உலகம்

ட்ரம்பின் அடுத்த இலக்கு.. கியூபாவை குறிவைக்கிறதா அமெரிக்கா..?

அமெரிக்காவிற்கு எதிரான பல விரோத நாடுகள், நாடுகடந்த பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் தீய சக்திகளுடன் தன்னை இணைத்துக்கொண்டு

மாலை முரசு செய்தி குழு

கியூபாவின் தற்போதைய தலைவரான அதிபர் மிகுவல் தியாஸ்-கானெலைப் பதவியிலிருந்து நீக்கப் பணியாற்றி வருவதாகக் கூறப்பட்டு வருகிறார், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். ஈரானுடனான மோதல் தீர்க்கப்பட்டவுடன் தனது கவனத்தை அடுத்து கியூபா பக்கம் திருப்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டில் மட்டுமே டிரம்ப் ஏற்கனவே இரண்டு பெரிய ஆட்சி மாற்றங்களைக் ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் இறுதியில் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு இராணுவ தாக்குதலுக்கு மத்தியில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொன்றதும் மற்றும் ஜனவரி மாத தொடக்கத்தில் தனது இராணுவ நடவடிக்கையினால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ததும் போன்றவை இதில் அடங்கும். தற்போது, கியூபாவை கைப்பற்றும் நோக்கில் செயல்படுவதாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

கியூபாவின் நிலை:

கியூபாவிற்கு எண்ணெய் விநியோகத்தை மறுக்கும் நடவடிக்கைகளால், அத்தீவில் மக்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். சில அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் கூட இந்த நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளனர். பல தசாப்தங்களாக, கியூபா காஸ்ட்ரோக்களால் ஆளப்பட்டு வருகிறது. முதலில், 1959-ல் ஹவானாவில் அமெரிக்க ஆட்சியை அகற்றி, அப்போதைய சோவியத் ஒன்றியத்துடன் கூட்டணி அமைத்து கியூபாவை ஒரு சோசலிச நாடாக நிறுவியவர் உலகறிந்த புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் நடைபெற்றது. 2016ல் ஃபிடல் காஸ்ட்ரோ இறப்பதற்கு முன்பு, 2008ல் அவர் தனது சகோதரர் ரவுலிடம் ஜனாதிபதி பதவியை ஒப்படைத்தார். ரவுல் 2021 வரை கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளராக நாட்டை வழிநடத்தினார். அதன்பின்பு தற்போதைய ஜனாதிபதி தியாஸ்-கானலுக்கு வழிவிட்டு ரவுல் காஸ்ட்ரோ 2018ல் பதவி விலகிய போதிலும், அவரும் மற்ற காஸ்ட்ரோ குடும்ப உறுப்பினர்களும் கியூப அரசியலில் முக்கிய நபர்களாகத் தொடர்ந்துவருகின்றனர். கியூபா தனது எண்ணெய் தேவைகளில் மூன்றில் ஒரு பகுதியைத் தானே உற்பத்தி செய்து கொள்கிறது, மீதமுள்ளதை, பெரும்பாலும் வெனிசுலா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்கிறது. வெனிசுலா மீதான அமெரிக்கத் தாக்குதல் மற்றும் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்குப் பிறகு, இரு நாடுகளும் கியூபாவிற்கான எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலுமாக நிறுத்திவிட்டன. இதனால் அங்குள்ள மக்கள் பெரிதும் பதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

1991ல் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தபோது, ​​கியூபா தனது முதன்மைப் பொருளாதார உதவி ஆதாரத்தை இழந்ததால், அதன் பொருளாதாரம் நிலையாக இல்லை. மேலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் சுமார் 35% பொருளாதாரம் சுருங்கியது. கியூபாவின் இந்நிலைமை 1930களின் பெரும் பொருளாதார மந்தநிலைக்கு ஒப்பானதாக இருக்கிறது என்று சில கல்வியாளர்கள் கூறினர். மேலும், கியூபாவில் மின்வெட்டுகள் வழக்கமாகின, மேலும் உணவுப் பொருட்கள் பங்கீடு செய்யப்பட்டன. கியூபா அரசாங்கம், சில துறைகளுக்கு வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது மற்றும் தனியார் வணிகத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட படிப்படியான மாற்றங்களை அறிமுகப்படுத்தியது, ஆனாலும் அது பெரும்பாலும் சோசலிச அமைப்பையே நடைமுறையில் வைத்துள்ளது. 2024ம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து 2025ம் ஆண்டின் பிற்பகுதி வரை, வெனிசுலா கியூபாவிற்கு ஒரு நாளைக்கு 70,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயையும், சுமார் 1.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள சுத்திகரிக்கப்பட்ட பொருட்களையும் வழங்கிவந்தது.

அதன்பின்பு, வெனிசுலா அதிபர் கைதுசெய்யப்பட்டதில் இருந்து, குறிப்பாக பிப்ரவரி மாதத் தொடக்கத்திலிருந்து, தினசரி மின்வெட்டின் கால அளவு இருமடங்காக அதிகரித்து, ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் நீடிக்கத்தொடங்கியது. இது கியூபா மக்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. தாமதமாக மின்சாரம் மீண்டும் வரும்போது, ​​கியூபர்கள் நள்ளிரவில் எழுந்து அன்றைய உணவைச் சமைத்து, காபி தயாரித்து, மற்ற வீட்டு வேலைகளையும் செய்கின்றனர். இதனால் கியூப மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் முடங்கியுள்ளது. மக்கள் ஆளும் கியூப அரசின் மீது தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினாலும், "அமெரிக்காவின் ஊடுருவலை நாங்கள் கட்டாயம் எதிர்ப்போம்" என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் மிரட்டல்:

ஜனவரி 3 அன்று வெனிசுலா மீது நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதில் இருந்து , கியூபாவின் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் . மோசமான விளைவுகளைத் தவிர்க்க, கியூபா அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிரான தாக்குதல் தொடங்கியதிலிருந்து, இந்த அறிக்கைகள் தினமும் வந்த வண்ணமே இருக்கிறது. 'தனது படைகள் வெல்ல முடியாதவை' என்று உறுதியாக நம்பும் டிரம்ப், ஹவானா அரசாங்கத்தையே தனது பட்டியலில் அடுத்த இலக்காகக் வைத்திருக்கிறார் என்பதை இது தெளிவுபடுத்துகிறது. ஜனவரி 29 அன்று, டிரம்ப் ஒரு தேசிய அவசரநிலையை அறிவித்து, கியூபா அரசாங்கம் அமெரிக்காவிற்குத் தீங்கு விளைவிக்கும் மற்றும் அச்சுறுத்தும் அசாதாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டி, நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

குறிப்பாக, கியூபா அரசாங்கம் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் உள்ளிட்ட "அமெரிக்காவிற்கு எதிரான பல விரோத நாடுகள், நாடுகடந்த பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் தீய சக்திகளுடன் தன்னை இணைத்துக்கொண்டு அவற்றை ஆதரிப்பதாக அந்த நிர்வாக உத்தரவு கூறியுள்ளது. மேலும், கியூபா அரசாங்கம், அரசியல் எதிரிகளைத் துன்புறுத்துவதாகவும், பேச்சு மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்குவதாகவும், மற்றும் பிற மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் அந்த உத்தரவு குற்றம் சாட்டியுள்ளது. இந்த அறிக்கையின் வாயிலாக கியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் அதிக வரிகளை விதித்தார். இது மெக்சிகோ கியூபாவிற்கான எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்துவதற்கு வழிவகுத்தது. இதுமட்டுமின்றி, ஜனவரியில் வெனிசுலாவின் மதுரோவை அமெரிக்கா பதவியிலிருந்து நீக்கி, வெனிசுலாவின் எண்ணெய் மீது தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டிய பிறகு வெனிசுலா எண்ணெய் எதுவும் கியூபாவிற்குச் செல்லாது என்று டிரம்ப் அறிவித்தார்.

மேலும், ட்ரம்ப் தனது உரையில், வெனிசுலாவிடமிருந்து பெற்ற பொருளாதார ஆதரவை இழந்துவிட்டதால் , கியூபா அரசாங்கத்தால் இனிமேலும் தாக்குப்பிடிக்க முடியாது என்று கூறினார். மேலும் "அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள்," என்று டிரம்ப் கூறினார். ரூபியோ தலைமையிலான அந்தப் பேச்சுவார்த்தைகளில் தானும் ஈடுபட்டுள்ளதாக அவர் முதன்முறையாகக் குறிப்பிட்டார். அந்த பேச்சுவார்த்தையில் கியூபா அரசாங்கத்தின் சார்பில், ரவுல் காஸ்ட்ரோவின் பேரனான ரவுல் ரோட்ரிக்ஸ் காஸ்ட்ரோ கலந்துகொள்ளவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிப்ரவரியில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிபுணர்கள், கியூபா மீதான அமெரிக்காவின் இந்த எரிபொருள் முற்றுகையை "சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்" என்றும் "ஒருதலைப்பட்சமான பொருளாதார நிர்ப்பந்தத்தின் தீவிர வடிவம்" என்றும் கூறி கண்டித்தனர்.

கியூபா அரசாங்கத்தின் அதிகாரிகள் அல்லது அமைப்புகளுக்கு எதிராக சாத்தியமான கூட்டாட்சி குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அமெரிக்க நீதித்துறை ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளதாக, ' தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. நிதித்துறை உள்ளிட்ட கூட்டாட்சி அமைப்புகள் இந்தக் குழுவில் இடம்பெறும். இது, அந்தத் தீவுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம், புதிய தடைகளை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதைக் குறிக்கிறது. இதேபோன்ற ஒரு உத்தியைதான் நீதித்துறை, வெனிசுலா தலைவர்களிடமும் பயன்படுத்தியது எனபதும் குறிப்பிடத்தக்கது. மேலும், டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, கிரீன்லாந்தை இணைத்துக்கொள்வது, பனாமா கால்வாயைக் கைப்பற்றுவது, மற்றும் கனடாவை 51வது மாநிலமாக ஆக்குவது போன்ற அச்சுறுத்தல்களையும் உள்ளடக்கியுள்ளது.

அதுமட்டுமின்றி, அதில் வெனிசுலா மற்றும் கியூபா போன்ற நாடுகளும் அடங்கும். அதில் வெனிசுலாவில் தனது அதிகாரத்தை ட்ரம்பின் அரசு பதித்துள்ளது. தற்போது அந்த வரிசையில் கியூபாவை இணைத்துள்ளார் ட்ரம்ப். சமீப நாட்களாக டிரம்பின் கியூபாவை குறித்த சொல்லாடல் கடுமையாகியுள்ளது. பிப்ரவரி மாத இறுதியில், ஈரானுக்கு எதிரான போரைத் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு, கியூபாவை 'நட்புறவாகக் கையகப்படுத்தும்' யோசனையை டிரம்ப் முன்வைத்தார் . சில நாட்களுக்குப் பிறகு, அவர் , “அது நட்புறவான கையகப்படுத்தலாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அது ஒரு பொருட்டல்ல, ஏனென்றால் அவர்கள், நான் சொல்வது போல், முற்றிலும் செயலிழந்துவிட்டனர்” என்றார்.

மேலும் மார்ச் 16 அன்று, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப், “கியூபாவைக் கைப்பற்றும் பெருமை எனக்குக் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றும் பகிரங்கமாக சுபாவை கைப்பற்றுவது குறித்து அறிவித்துள்ளார். காலப்போக்கில் வெனிசுலாவை போல, கியூபாவும் கைப்பற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.