
கரூர் மாவட்டம், குளித்தலை டவுன்ஹால் பகுதியில் அரபிந்தோ பாரதி வித்யாலயா மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் யு.கே.ஜி., எல்.கே.ஜி, முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தினமும் காலையில் பள்ளியில் யோகா வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அது போல இன்று காலை நடைபெற்ற யோகா வகுப்பு கலந்து கொள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் 11 வயதுடைய மாணவி பள்ளிக்கு சென்றார். வகுப்பு தொடங்குவதற்கு நேரம் இருந்ததால் வேறு ஒரு வகுப்பறையில் அமர்ந்து படித்துக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது பள்ளியில் பாதுகாப்பு பணியில் இருந்த கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்த வாட்ச்மேன் 55 வயதுடைய பாலசுப்பிரமணி சிறுமி அமர்ந்து படித்துக் கொண்டிருந்த வகுப்பறைக்கு சென்று வகுப்பறையின் கதவை சாத்திக்கொண்டு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என கூறப்படுகிறது. பின்னர் அவரிடமிருந்து தப்பித்து வகுப்பறையை விட்டு வெளியில் வந்த சிறுமி பள்ளிக்கு எதிரே இருந்து வீட்டிற்குள் சென்று அமர்ந்து தப்பித்துள்ளார். சிறுமி அதிகளவில் பயந்திருப்பதை கவனித்த அந்த வீட்டில் இருந்தவர்கள் சிறுமியை ஆறுதல் படுத்தி நடந்ததை கேட்டறிந்து சிறுமியின் உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் பெற்றோர்கள் வந்து சிறுமியை அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில் பள்ளி வகுப்பறையில் தன்னிடம் தவறாக நடந்த கொண்ட வாட்ச்மேன் செயல்கள் குறித்து சிறுமி பெற்றோர்களிடம் எடுத்துக் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் இது குறித்து போலீசில் தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்த குளித்தலை டிஎஸ்பி, சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர், மகளிர் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார்கள் தனியார் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
போலீசார் மற்றும் சிறுமியின் உறவினர்கள் வருவதை அறிந்த தனியார் பள்ளி வாட்ச்மேன் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். அப்போது தவறி கீழே விழுந்ததில் முகத்தில் காயம் ஏற்பட்டது. போலீஸார்கள் தனியார் பள்ளியின் வாட்ச்மேனை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துக் கொண்டு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் சிறுமியின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் கூட்டம் கூடியதால், போலீசார் பாதுகாப்புடன் தனியார் பள்ளி வாட்ச்மேனை மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வாட்ச்மேன் பாலசுப்பிரமணி மீது குளித்தலை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் இதற்கு முன்பு குளித்தலை பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேலை பார்த்த போது இது போன்ற பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதால் வேலையை விட்டு துரத்தி அடிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.