தமிழகத்தை உலுக்கிய சிறுமிகள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், இதுவரை வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் மற்றும் கணேசன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அருண் ஐபிஎஸ், கண்ணன் ஐபிஎஸ், யாஸ்மின் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், இதில் சாந்தி-வீரமணி இடையே பஞ்சாயத்து செய்ததாக ரஞ்சன் குமார், ஜான் பாண்டியன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், 4 பெண் காவலர்களுடன் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, நேற்று ரஞ்சன் குமாரிடம் விசாரணை நடத்தியது.
ரஞ்சன் குமார் கடந்த 2024ஆம் ஆண்டே வீரமணியின் குற்றங்கள் தொடர்பாக புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் அப்போது நடைபெற்ற விசாரணை மற்றும் ஜெம் வீரமணியின் வீடியோ பரவியது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
விசாரணைக்காக நேற்று மதியம் 2 மணியளவில் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு ரஞ்சன் குமார் சென்றுள்ளார். அவரிடம் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
விசாரணை நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சன் குமார், 2024ஆம் ஆண்டு தான் அளித்த புகாரின் அடிப்படையில் நேரில் விசாரணைக்கு அழைத்ததாகவும், காவல்துறை கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முறையாகப் பதிலளித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், தன்னிடம் இருந்த உண்மைகள் மற்றும் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், மீண்டும் விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் நேரில் வந்து ஆஜராகத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
காவல்துறையின் வழக்கமான விசாரணையைப் போலவே இந்த விசாரணையும் நடைபெற்றதாகவும், அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் உரிய முறையில் பதிலளித்து முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் ரஞ்சன் குமார் தெரிவித்தார்.
வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால், இதற்கு மேல் எந்தத் தகவலையும் தற்போது தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்