JEM Veeramani latest news 
தமிழ்நாடு

"விட்டா ஓடிடுவாங்க".. ஜெம் வீரமணி வழக்கில் நீதிமன்றத்தில் போலீஸ் வைத்த வேண்டுகோள்!

ஜாமீனில் விடுதலை செய்தால் சாட்சிகளை கலைக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை அச்சுறுத்தவும் வாய்ப்புள்ளது

Vinvizhi Leninton

ஜெம் வீரமணி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்மனுக்கு ஜாமீன் வழங்குவதற்கு காவல் துறை ஆட்சபனை தெரிவித்துள்ளது.

கிரானைட் தொழிலதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான 84 வயதான வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கானது தற்போது மாநிலம் முழுவதும் மற்றுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இந்த வழக்கு பெருமளவில் பேசு பொருளாகவும் மாறியுள்ளது. இந்த வழக்கில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரின் தலையீடு உள்ளதாக விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

இந்த வழக்கில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் வீடியோ ஆதாரம் கிடைத்ததை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு விபச்சாரத் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கின் ஆரம்பகட்டத்தில் வீடியோவில் இருந்த சிறுமியின் அடையாளத்தை சரியாக பார்க்கமுடியாததால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டி அறிக்கை தாக்கல் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

2025-ம் ஆண்டு அக்டோபரில் இந்த விவாகரமானது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு 'பென்டிரைவ்' வீடியோவால் தொடங்கப்பட்ட இந்த வழக்கில், வீடியோவில் இருந்த சிறுமி சரியாக தெரியவில்லை என்று கூறியதோடு, வீடியோ பழையதாக இருந்தது, 'அசல் காட்சிகள்' கிடைக்கவில்லை, டிஜிட்டல் தேர்வு முறையின் மூலம் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை, சம்பவ இடத்துடன் தொடர்புடையவர்களிடமிருந்தும் உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை என்பன உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்த போலீசார் வழக்கில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்று அறிக்கையை சமர்ப்பித்தனர்.

இதற்கிடையே, சிறப்பு போக்சோ நீதிமன்றம் காவல்துறை சார்பில் சமர்ப்பிக்கபட்ட அறிக்கையை நிராகரித்து, வழக்கில் மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இங்கிருந்துதான் இந்த வழக்கு பல திருப்பங்களை சந்தித்தது என்று கூறலாம். மேலும், இந்த வழக்கில் இருந்து தப்பிக்க கடந்த காலங்களில் காவல்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.70 கோடி செட்டில்மென்ட் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் பல வெளியானது.

மேலும், இந்த கொடூர சம்பவமானது 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்துள்ளது என்பது மாநிலமெங்கும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி, போலீஸ் விசாரணையில், போயஸ் கார்டன் பகுதியில் மாதம் ரூ.2 லட்சம் வாடகையில் பங்களா ஒன்றை எடுத்து, அங்கு தனது தொழில் கூட்டாளிகளுக்காக சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை அழைத்துச் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், அவர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், தனது நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய சாந்தி, மகேந்திரசிம்மன் மற்றும் பிரசாந்த் ஆகியோர் மூலமாக சிறுமிகளை அழைத்து வந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

குறிப்பாக இவர்கள் குறித்த குழந்தைகள் ஆதரவற்ற குழந்தைகள், ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்குவதாகக் கூறி அறக்கட்டளை மற்றும் ஆசிரமங்கள் நடத்தப்பட்டதாகவும், அதன் மூலம் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் உள்ளிட்டோர் அணுகப்பட்டதாகவும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அவ்வாறு பேசி அழைத்து வரப்பட்டவர்களுக்கு ஆடைகள், செலவுக்குப் பணம், செல்போன்கள் உள்ளிட்டவற்றை வழங்கியதுடன், அவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி கல்விக்கான செலவுகளை வீரமணி ஏற்றுக்கொள்வார் எனக் கூறி, போயஸ் கார்டன் பங்களாவுக்கு அழைத்துச் சென்றதாகவும் போலீசார் விசாரணையில் கூறப்பட்டது.

இந்நிலையில், காவல்துறையால் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணியிடம் வேலை செய்யும் மகேந்திர சிம்மன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோரிடம் 3 நாள் விசாரணை நடத்த காவல்துறையினர் அவகாசம் கேட்டிருந்தனர். மேலும், அந்த விசாரணையில், அவர்களிடம் 200க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் பல விவரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகிய இருவரும் ஏற்கனவே ஜாமீன் கேட்டு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களுக்கு பதிலளித்து, காவல் துறை தரப்பில் இருந்து தற்போது பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த பதில் மனுவில், வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிக்க சாந்தி, வீரமணியிடம் இருந்து 24 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை தடயவியல் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது என்றும் இவர்களை (சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன்) ஜாமீனில் விடுதலை செய்தால் அவர்கள் சாட்சிகளை கலைக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை அச்சுறுத்தவும் வாய்ப்புள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதால் இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என காவல்துறையின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த இருவரின் ஜாமீன் மனுக்களும், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், வரும் செப்டம்பர் 29-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்