நமது மாலைமுரசு தொலைக்காட்சியில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி நடைபெற்ற நெற்றிக்கண் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா, “அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்குமா?” என்று நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், “எடப்பாடிக்கு வாக்கு வங்கி இல்லை. அவர் எட்டு தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளார். நான்கு வருடங்கள் கடன் வாங்கித்தான் ஆட்சி நடத்தினார் என்பது எடப்பாடியின் வரலாறு. முன்னாள் முதலமைச்சர் அம்மாவுக்கு போட்ட ஓட்டை வைத்து ஆட்சி நடத்தியவர், மக்கள் மன்றத்தில் பல தேர்தல்களில் நிராகரிக்கப்பட்டவர்.
இதை எடப்பாடி உணர்ந்ததால்தான், இன்று மக்கள் மத்தியில் ஓட்டுகளை சேகரித்தால் தோல்வியைத்தான் சந்திப்போம் என்பதால், திமுகவைத் தவிர அனைவரையும் கூட்டணிக்கு அழைத்துக்கொண்டிருக்கிறார். பாஜகவை கொள்கை ரீதியான எதிரி என்று தவெகவின் விஜய் கூறும்போது, அவர்களை கூட்டணியில் வைத்துக்கொண்டு தவெகவை கூட்டணிக்கு அழைப்பது சரியா? நம்பிச் சென்றவர்களை பாதாளக் குழியில் தள்ளும் பாஜகவை நம்பி கட்சிகளைக் கூட்டணிக்கு அழைப்பது எந்த விதத்தில் சாத்தியமாகும்?” என்றார்.
சேலத்தில் நடந்த மாநில பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனன், “அதிமுக மொத்தமாக காலியாகிவிட்டது. அதிமுக உறுப்பினர்கள் தவெகவில் வந்து சேர்ந்துள்ளனர். அதிமுகவின் உறுப்பினர்களின் மனநிலை திமுகவுக்கு எதிரானது. எனவே, அதிமுக தலைமையில் நம்பிக்கை இல்லாதவர்கள் அடுத்து யோசிக்கக்கூடியது தவெகவைத்தான். அன்வராஜா திமுகவுக்கு சென்றால், மற்ற தொண்டர்களும் திமுகவுக்குத்தான் செல்ல வேண்டும் என்று இல்லை. அதிமுகவுடன் கூட்டணி இல்லை. தமிழக அரசியலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சமூக நீதி பேசிவிட்டு கோவில்களை மூடி வைத்திருக்கிறார்கள்.
பட்டியலின மக்களுக்கு எதிரான கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். குடிநீரில் மனிதக் கழிவுகளைக் கலந்திருக்கிறார்கள்,” என்று பேசினார். இதனால் கோபமடைந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த திமுக ஆதரவாளரும் பத்திரிகையாளருமான இந்திரகுமார் தேரடி, “கோவிலை எப்போதோ திறந்துவிட்டார்கள். களத்திற்கு நீங்கள் சென்றீர்களா, அல்லது விஜய் சென்றாரா? உங்களுக்கு இதைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? தவெக சார்பாக அந்தத் தொகுதியில் யாரும் போட்டியிடப் போவதில்லை. அப்படியிருக்கும்போது, விஜய் ஏன் நேரில் செல்லவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
இதனை எதிர்த்து, பதிலளிக்கும் விதமாகவும் மீண்டும் பேசிய முஸ்தபா, “அந்த தொகுதி மக்கள் உங்களுக்குத்தான் ஓட்டு போட்டுள்ளனர். ஆகவே, நீங்கள்தான் சென்று பார்க்க வேண்டும். வேங்கைவயலில் மக்கள் இல்லையா? அவர்கள் தண்ணீர் குடிக்க மாட்டார்களா? நிலைமையைப் பேசுவதை விட்டுவிட்டு, ஏன் இப்படி கூஜா தூக்குகிறீர்கள்?” என்று கேட்டார். இதற்கு மீண்டும் பதிலளித்த இந்திரகுமார் தேரடி, “நீங்கள் எதைத் தலையில் தூக்கி வந்துள்ளீர்கள்? உங்கள் கட்சியில் இருந்த பெண்ணே உங்கள் மீது வன்கொடுமைப் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் மீதான தாக்குதலை அடக்க உங்களுக்கு வக்கு இல்லை. சமூக ஊடகங்கள் முழுவதும் ‘TVK abusers’ என்று பரவுகிறது. அதை மாற்றுங்கள்,” என்று தெரிவித்தார்.
இந்த விவாத நிகழ்ச்சிக்கு பிறகு, இந்த வீடியோ வைரலான நிலையில் தவெக உறுப்பினர்களும் மற்றும் விஜய் ரசிகர்கள் சிலரும் இந்திரகுமாரை முஸ்லிம் விரோதி என குறிப்பிட்டு, பல பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனை கவனித்த இந்திரகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில்,
“சனாதன எதிர்ப்பு பெரியாரிய மூளையாக இருந்தால், ‘தலையில் யாருக்காக யார் எதைத் தூக்கி வந்தார்’ என்று ராமாயணத்தின் பக்கம் போயிருக்கும். கொஞ்சம் அடையாள அரசியல் கண்ணை மறைக்காமல் இருந்திருந்தால், மண்டைக்குள் இருக்கும் மூளை நினைவுக்கு வந்திருக்கும். நீங்கள் எதற்காக முஸ்தபாவை வைத்திருக்கிறீர்களோ, அதுதானே உங்களுக்கு நினைவு வரும்?
ஆனால், அதே மாலைமுரசு அரங்கில் இஸ்லாமியர்களைப் பற்றி வலதுசாரி பேசிய பேச்சுக்காக விவாதத்தையே நிறுத்த வேண்டும் என்று குரல் எழுப்பியவன் இந்த இந்திரகுமார் தேரடி. ஒரு விவாதத்தில் ‘இஸ்லாமியர்களை ஓட்டு ஜிகாத்’ என்று ஒரு பாஜக ஆள் சொன்னதற்காக உச்சகட்டக் குரல் எழுப்பிக் கண்டித்தபிறகு, அந்த விவாத நிகழ்ச்சிக்கே அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டவன் இந்த இந்திரகுமார் தேரடி என்பதை மக்கள் அறிவார்கள்.
உங்களைப் போல ஓட்டுக்காக இஸ்லாமிய ஆதரவு பேசி அந்த மக்களை ஏமாற்ற வந்தவன் அல்ல நான். ஓட்டுக்காக தொப்பி அணிந்தவரை அடையாளம் காட்டுபவன் நான் அல்ல. வரலாற்று உறவையும் மானுடப் பண்பையும் காத்து நிற்க உழைப்பவன் நான்,” என்று பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.