சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரையின்போது முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக குறித்து பேசியதற்கும், அவரது மிசா கைது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் செய்த சைகையும் அரசியல் வட்டாரத்தில் எதிர்வினையாற்றியது. மேலும், பலரும் இதனை கண்டித்த நிலையில், இதுகுறித்து முதல்வரும் ஒரு விளக்கப்பதிவினை வெளியிட்டிருந்தார். தற்போது இது குறித்து இன்று (10.09.26) முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு காணொளியினை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் பேசிய அவர், நடந்து முடிந்த சட்டமன்றத்தில் நடந்த சில சர்ச்சைகள் தமிழ் மக்களுக்கும், உடன்பிறப்புகளுக்கும் கோவத்தையும், அதிருப்தியையும் உண்டாக்கியதை தான் உணர்வதாக அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்த சர்ச்சையில் தனது சிறை வரலாறும் இருப்பதால் அதை தேய்வு படுத்த விரும்புவதாக மு.க. ஸ்டாலின் கூறினார். அது குறித்து பேசிய அவர், "தம்பி விஜய்.. நீங்க சொன்னது உண்மைதான், பொய்யெல்லாம் இல்லை. எமெர்ஜென்சி காலத்தில் அதை எதிர்த்து கலைஞர் மெரினாவில் ஒரு மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி மிசா சட்டத்தை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து, அப்போது இருந்த ஒன்றிய அரசாங்கம் 30.01. 1976 அன்று திமுக ஆட்சியை களைத்தார்கள். ஆட்சியை களைத்த அடுத்த நொடி என்னை கைது செய்வதற்காக கோபாலபுர வீட்டிற்கு போலீஸ் வந்தாங்க. அன்னைக்கு நான் வீட்டுல இல்ல. 'பையன் பிரச்சாரத்திற்கு போயிருக்குறான், நாளைக்கு வந்துருவான். வந்ததும் நானே போன் பண்றேன், வந்து அர்ரெஸ்ட் பண்ணக்கோங்க' என்று கலைஞர் சொல்லி அனுப்பிட்டாரு".
"அடுத்தநாள் நான் வந்ததும் அவரே போலீசை வரச்சொல்லி அர்ரெஸ்ட் பண்ண சொல்லிட்டாரு. சிறையில எனக்கு பல கொடுமைகள் நடந்தது. எங்களை கொண்டுபோய் அடைந்ததே தொழுநோயாளிகள் இருக்கும் இடத்தில்தான். 10 பேரை ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்தார்கள். அந்த அறையில் இருந்த ஒரு பானையில்தான் 10 பெரும் சிறுநீர் கழிக்கவேண்டும். அந்த இடமே ரொம்ப துர்நாற்றமா இருக்கும். அங்கதான் நாங்க தூங்கணும். இரவில் தூங்க விடாம போலீஸ் லத்தியால் அடிப்பார்கள், பூட்ஸ் காலால் மிதிப்பார்கள். இன்னொருபுறம் ஆயுள் தண்டனை கைதிகளை வைத்து வேறு எங்களை கொடூரமாக அடிப்பார்கள். அவர்கள் அடித்ததில் என் அருமை அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு சிறையிலே இறந்தும் போனார். அவர்கள் அடித்ததில் என் தாடை எலும்பு எல்லாம் உடைந்து விட்டது. நீங்க கூட இப்படி கைவைத்து தாடையை காண்பித்தீர்கள் இல்லையா?" என்று முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் செய்து காட்டியதை குறிப்பிட்டு பேசினார். தொடர்ந்து பேசிய அவர், "அது சரிதான் இன்றும் நான் அடிவாங்கிய தழும்புகள் இருக்கிறது, நான் இல்லை என்று சொல்லவில்லை" என்று தனது மிசா குறித்த சிறை கொடுமைகள் குறித்து நினைவு கூர்ந்தார்.
மேலும், "பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு முக்கியமாக தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் போராட நினைத்த நிறைய பேருக்கு இந்த அடக்குமுறை நடந்துள்ளது. போராளிகள் எல்லாம் இதைத்தாண்டித்தான் வந்துள்ளோம். எதிர்த்து போராடுவதும், அதன் விளைவுகளை சந்திப்பதும் எங்களுக்கு ஒன்றும் புதிதில்லை. நீங்கள் கொள்கை தலைவராக சொல்லக்கூடிய அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து திமுகவின் வரலாறே இதுதான். அந்த வரலாற்றில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமையான விஷயம்தான். யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாறை மாற்றவே முடியாது, அது காலத்திற்கும் அப்படியேதான் இருக்கும். சந்தேகம் என்றால் நீங்கள் சட்டமன்றத்தில் ஒரு நூலகம் இருக்கு என்று சொன்னீர்கள் இல்லையா? அங்கே எல்லா ஆவணங்களும் இருக்கும். அங்கே போய் என்னோட போராட்ட வரலாறை படித்துப்பாருங்கள்".
"இரண்டாவதாக சர்க்காரியா கமிஷன் பற்றியும் எங்க தலைவர் கலைஞர் பற்றியும் தவறான தகவலை பேசியுள்ளீர்கள், ஊழல் குற்றசாட்டுகளை சொல்லியிருக்கிறீர்கள். சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது முதல் ஒன்றியத்தில், மாநிலத்திலும் பலமுறை ஆட்சி மாற்றிவிட்டது. இந்த குற்றச்சாட்டுகளில் ஏதாவது உண்மை இருந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். இத்தனை வருடமாக அரசியலுக்காக கலைஞரையோ காழ்ப்புணர்ச்சி கொண்டவர் என்று சொன்ன பொய்யான குற்றச்சாட்டினை நீங்களும் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். அதுமட்டுமின்றி அமலாக்கத்துறை எழுதுன கடிதத்தை எடுத்துக்கொண்டு எங்கள் மீது ஊழல் குற்றசாட்டு இருப்பதாக கூறியுள்ளீர்கள். அமலாக்கத்துறை குற்றம் சாதிய 95% வழக்குகளில் குற்றசாட்டுகள் நிரூபிக்கப்படாமல் குற்றவாளிகள் நிரூபிக்கப்பட்டுள்ளார்கள். அரசியல் பழிவாங்கலுக்காகவே அமலாக்கத்துறை ஏவப்படுவது இங்கிருக்கும் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்".
"உங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது கூட அமலாக்கத்துறை பல வழக்குகளை போட்டுள்ளது. இதயெல்லாம் ஒன்றிய அரசை கொள்கை எதிரியாக சித்தரிக்கக்கூடிய உங்களுக்கு எப்படி தெரியாமல் போச்சி? மாண்புமிகு முதலைச்சர் தம்பி விஜய், நான் உங்ககிட்ட கேட்குறது ஒன்னே ஒன்னுதான். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு என்று மாண்பும் மரியாதையும் இருக்கிறது. பல பெரும் தலைவர்கள், மாமனிதர்கள் தமிழ்நாட்டினை செதுக்கிய இடம் அது. அந்த பொறுப்பு உங்களுக்கும் இருக்கு. சட்டமன்றத்தில், சட்டஒழுங்கு பிரச்சனை, மக்கள் பிரச்சனை, தமிழ்நாட்டை முன்னேற்றப்பாதையில் எப்படி மேலும், மேலும் கொண்டு செல்வது, தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து விவாதம் செய்யுங்கள். அதுதான் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கு நல்லது. அதைவிட்டுவிட்டு தேவையில்லாத விஷயங்களை சட்டமன்றத்தில் பேசவேண்டாம் என்பதுதான் என் கோரிக்கை".
"நீங்கள் முதலமைச்சரானதும் என்னை சந்திக்க என் வீட்டிற்கு வந்தீர்கள். அப்போது நான் உங்கள் கரம்பிடித்து வரவேற்றேன். அப்போது, தேர்தல் பிரச்சாரத்தில் உங்களை ரொம்ப விமர்சித்து பேசிவிட்டேன் "I'm sorry sir" என்று சொன்னீர்கள். அதற்கு நான் பரவாயில்ல Brother அதையெல்லாம் நான் மனசுல வைத்து கொள்ளவில்லை. இப்போது நீங்கள் ஒரு மாநிலத்தில் முதலமைச்சர், யாரைப்பற்றி பேசினாலும் அந்த கண்ணியதோடு பேசுங்கள் என்று உங்களிடம் கூறினேன். அத எல்லாம் நீங்கள் மறந்துடீங்க போல".
"திரும்பவும் சொல்கிறேன், ஒரு முதலமைச்சருக்கான வார்த்தைகளும், உடல் மொழியும் இருக்கவேண்டும். நாம்தான் மக்களுக்கு முன்னுதாரணம், அதை அந்த மறந்து விடாதீர்கள். அந்த பெரிய பொறுப்பினை உணர்ந்து நீங்கள் செயல்படனும். சட்டமன்றத்தினை ரீல்ஸ் எடுக்கும் இடமாக மாற்றுவதும், நாங்கள் கட்டிய பாலத்தின் மீதிருந்து போட்டோஷூட் செய்வது என்று ஆட்சி நிர்வாகத்தையும் சினிமா ஷூட்டிங் போலவே நடத்துகிறீர்கள். உங்களின் திறனற்ற நிர்வாகத்தை மறைக்க விதவிதமா ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே ஏமாற்றி கொண்டிருக்கிறீர்கள். ஆனா.. ரியாலிட்டி என்ன?. உண்மை ஊரை தாண்டுவதற்குள் பொய் உலகத்தையே சுற்றி வந்துவிடும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள் இல்லையா? அதுதான் நடந்து கொண்டிருக்கிறது".
"உங்கள் ஆட்சியில் தினம் தினம் கொலை, திருட்டு, பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் என்று சட்டஒழுங்கு படுகுழியில் உள்ளது. பரந்தூர் விமானநிலைய திட்டத்தை ரத்து செய்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை 15 வருடம் பின்னோக்கி இழுத்துவிடீர்கள். விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி என்று வாக்குறுதிகள் கொடுத்தீர்கள். ஆனால், அதையும் ஒழுங்காக செய்யவில்லை. அனைத்து குடும்பங்களுக்கும் வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் என்று கூறினீர்கள், இப்போ தகுதி உள்ளவர்களுக்கு 3 சிலிண்டர் என்று அந்தர் பல்டி அடித்துளீர்கள். மகளிர் உரிமைத்தொகை 2500 ரூபாய் என்று கூறினீர்கள் இன்னும் நாங்கள் கொடுத்த அதே 1000 ரூபாய்யைத்தான் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். இன்னும் பல வாக்குறுதிகள் பற்றி வாய்திறக்காமல் இருக்கிறீர்கள். அப்போ சொன்னதெல்லாம் ஒன்னு இப்போ செய்வதெல்லாம் ஒன்னு. மாற்றம் வேண்டும் என்று வாக்களித்த மக்கள் குறிப்பாக நமது இளைஞர்கள், உண்மையாகவே என்ன மாற்றம் வந்துள்ளது?, இதெல்லாம் சரியான மாற்றமா? என்பதை கவனியுங்கள். எது நிர்வாக திறன் வாய்ந்த அரசு? எது நிர்வாகத் திறன் அற்ற அரசு? என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்".
மேலும், பேசிய மு.க. ஸ்டாலின், மக்கள் நமக்கு முழுமையாக வாக்களிக்காததால் நம்மால் ஆட்சிக்கு வரமுடியவில்லை அதனால், "மக்கள் அவதியுறும்போது எனக்கென்ன" என்று இருக்கக்கூடாது என்று கழக உடன்பிறப்புகளுக்கு வலியுறுத்தினார். மேலும், ஆட்சி இழப்பதை திமுக என்றுமே ஒரு தோல்வியாக நினைத்ததில்லை என்றும், ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல மக்கள் பணியில் இது இன்னொரு முகமாக பார்ப்பதாக அவர் தெரிவித்தார். ஆட்சியில் இருக்கிறோமோ இல்லையோ மக்கள் பணிக்காகவும், தமிழ்நாட்டின் உரிமைக்காககவும், அதன் வளர்ச்சிக்காகவும் நான் சண்டை செய்துகொண்டே இருக்கவேண்டும். அவங்க தாத்தாவிற்காக சண்டை செய்தோம், அவர்கள் அப்பாவிற்காக சண்டை செய்தோம், இப்பொது அவர்களுக்காகவே சண்டை செய்வோம் என்றும் இதுதான் திமுகவின் வரலாறு அது மாறாது மாறவும் கூடாது என்று தனது அதிகார்பூர்வ X தளப்பக்கத்தில் வெளிட்ட காணொளியில் பேசினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்