
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவருக்கு முருகேசன், பாஸ்கரன் என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முருகேசனுக்கு பெற்றோர் விமலா ராணி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். முருகேசன் மற்றும் விமலா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் முருகேசன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மாலத்தீவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார். வீரப்பனின் இரண்டாவது மகனான பாஸ்கரன் ஊர் காவல் படையில் பணிபுரியும் பானுமதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் பானுமதி வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் பாஸ்கரனின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.
தினந்தோறும் பானுமதியை பாஸ்கரனின் பெற்றோர் வசைபாடி வந்துள்ளனர். பாஸ்கரனுக்கும் பானுமதிக்கும் ஒரு மகன் உள்ள நிலையில் பானுமதி மாமனார் மாமியார் செய்யும் கொடுமைகளை தாங்க முடியாமல் பாஸ்கரனை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். எனவே பாஸ்கரன் தனது மகனுடன் வீட்டுக்கு மேல் மாடியில் வசித்து வந்துள்ளார். விமலா தாது குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியாருடன் வீட்டின் கீழ் பகுதியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் பாஸ்கரனின் மகனையும் விமலாவே கவனித்து வந்துள்ளார். அப்போது விமலாவுக்கும் பாஸ்கரனுக்கும் இடையில் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்த நிலையில் இதுகுறித்து பாஸ்கரனின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. எனவே பாஸ்கரனை கண்டித்த பெற்றோர்கள் விமலாவிற்கும் அறிவுரை கூறியுள்ளனர். இருப்பினும் தங்களது உறவை பாஸ்கரனும் விமலாவும் கைவிடாமல் இருந்துள்ளனர்.
இதை அறிந்த முருகேசன் தனது மனைவிக்கு போன் செய்து இதை பற்றி கேட்டுள்ளார். அதற்கு விமலா தன்னை பாஸ்கர் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டதாக கூறியுள்ளார். பிறகு முருகேசன் விமலாவை குழந்தைகளை அழைத்து கொண்டு விமலாவின் பெற்றோர் வீட்டிற்கு செல்ல கூறியுள்ளார். இதனை அடுத்து யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக வீட்டிற்கு சென்ற முருகேசன் பாஸ்கரனின் தலையில் கல்லை போட்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
மேலும் பாஸ்கரனின் உடலை அவரது வண்டியுடன் சேர்த்து பக்கத்தில் உள்ள சாலையில் போட்டு விட்டு விபத்து போல செட் செய்துள்ளார். பின்னர் வந்தது யாருக்கும் தெரியாமல் இருக்க வெளியூருக்கு சென்றுள்ளார். பாஸ்கரனின் உடலின் அருகில் அமர்ந்து கொண்டு அவரது தாய் விபத்தில் இப்படி இறந்துவிட்டாரே என கூறி அழுதுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் பாஸ்கரனின் தாய் “நானும் என் மகனும் வண்டில வந்த அப்போ ஒரு லாரி வந்து எங்களை இடிச்சுட்டு நிக்காம போயிருச்சு” என கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் பாஸ்கரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு விபத்து ஏற்படுத்திய லாரியை தேடிவந்தனர். அப்போது வெளியான பிரேத பரிசோதனை முடிவில் பாஸ்கர் விபத்தில் சாகவில்லை யாரோ இவரை கொலை செய்துள்ளனர் என்ற தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. எனவே பாஸ்கரனின் அம்மாவை பிடித்து விசாரித்த போலீசாருக்கு நடந்த உண்மைகள் அனைத்தும் தெரியவந்துள்ளது.
பாஸ்கரனின் தாய் அளித்த வாக்குமூலத்தின் படி கொலை செய்த முருகேசன், அவரது தந்தை வீரப்பன், முருகேசனின் மனைவி விமலா உட்பட நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். ஒரு குடும்பமே சேர்ந்து பிளான் போட்டு கொலை செய்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.