

பேன்சி கடையில் பணிபுரிந்த 17 வயது சிறுமிக்கு தாலி கட்டிய வாலிபர் - தகவல் அறிந்து வந்த சிங்கப்பெண் படையை பார்த்ததும் தப்பி ஓடிய வாலிபரால் திருமங்கலத்தில் பரபரப்பு
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் பேன்சி கடையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாரி என்ற 23 வயது வாலிபருக்கும் முதலில் பழக்கம் ஏற்பட்டு பின்பு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இன்று அந்த இளம்பெண் பணியாற்றிய கடைக்கு வாலிபர் வந்துள்ளார். அப்போது கடையில் சிறுமி மட்டும் பணியில்ஈடுபட்டிருந்தார்.
கடையில் வேலை செய்யும் மற்றவர்கள் வெளியில் சென்றுள்ளனர். சிறுமி வியாபாரம் செய்து வந்த நிலையில் வாடிக்கையாளர்கள் வெளியே சென்றவுடன், அந்த பெண்ணின் காதலன் அருகில் வந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வாலிபர் தன் பையில் மறைத்து வைத்திருந்த தாலிக்கயிறை எடுத்து சிறுமியின் கழுத்தில் கட்டி விட்டு அங்கேயே இருவரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது கடைக்கு வந்த ஊழியர் ஒருவர் சம்பவத்தை கண்டு உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து வந்த பெற்றோர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற போது அங்கே ரோந்து பணிக்காக வந்த சிங்கப் பெண் அதிரடிப்படை போலீசார் இருப்பதை கண்டு அவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறுகியுள்ளனர். உடனடியாக சிங்கப்பெண் அதிரடிப்படை சம்பவ இடத்திற்கு சென்ற போது போலீசார் வருவதை கண்டு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதனைத் தொடர்ந்து பேன்சி கடையில் இருந்த சிறுமியை அழைத்துச் சென்ற சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர். சிறுமிக்கு தாலி கட்டிய வாலிபர் மது போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே சிறுமிகளுக்கு நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் பணியாற்றும் கடைக்குள்ளே சென்று மதுபோதையில் வாலிபர் ஒருவர் 17 வயது சிறுமிக்கு தாலி கட்டிய சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.