
தென்காசி மாவட்டம் நாடானுர் பகுதியை சேர்ந்தவர் 67 வயதான பொன்னுக்கிளி. இவருக்கு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பொன்னுக்கிளிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அப்போது மூதாட்டியை அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த நபர் மருத்துவமனையில் அனுமதித்து பார்த்துக் கொண்டுள்ளார்.
இதனால் அந்த நபரின் அன்பாக இருந்த மூதாட்டி அவருக்கு தனது சொத்துக்களில் சில பங்குகளை எழுதி வைத்துள்ளார். சொத்துக்களை எழுதி வைத்த பிறகு அவர் மூதாட்டியை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் மூதாட்டி தனது சொத்துக்களை திருப்பி கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார்.
மூதாட்டி அந்த சொத்தை விருப்பத்துடன் அவருக்கு எழுதி கொடுத்ததால் வழக்கின் தீர்ப்பும் அந்த நபருக்கு சாதகமாகவே வந்துள்ளது. இதனால் மூதாட்டி அந்த நபர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். தொடர்ந்து அவரை வசை பாடி வந்துள்ளார். இந்த சூழலில் மூதாட்டி கிராமத்திற்கு வெளிப்புறத்தில் ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். அதே சமயம் அந்த நபரின் 17 வயதான மகன் அந்த இடத்திற்கு தனது நாயை தேடி சென்றுள்ளார்.
அங்கும் மூதாட்டி அந்த 17 வயது சிறுவனை வசை படி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன் மூதாட்டியை அங்கிருந்த இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து கம்பியை மண்ணில் புதைத்து விட்டு அங்கிருந்து சிறுவன் தப்பி சென்றுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். கொலையில் எந்த துப்பும் கிடைக்காமல் 10 மாதங்களாக போலீசார் திணறி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் குழந்தைகள் நல உதவி எண்ணிற்கு போன் செய்து தான் செய்த கொலையை பற்றி கூறியுள்ளார்.
இதனை அடுத்து சிறுவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் “நான் கொலை செய்தது யாரும் கண்டுபிடிக்கவில்லை என்று முதலில் நிம்மதியாக தான் இருந்தது பின்னர் ஒவ்வொரு நாளும் எனக்கு இந்த வாழ்க்கை நரகமாக மாறியது.
ஒவ்வொரு முறை போலீஸ் கிராமத்திற்கு விசாரணைக்கு வரும்போது நான் பயந்து பயந்து வீட்டுக்குள் சென்று விடுவேன். யாராவது வீட்டு கதவை தட்டினால் கூட போலீசாக இருக்குமோ என பயந்து நடுங்குவேன் இதற்கு மேல் என்னால் இந்த நரகத்தை அனுபவிக்க முடியாமல் கொலையை பற்றி சொல்லி விட்டேன்” என கூறியுள்ளார்.
பின்னர் சிறுவனின் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர். 17 வயது சிறுவன் மூதாட்டியை கொலை செய்து 10 மாதங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.