
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் பகுதியை சேர்ந்தவர் 50 வயதான அர்ஜுனன். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் 24 வயதான மகள் அபிதா பட்டப்படிப்பு படித்து விட்டு பக்கத்து ஊரில் வேலை செய்து வந்துள்ளார். அபிதா ஐந்து வருடங்களாக அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதனால் வீட்டில் திருமணத்தை தள்ளி போட்டு வந்துள்ளார்.
வரும் நல்ல வரன்களை எல்லாம் அபிதா வேண்டாம் என்றதால் அர்ஜுனன் அபிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த(ஜூன் 26) தேதி அபிதாவை பெண் பார்க்க வந்த நிலையில் அந்த வரனையும் அபிதா வேண்டாம் என்று கூறியுள்ளார். பிறகு அர்ஜுனனிடம் தனது காதலை பற்றி தெரிவித்துள்ளார். காதலுக்கு மறுப்பு தெரிவித்த அர்ஜுனன் தான் பார்க்கும் பையனுக்கு தான் திருமணம் செய்து வைப்பேன் என கடுமையாக கூறியுள்ளார்.
இதில் மனமுடைந்த அபிதா அன்று இரவு வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறியுள்ளார். இதனை அறிந்த காதலன் அபிதா இருந்த இடத்திற்கு சென்று அவருக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு போக சொல்லியுள்ளார். ஆனால் அதை ஏற்காமல் அபிதா நான் உன்னுடனே இருந்து விடுகிறேன் என தெரிவித்துள்ளார். இதனை மறுத்த காதலர் “பெற்றோர்கள் அனுமதி இன்றி திருமண செய்து கொள்ள வேண்டாம் அது நம் வாழ்க்கையை பாதிக்கும்” என கூறி அபிதாவின் தந்தைக்கு போன் செய்து வரவழைத்து அபிதாவை வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
ஏற்கனவே மகள் மீது கோபத்தில் இருந்த அர்ஜுனனுக்கு இந்த செயல் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வீட்டில் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. மீண்டும்(ஜூன் 27) தேதி மதியம் வீட்டில் இருந்த தந்தைக்கும் மகளுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அருகில் இருந்த கட்டையை எடுத்து மகளை தாக்கியுள்ளார் அர்ஜுனன். மேலும் கத்தியை எடுத்து மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
மகளை கொலை செய்துவிட்டு மது அருந்தி காவல் நிலைத்தில் சென்று சரணடைந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அபிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சரணடைந்த அர்ஜுனன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
அபிதா உயிரிழந்ததை அறிந்த குடும்பத்தார் மற்றும் அவரது காதலன் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தந்தையே பெற்று வளர்த்த மகளை கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்கு சம்மதம் தெரிவித்திருந்தால் யாருக்கும் இந்த நிலை வந்திருக்காது என்கின்றார்கள் போலீசார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.