
நேற்று முன்தினம் குஜராத் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரிழந்தது நாட்டு மக்களையும் அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் குடும்பத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விமானத்தில் பயணித்த ஒவ்வொரு பயணியும் ஏதோ ஒரு கனவுகளுடனும் கடமைகளுடனுமே பயணித்து இருப்பார்கள். விமானம் வெடித்து சிதறிய போது அந்த பயணிகளின் கனவுகளும் சேர்ந்தே சிதறியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் மட்டும் இல்லாமல், தனது தந்தை, தாய் , அண்ணன், அக்கா, மனைவி, சகோதர்கள் குழந்தைகள் என குடும்பத்தின் உறுப்பினர்களை பறிகொடுத்துள்ளனர்.அந்த விமானத்தில் பயணித்த சில பயணிகளை பற்றியும் அவர்களின் கலைந்த கனவுகளை பற்றியும் இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.
அர்ஜுன் பட்டாலியா
குஜராத் பகுதியை சேர்ந்த 36 வயதான அர்ஜுன் தனது மனைவி பாரதி பென் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதி எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். உயிர் போகும் கடைசி நேரத்தில் அர்ஜுனிடம் தனது அஸ்தியை தாய் நாட்டில் ஓடும் நர்மதா நதியில் கரைத்து விடுமாறு கூறியுள்ளார்.
இதனால் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் லண்டனில் விட்டு விட்டு தனது மனைவியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்த அர்ஜுன். அஸ்தியை கரைத்து விட்டு, மீண்டும் லண்டன் செல்ல இந்த விமானத்தில் ஏறியுள்ளார். இந்நிலையில்தான் எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
பிரதிக் ஜோஷி
ராஜஸ்தானை சேர்ந்த பிரதிக் ஜோஷி இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கோமி வியாஸ் என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் ராஜஸ்தானில் வசித்து வந்த நிலையில் குடும்பத்துடன் வாழ வேண்டும் என்று மனைவி மற்றும் குழந்தைகளை லண்டனுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.
குழந்தைகள் பிரிந்தே வாழ்ந்து வந்த பிரதிக் ஜோஷி அவர்களுடன் சேர்ந்து வாழப் போகிறோம் என்ற ஆசையுடன் குடும்பமாக விமானத்தில் ஏறியுள்ளார். சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தவர் குடும்பத்தோடு உயிரிழந்துள்ளார்.
மனிஷ் காம்தார்
குஜராத் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் மனிஷ் காம்தார். இவர் தனது மகள் யஷாவை லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் மோத என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். யஷாவிற்கு ருத்ரா என்ற மகன் பிறந்த நிலையில் யஷாவின் மாமனாருக்கு இதய நோய் ஏற்பட்டுள்ளது.
அதற்கு மருத்துவம் பார்க்க குடும்பத்தோடு இந்திய வந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவ பலனின்றி யஷாவின் மாமனார் உயிரிழந்துள்ளார். எனவே இறுதி சடங்குகளை முடித்துவிட்டு லண்டனுக்கு தனது குழந்தை மற்றும் மாமியாருடன் யாஷா விமானத்தில் ஏறியுள்ளார். யஷாவின் கணவர் தந்தையின் மருத்துவ கணக்குகளை முடித்துவிட்டு செல்ல இருந்ததால் அவர் அந்த விமானத்தில் செல்லாமல் இருந்துள்ளார்.
தற்போது மருத்துவ பலனின்றி தந்தையையும், விமான விபத்தில் தாய் மனைவி மற்றும் தனது ஆசை குழந்தை என குடும்பத்தையே இழந்து விட்டு நிற்கிறார் மோத.
ரஞ்சிதா நாயர்
கேரளாவை சேர்ந்தவர் ரஞ்சிதா நாயர் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் குழந்தைகளை தனது தாயிடம் விட்டு விட்டு ஓமனுக்கு செவிலியர் வேலைக்கு சென்றுள்ளார். ஒன்பது ஆண்டுகள் ஓமனில் வேலை செய்த ரஞ்சிதா கடந்த ஒரு வருடமாக லண்டனில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கேரளாவிலேயே வேலை பார்த்து கொண்டு குடும்பத்துடன் இருக்க முடிவு செய்துள்ளார். எனவே கேரளவந்த ரஞ்சிதா தனது செவிலியர் வேலையை ராஜினாமா செய்ய லண்டனுக்கு விமானத்தில் புறப்பட்டுள்ளார்.
10 வருடங்களுக்கு பிறகு தாயுடன் வாழ போகிறோம் என ஆசையாக இருந்த ரஞ்சிதாவின் குழந்தைகள் விபத்து செய்தி கேட்டு பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அகீல் நானாபாவா
பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர் அகீல் நானாபாவா ஐஸ்பர்க் என்ற சேவை நிறுவனத்தை நடத்தி வந்த இவர் தனது மனைவி ஹன்னா வோராஜி மற்றும் தனது மகள் சாராவுடன் ஈத் பண்டிகை கொண்டாடுவதற்காக இந்தியாவின் சூரத் நகருக்கு வந்துள்ளனர்.
பண்டிகையை கொண்டாடி விட்டு திரும்பவும் லண்டன் செல்ல இருந்தனர், இந்த தம்பதியினர். இவர்கள் காசாவில் பசியால் வாடும் மக்களுக்கும் இந்தியாவில் மருத்துவ உதவி தேவைப்படும் ஏழைகளுக்கும் நிதி திரட்டி உதவி வந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களை இழந்த குடும்பத்தார் மட்டும் இன்றி இவர்கள் மூலம் பலனடைந்து ஆயிரக்கணக்கான மக்கள் இவர்களை நினைத்து கவலையில் உள்ளனர்.
கேப்டன் சுமீத்
விபத்துக்கு உள்ளான விமானத்தை இயக்கியவர் தான் மும்பையை சேர்ந்த கேப்டன் சுமீத். கடந்த 30 ஆண்டுகளாக சுமீத் விமானத்தை இயக்கி வந்துள்ளார். இவரின் தந்தைக்கு 85 வயது ஆகும் நிலையில் கடந்த ஆண்டு சுமீத்தின் தாய் உயிரிழந்துள்ளார்.
எனவே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டில் இருந்த சுமீத் அவரது தந்தையிடம் “நான் பணியிலிருந்து ஓய்வெடுத்து உங்களை பார்த்து கொள்கிறேன் என கூறியுள்ளார்” ஆனால் அடுத்த மூன்று நாட்களிலேயே லண்டனுக்கு செல்லும் விமானத்தை இயக்கும் பணி வந்ததால் பணிக்கு சென்றுள்ளார்.
கடைசியில் தந்தை பார்த்துக்கொள்ள ஓய்வெடுக்க நினைத்த சுமீத் ஒரே அடியாக விமான விபத்தில் ஓய்வெடுத்து விட்டார். தனது மகன் இருந்ததையும் அவர் இயக்கி சென்ற விமானம் விபத்துக்கு உள்ளானதையும் கேட்ட சுமீத்தின் தந்தை பேச முடியாமல் தனது கண்ணீரை சிந்தி வருகிறார்.
சாரதா
விமானத்தில் பயணித்தவர்கள் குடும்பம் தான் அப்படி கதறுகிறது எனில் விமானம் விழுந்த விடுதியில் உணவு சமைக்கும் பணியை மேற்கொண்டு வந்தவர் தான் சாரதா. இவரின் மகன் ரவி விபத்து நடைபெறுவதற்கு சற்று முன்னர் தான் தாயையும் அவருடன் தனது இரண்டு வயது மகனையும் விடுதியில் இறக்கி விட்டு சென்றுள்ளார்.
இறக்கி விட்டு வீட்டிற்கு செல்வதற்கு விபத்து செய்தியை கேட்டு ரவி அலறியடித்து விடுதிக்கு வந்துள்ளார். ஆனால் உடல்களைக்கூட கண்டுபிடிக்க முடியாமல், தொடங்குவதற்கு முன்னே தனது இரண்டு வயது மகனின் வாழ்க்கை முடிந்ததை எண்ணி கதறி வருகிறார்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.