தமிழ்நாடு

“உச்சபட்ச அதிகார மயக்கத்தில் முதல்வர்” - பொதுக்குழு கூட்டத்தில் வெடித்த விஜய் - முதன்முறை கூச்சலிடாமல் கவனமாக பேச்சைக் கேட்ட தொண்டர்கள்!

மக்களை சந்திக்க நாங்கள் ஒரு இடத்தை கேட்போம் ஆனால் அந்த இடத்தை தர மறுத்து மக்களுக்கு நெருக்கடியான ஒரு இடத்தை...

Mahalakshmi Somasundaram

இன்று மாமல்லபுரத்தில் நடந்து வரும் தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் “நம்ம குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையிலும் வலியிலும் இவ்வளவு நாள் இருந்தோம் அப்படிப்பட்ட இந்த சூழலில் நம் சொந்தங்களின் மனம் பற்றி எடுக்க வேண்டியது நமது கடமை அதனால் தான் அவர்களோடு சேர்ந்து அமைதி காத்து இருந்தோம். ஆனால் இப்படி அமைதி காத்து இருந்த நேரத்தில் நம்மை பற்றி வெறுப்பு அரசியல், அர்த்தமற்ற அவதூறுகள் நிறைய விஷயங்கள் பரப்பப்பட்டன இவற்றை எல்லாம் சட்டம் மற்றும் சத்தியத்தை கொண்டு துடைத்து எறிய போகிறோம்.

தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உரைக்கு ஒரு பதிலடி கொடுக்க வேண்டும் என நினைக்கிறன் ‘அரசியல் செய்ய விருப்பமில்லை, அரசியல் செய்ய விருப்பமில்லை’ என பேசும் முதல்வர் நமக்கு எதிராக பேசிய பேச்சில் எவ்வளவு வன்மத்தை கக்கியுள்ளார் என்பதையும், எப்படி பட்ட அரசியல் செய்துகொண்டிருக்கிறார் என்பதையும் தமிழக மக்கள் உணராமலா இருக்கிறார்கள். கரூருக்கு முன் சில இடங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். மக்களை சந்திக்க நாங்கள் ஒரு இடத்தை கேட்போம் ஆனால் அந்த இடத்தை தர மறுத்து மக்களுக்கு நெருக்கடியான ஒரு இடத்தை வழங்குவார்கள். இது வழக்கமாக அனைத்து சந்திப்புகளிலும் நடக்கும் ஒரு சம்பவம்.

இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இல்லாத கட்டுப்பாடுகள் வெளியில் வரக்கூடாது, கை அசைக்க கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள். இப்படி நேர்மை திறனற்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நம்மைப் பற்றி குற்றம் சாட்டியுள்ள குறுகிய மனம் கொண்ட முதலமைச்சருக்கு சில கேள்விகள், தனிநபர் ஆணையத்தை அவமதிக்கும் வகையில் அரசு அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்கள். ஏன் நடத்தினார்கள் எதற்காக நடத்தினார்கள்? ஒட்டுமொத்த தமிழக மக்களும் கேள்வி கேட்டார்கள். சட்டமன்றத்தில் முதல்வர் பேசியது வடிகட்டிய பொய் சப்பை கட்டிகள் என நான் சொல்லவில்லை உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டி உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் அளித்த தீர்ப்பை நமக்கு எதிரானது என நினைத்து கொண்டாடி தீர்த்து விழா எடுத்தார்கள் இதற்கு எந்த ஆவணத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டது. இதற்கு எந்த பதிலும் கூற முடியாமல் மௌனம் காத்ததை முதலமைச்சர் மறந்து விட்டாரா? பொது வழிகாட்டு முறைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குழு நீதிபதிகள்தான் விசாரிக்க வேண்டும் என்றும், கோரிக்கையே இல்லாமல் SIT அமைக்கப்பட்டது எந்த வகையில் சரியென உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது? இதையெல்லாம் அறியாதது போல உச்சபட்ச அதிகார மயக்கத்தில் பேசினாரோ முதலமைச்சர்.

அரசியல் ஆதாயம் தேடும் ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் முதல்வர். இது அவர்களுக்கு புதியது இல்லை, அரசாங்கம் நடந்து விசாரணையை உச்சநீதிமன்றம் கேள்வி கேட்கிறது என்றால் அதற்கு காரணம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை. உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமல்ல மக்களுக்கும் இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை மண்ணில் புதைந்து விட்டது, இதுவும் புரியவில்லை என்றால் 2026 சட்டமன்ற தேர்தலில் இன்னும் ஆழமாக அழுத்தமாக மக்கள் புரிய வைப்பார்கள்.” என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.