ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் சுண்டப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான நாகராஜ் இவர் கோவையில் உள்ள பேக்கரியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கும் தாளவாடி அருகே உள்ள குன்றியை சேர்ந்த சித்ரா என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒன்றரை மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று காலை நாகராஜ், கோபி அருகே டி.ஜி.புதூரில் உள்ள மயானத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாகராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர், மேலும் கொலையாளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்த நிலையில், தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், நாகராஜ்,சம்பவத்தன்று மூன்று பேருடன் கொலை நடந்த இடத்தின் அருகே உள்ள மதுக்கடையில் மது வாங்கி இருப்பது தெரிய வந்தது. அவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த பிளாஸ்டிக் டம்ளர்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கைப்பற்றப்பட்ட டம்ளர்கள் தாளவாடி மலைப்பகுதியில் பயன்படுத்தப்படும் டம்ளர்கள் என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் நண்பர்களே நாகராஜை கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.
பின்னர் தாளவாடி அருகே உள்ள குன்றியை சேர்ந்த பார்த்திபன் (26), சத்தியமங்கலம் அருகே உள்ள சிவியார்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (19), டி.ஜி.புதூரை சேர்ந்த கவுதம்(21) ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பிடிபட்டவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “நாகராஜின் மனைவி குன்றியை சேர்ந்தவர், நாகராஜ் மனைவி வீட்டிற்கு சென்ற போது பார்த்திபனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பார்த்திபன் விவசாயம் செய்து வருகிறார், இருவரும் டி.ஜி.புதூரில் உள்ள மதுக் கடைக்கு வரும் போது பைக் மெக்கானிக்காக உள்ள கார்த்திகேயனும், கவுதமும் அறிமுகமாகி உள்ளனர். அதைத்தொடர்ந்து சில மாதங்களாக நான்கு பேரும் ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.
சம்பவத்தன்று அதே போன்று நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது, பார்த்திபனின் மனைவி குறித்து நாகராஜ் “ உன் பொண்டாட்டி அழகா இருக்க நம்பர் குடு” என தவறாக பேசியதாக சொல்லப்படுகிறது, எனவே நாகராஜ் பார்த்திபனின் மனைவியை குறித்து தவறாக பேசியதை மூன்று பேரும் தட்டி கேட்டு உள்ளனர். போதை தலைக்கேறிய நாகராஜ் மற்றவர்கள் காண்டித்ததையும் மீறி பார்த்திபன் மனைவியை தவறாக பேசியுள்ளார்.
எனவே மூவரும் ஆத்திரம் அடைந்ததால், அவர்களுக்கும் நாகர்ஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன் “ என மனைவியை தவறாக பேசுகிறாயா” என கேட்டு அருகில் கிடந்த கான்கிரீட் சிலாப் எடுத்து நாகராஜின் தலையில் தாக்கியுள்ளார் இதில் படுகாயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் நாகராஜ் உயிரிழந்ததை அறிந்த மூன்று பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்” எனபது தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேரும் கோபியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.