WTC points table 
விளையாட்டு

"213 ரன்கள் முன்னிலை.. வெற்றியை கோட்டை விட்ட இந்தியா!" WTC புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட அதிர்ச்சி பின்னடைவு

சோனல் தினுஷாவின் அசாதாரணமான பொறுமை இந்தியாவின் வெற்றிப் பாதையை மறித்துவிட்டது

Vinvizhi Leninton

ஆகஸ்ட் 23-ம் தேதி துவங்கிய இந்தியா - இலங்கை இடையிலான டெஸ்ட் போட்டியில் 503/9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்திய அணி.

இலங்கை அணியை முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்குச் சுருட்டி 'ஃபாலோ-ஆன்' செய்ய வைத்தது. 5 ம் நாள் தொடக்கத்தில் 213 ரன்கள் முன்னிலையில் இருந்த இந்திய அணி எளிதாக வெற்றிபெற்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனி ஒருவனாக இலங்கை வீரர் சோனல் தினுஷாவின் பொறுமை இந்தியாவின் வெற்றிப் பாதையை தடுத்து நிறுத்தியது என்றுதான் கூறவேண்டும். அவர் அடித்த 133 ரன்கள் இலங்கை அணியை White wash செய்யபடுவதில் இருந்து காப்பாற்றியது. இறுதியில் 2 வது போட்டி டிராவில் முடிவடைந்தது.

கல்லே-வில் நடந்த முதல் போட்டியில், 165 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற மாபெரும் வெற்றியால் 1-0 என இந்தியா தொடரைக் கைப்பற்றினாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC 2025-27) தரவரிசைப் பட்டியலில் இந்த தொடர் இந்திய அணிக்கு கை கொடுக்கவில்லை.

2 வது போட்டி டிராவில் முடிந்ததால் இந்தியாவிற்கு 4 புள்ளிகள் மட்டுமே கிடைத்தன. ஒருவேளை வெற்றிபெற்றிருந்தால் 12 புள்ளிகளுடன் 'புள்ளி சதவீதத்தை' (PCT) 63.33%-ஆக உயர்த்தி, வங்கதேசத்தைத் முந்தி 4-வது இடத்திற்குச் சென்றிருக்கலாம். தற்போது 51.51% புள்ளிகளுடன் இந்தியா 5-வது இடத்திலேயே நீடிக்கிறது. இனி வரவிருக்கும் போட்டிகளில் இந்தியா எப்படிச் செயல்பட வேண்டும்? பிற அணிகளின் வாய்ப்புகள் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.

Points table

அணிகளின் தற்போதைய சூழலும், இறுதிப்போட்டிக்கான வாய்ப்புகளும்:

ஆஸ்திரேலியா:

80% புள்ளிப் சதவீதத்துடன் முதலிடத்தில் வலுவாக இந்த அணி உள்ளது. மீதமுள்ள 12 போட்டிகளில் 8 போட்டிகள் வெளிநாடுகளில் விளையாட வேண்டியவை. இதில் 6 வெற்றி, 1 டிரா பெற்றாலே 65%-க்கு மேல் தக்கவைத்து இறுதிப்போட்டிக்குச் சுலபமாகத் தகுதிபெற்றுவிடும்.

தென்னாப்பிரிக்கா:

75% சதவீதத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. மிகப்பெரிய சாதகம் என்னவென்றால், மீதமுள்ள 10 போட்டிகளில் 8 போட்டிகள் சொந்த மண்ணில் நடக்கவுள்ளன. அவற்றில் 6 வெற்றி, 1 டிரா பெற்றால் 66.67% பெற்று ரேஸில் முன்னிலை வகிக்கும்.

நியூசிலாந்து:

72.22% சதவீதத்துடன் 3-வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்திற்கு இனிவரும் பயணங்கள் சவாலானவை. 10-இல் 6 போட்டிகள் வெளிநாடுகளில் நடப்பவை. சொந்த மண்ணில் இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிராக விளையாடவுள்ள 4 போட்டிகளிலும் வென்று, வெளிநாட்டில் 2 போட்டிகளில் வென்றால் 65% வரை எட்ட முடியும்.

வங்கதேசம்:

இந்த அணி இதுவரை இல்லாத அளவாக 4-வது இடத்தில் நீடிக்கிறது. மீதமுள்ள 6 போட்டிகளில் 4 சொந்த மண்ணில் நடப்பவை. அதில் 4 வெற்றி, 2 டிரா பெற்றால் 66.67% புள்ளிகளுடன் இறுதிப்போட்டிப் பந்தயத்தில் நீடிக்க வாய்ப்புள்ளது.

இந்தியா:

இந்தியாவிற்கு இனி 7 போட்டிகளே எஞ்சியுள்ளன (நியூசிலாந்தில் 2, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுடன் 5). 7 போட்டிகளிலும் வென்றால் PCT 70.37%-ஆக உயரும். 6 வெற்றி, 1 தோல்வி அடைந்தால் 65% வரை வரக்கூடும். நியூசிலாந்திடம் 0-2 எனத் தோற்று, ஆஸ்திரேலியாவை 5-0 என வீழ்த்தினாலும் 59.26% மட்டுமே பெற முடியும். இது மற்ற அணிகளின் முடிவுகளை நம்பியிருக்கும் நிலைக்குத் தள்ளிவிடும்.

இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான் & மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை மீதமுள்ள 6 போட்டிகளிலும் வென்றாலும் அதிகபட்சமாக 66.67% மட்டுமே பெற முடியும். இங்கிலாந்து (அதிகபட்சம் 53.17%), பாகிஸ்தான் (56.41%), மேற்கிந்தியத் தீவுகள் (32.14%) ஆகிய அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கான கதவுகள் ஏறக்குறைய மூடப்பட்டுவிட்டன என்றே கூறலாம்.

இந்திய அணியைப் பொறுத்தவரை, இனிவரும் ஒவ்வொரு ஆட்டமும் போராட்டம்தான். கொழும்பு டெஸ்ட்டில் தவறவிட்ட வெற்றியை, அடுத்து வரும் நவம்பரில் நியூசிலாந்து மற்றும் 2027 ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியத் தொடர்களில் சரிசெய்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்