கூட்டணி பலத்துடன் தவெக; ரிவெஞ்ச் எடுக்குமா அதிமுக? பரபரக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! 
தமிழ்நாடு

கூட்டணி பலத்துடன் தவெக; ரிவெஞ்ச் எடுக்குமா அதிமுக? பரபரக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

என்னதான் தாராபுரத்தில் வெறும் 32.2% வாக்குகளும், மதுராந்தகத்தில் 3-வது இடமும் பிடித்திருந்தாலும், வெற்றி பெறுவதில் முனைப்புடன் இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

மாலை முரசு செய்தி குழு

தமிழகத்தில் இடைத்தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதல் ஆளாக திமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. தவெக கூட்டணியின் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளனர். ஏற்கெனவே வெற்றி பெற்ற இடங்களைப் பறிகொடுத்து நிற்கும் அதிமுக, கவனமாக விண்ணப்பங்களைப் பரிசீலித்து வருகிறது.

எல்லாத் தேர்தல்களையும் போல, இந்தத் தேர்தலும் கட்சிகளுக்கு மானப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை, இழந்த இடங்களைப் பிடித்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது கட்சியினருக்கு அதிருப்தி நிலவும் சூழலில், ஏற்கெனவே வெற்றி பெற்ற இடங்களைக் கூட மீண்டும் பிடிக்க முடியவில்லை என்றால், முன்னாள் அமைச்சர்களின் அழுத்தம் மேலும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

ஏற்கெனவே குதிரை பேரம் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது தவெக. மைனாரிட்டி அரசு என்ற கேலிகளையும் சந்தித்து வருகிறது.

இரண்டு தொகுதிகளையும் ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு வந்துள்ளனர். இப்போது அந்தத் தொகுதிகளை இழந்தால், ராஜினாமா செய்தவர்களுக்கு பதில் சொல்வதே கடினமாகிவிடும். அத்துடன், மக்களின் வரிப் பணத்தை வீணாக்குவதாக எழும் விமர்சனங்களும் இன்னும் தீவிரமாகிவிடும். ஆனால், கூட்டணி பலம் இருப்பதால் ஆசுவாசமாக இருக்கிறது தவெக முகாம்.

யாருக்கு வெற்றி வாய்ப்பு?

திமுகவைப் பொறுத்தவரையில், இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலைதான். கடந்த தேர்தலில் சரியாகச் செயல்படாத வேட்பாளர்களை மாற்றி, புதிய நபர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.

என்னதான் தாராபுரத்தில் வெறும் 32.2% வாக்குகளும், மதுராந்தகத்தில் 3-வது இடமும் பிடித்திருந்தாலும், வெற்றி பெறுவதில் முனைப்புடன் இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

சர்பிரைஸ் செய்யும் தாராபுரம்!

தாராபுரம் தொகுதியில் மட்டும் 2 லட்சத்து 22 ஆயிரத்து 46 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 875 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 15 ஆயிரத்து 523 பெண் வாக்காளர்களும், 8 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர். பெண் வாக்காளர்களின் ஆதிக்கமே இந்தத் தொகுதியின் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.

2026-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தாராபுரம் தனித் தொகுதியில் பொ. சத்தியபாமா வெற்றி பெற்றார். அவர் 81,100 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் டி. இந்திராணியை 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். திமுக வேட்பாளர் 64,373 வாக்குகளும், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கவுரி சித்ரா 46,438 வாக்குகளும் பெற்றனர்.

தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலா 6 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையும், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக, 2001-ல் பா.ம.க.வும், 2011 மற்றும் 2026-ல் அ.தி.மு.க.வும், 2016-ல் காங்கிரசும் வெற்றி பெற்றன. கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கயல்விழி செல்வராஜ், பா.ஜ.க.வின் எல். முருகனை வீழ்த்தி வெற்றி பெற்று, அமைச்சரவையில் இடம் பிடித்தார்.

எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர கோட்டையாக இல்லாமல், அரசியல் சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கும் தொகுதியாக தாராபுரம் இருந்து வருகிறது. இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் மாறுபட்ட முடிவுகள் வந்திருப்பது, இந்தத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. எனவே, 3 கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்த பின்னரே யூகங்களை முன்வைக்க முடியும்.

மதுராந்தகத்தில் சூழல் என்ன?

மதுராந்தகத்தைப் பொறுத்தவரையில், கடந்த தேர்தலில் தவெக மற்றும் அதிமுக இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 7 ஆயிரம் மட்டுமே. திமுகவும் பெரிய வாக்கு வித்தியாசம் இல்லாமல் 3-வது இடத்தில் உள்ளது. தற்போது பரந்தாமனை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் கே. மரகதம் குமரவேல் (அதிமுக) 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் எழில் கேத்தரின் எழில்மலை 62,090 வாக்குகள் பெற்றிருந்தார். திமுகவின் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்றார்.

மதுராந்தகம் தொகுதியில் தொடக்கத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று வந்தது. 1967, 1971, 1977 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக திமுகவே வென்றது. அதன்பிறகு, அதிமுகவும் திமுகவும் மாறி மாறி வெற்றி பெற்றன. கடந்த இருமுறை நடைபெற்ற தேர்தல்களான 2021 மற்றும் 2026-ம் ஆண்டு தேர்தல்களிலும் மதுராந்தகம் தொகுதியில் அதிமுகவே வெற்றி பெற்றது.

இப்படி, 4 முறை காங்கிரஸும், 6 முறை திமுகவும், 7 முறை அதிமுகவும் மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. இதனால், வரவிருக்கும் இடைத்தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தற்போது மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தவரை, 1 லட்சத்து 7,288 பெண் வாக்காளர்களும், 1 லட்சத்து 3,943 ஆண் வாக்காளர்களும், 64 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 295 வாக்காளர்கள் உள்ளனர்.

மரகதம் குமரவேல் இரண்டு முறை வெற்றிபெற்றவர் என்றாலும் அவருக்கென தனித்த வாக்கு வங்கி இல்லை என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் விசிக, காங்கிரஸ் தவெகவின் கூட்டணியில் இடம் பெற்றிருப்பது அவர்களின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கிறது.

திமுக சார்பில் களமிறங்கும் பரந்தாமன் ஏற்கெனவே எழும்பூர் தொகுதியில் வெற்றி பெற்றவர். பொதுத்தேர்தலின் போது திமுகவினர் தவெகவுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடவில்லை. பரந்தாமன் பிரசாரத்துக்கு கடந்த இரண்டு நாட்களில் சாம்பிள் பார்த்து வருகிறோம். பிரசாரம் எந்த அளவு தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் என்பதைப் பொருத்திருந்துதான் காண வேண்டும்.

இதற்கு இடையில் நம்பிக்கையான வேட்பாளருடன் மீண்டும் வெல்லும் நம்பிக்கையோடு களமிறங்குகிறது அதிமுக. அந்தக் கட்சிக்கு முன்னிருப்பது எல்லாமே கேள்விக்குறிகள் தான்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.