கு முற்றிலும் இணங்க நடுநிலையான புலனாய்வு நடத்தத் தேவையான மேலதிக உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் அல்லது தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

"ஆளுநர் அவர்கள் தலையிட்டு, சட்டப்பூர்வ மற்றும் அரசியலமைப்புத் தேவைகளுக்கு ஏற்ப இவ்விவகாரம் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் கையாளப்படுவதை உறுதி செய்வார்கள் என்று நம்புகிறேன்." என்றும் எழுதியிருக்கிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்