Vanni Arasu X post 
தமிழ்நாடு

"திமுகவுக்கு வெட்கமில்லை.." - அமைச்சர் வன்னி அரசு! சீமானின் நன்றி பதிவால் வெடித்த வார்த்தைப்போர்.. திமுகவை குறிவைப்பதன் பின்னணி என்ன?

இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை என்று கட்டமாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

Vinvizhi Leninton

தாராபுரத்தில் இடைத்தேர்தலில் நாதக வேட்பாளராக களமிறங்கிய கார்த்திகா மீதான தமிழக வெற்றிக் கழகத்தின் கைது நடவடிக்கையை எதிர்த்து ஆதரவு குரல் எழுப்பிய அனைவரும் நன்றி கூறிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானை காட்டமாக விமர்சித்து சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தாராபுரத்தில் இடைத்தேர்தலில் நாதக வேட்பாளராக களமிறங்கிய கார்த்திகா முதல்வர் வரும் பாதையில் மறியல் செய்ததாக கூறி அவரை மீது இடைத்தேர்தல் சமயத்தில் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கான கைது நடவடிக்கை அக்டோபர் 20ம் தேதி நடந்தது. அவரது கைதிற்கு சீமான் முதல்வரை எச்சரித்து ஒரு காட்டமான பதிவினை பதிவிட்டார். அவரை தொடர்ந்து, பல அரசியல் கட்சி தலைவர்கள் அவரது கைதிற்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். அதற்கு தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டார்.

அதில் அவர், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு பொய் வழக்குப் புனைந்து, தாராபுரம் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்ட அன்புத்தங்கை கார்த்திகா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைது செய்துள்ள தவெக அரசின் எதேச்சதிகாரப்போக்கைக் கண்டித்து ஆதரவுக்குரல் எழுப்பிய, திமுகவின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மதிப்பிற்குரிய ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அதிமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான மதிப்பிற்குரிய ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும்,

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பேராசான் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும், திராவிடர் கழகத்தின் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா கி.வீரமணி அவர்களுக்கும், திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான அன்புத்தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், பாஜகவின் மாநிலத்தலைவர் அன்பு மாமா நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும், பாமகவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா அன்புமணி இராமதாசு அவர்களுக்கும்,

தேமுதிகவின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய அண்ணி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அமமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா டிடிவி.தினகரன் அவர்களுக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா மு.வீரபாண்டியன் அவர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவருமான என் அன்பு இரத்தம் த.வேல்முருகன் அவர்களுக்கும், திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய அம்மையார் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்களுக்கும், முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முன்னாள் மாநிலத்தலைவருமான மதிப்பிற்குரிய அம்மா தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கும்,

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களுக்கும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி தமிமுன் அன்சாரி அவர்களுக்கும், 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலை அவர்களுக்கும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலப் பொறுப்புத் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா அச.உமர் பாரூக் அவர்களுக்கும், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் அன்பிற்கினிய அண்ணன் தடா ரஹீம் அவர்களுக்கும், கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் அன்புத்தம்பி தனியரசு அவர்களுக்கும்,

திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பெருமதிப்பிற்குரிய அண்ணி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கும், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் மதிப்பிற்குரிய சகோதரர் இன்பதுரை அவர்களுக்கும், காங்கிரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புத்தங்கை ஜோதிமணி சென்னிமலை அவர்களுக்கும், சமூகச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி எவிடென்ஸ் கதிர் அவர்களுக்கும், தமிழர் தேசம் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி கே.கே.செல்வக்குமார் அவர்களுக்கும், பாஜகவின் மாநிலப் பொருளாளர் அன்புச்சகோதரர் எஸ்.ஆர். சேகர் அவர்களுக்கும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்புத்தம்பி பனையூர் பாபு அவர்களுக்கும், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் அன்பு அண்ணன் அ.வினோத் அவர்களுக்கும்,

தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் அன்புத்தம்பி திருமாறன் ஜி அவர்களுக்கும், புரட்சித் தமிழகம் கட்சியின் நிறுவனர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டளர் அண்ணன் அ.வியனரசு அவர்களுக்கும், கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சி.ஆறுமுகம் அவர்களுக்கும், வீரகுல அமரன் இயக்கத்தின் தலைவர் சகோதரர் கி. இரா.முருகன் அவர்களுக்கும், உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சனநாயக இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும் நன்றியும்!. தவறான ஒரு செயல் நடக்கும் பொழுது அதை எல்லோரும் கட்சிகளை எல்லாம் கடந்து ஒன்றாக முன்னின்று கண்டித்து குரல் எழுப்புவது சனநாயகம் இன்னும் சாகவில்லை என்ற நம்பிக்கையைத் தருகிறது.

மக்களாட்சியின் மாண்புகளைத் காலில் போட்டு மிதித்து, அதிகார மமதையுடன் அடக்குமுறைகளை ஏவும் ஆளும் தவெக அரசின் அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக சனநாயக ஆற்றல்களின் உரத்த குரல் ஒன்றுபட்டு ஓங்கி ஒலிக்கட்டும்!. அடக்குமுறை வீழட்டும்! சனநாயகம் வெல்லட்டும்! என்ற பதிவினை பதிவிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தனது அதிகாரப்பூர்வ X தளத்தில், ஆரிய கடப்பாறை கொண்டு திராவிடக்கோட்டையை இடிப்பேன் என்று சொன்னவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்கள். இந்தியாவில் நடக்கிற யுத்தமே ஆரிய- திராவிட யுத்தம் தான் என வரலாற்று ஆய்வுகளோடு அம்பலப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர். அதையே தமிழ்நாட்டில் பரப்புரை செய்தவர் தந்தை பெரியார். அப்படிப்பட்ட பெரியாரையே ஒரு மண்ணு என இழிவுபடுத்தியவர் திரு.சீமான். திராவிடக்கோட்பாட்டையும் சனாதன எதிர்ப்பையும் அரசியல் படுத்தியவர் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும்.

அப்படிப்பட்ட கலைஞரை தெலுங்கன் என்றும் திருட்டு திமுக என்றும் மிக கேவலமாக,அநாகரீகமாக மேடைகளில் பிதற்றியவர் திரு.சீமான். அதுமட்டுமல்ல, கலைஞர் அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால், மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை நிராகரித்த பார்ப்பனிய அடிமை தான் திரு.சீமான்.

இப்படி கோட்பாட்டு வழியிலும் தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம். விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் ஏற்கும். பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது. இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை என்று கட்டமாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

நாதக-வை சேர்ந்த கார்த்திகாவின் கைதிற்கு கண்டனம் தெரிவித்தும், அவரது கைதினை கண்டித்தும் பதிவிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி சொல்லி பதிவிட்ட சீமானின் பதிவிற்கு அவரை மட்டுமின்றி திமுகவையும் சாடி பதிவிட்டுள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.