முன்னாள் நண்பருடன் பழக்கம்.. பிரியாணி, ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து குழந்தை கொலையா? உறவுக்கு தடையாக இருந்ததால் காதலனுடன் சேர்த்து இப்படி செய்தாரா?

பிரியங்காவும் மோகனும் இணைந்து வாழத் தொடங்கிய வாழ்க்கைக்குக் குழந்தை தடையாக இருந்ததால், அவர்கள் குழந்தையைக் கொலை செய்துவிட்டதாகக் குற்றம்
Bengaluru child death case
Bengaluru child death caseBengaluru child death case
Published on
Updated on
2 min read

ஆறு வயது சிறுமி சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆன நிலையில், கடுகோடி போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரணையைத் தற்போது தொடங்கியுள்ளனர்.

குழந்தையின் தாயும் வழக்கறிஞருமான பிரியங்கா மற்றும் அவரது நண்பரும் ரியல் எஸ்டேட் அதிபருமான மோகன் ஜி. மகாலிங்கப்பா ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மோகன் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரியங்காவைத் தொடர்புகொள்ள முடியவில்லை என காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது. தாவணகெரேயில் உள்ள ஒரு சர்வதேசப் பள்ளியின் நிறுவனரும் ஆசிரியருமான, சிறுமியின் தந்தை பிரவீன் பசப்பா அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு தற்போது தொடரப்பட்டுள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, இந்த சம்பவங்கள் குழந்தையின் தாயான பிரியங்காவின் பிறந்த நாளான கடந்த மார்ச் 24 அன்று இரவு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தான் மோகனுடன் ஒரு காபி கடைக்குச் சென்றபோது, ​​குழந்தைக்கு பிரியாணியும் ஐஸ்கிரீமும் கொடுத்துவிட்டு, ஏர் கண்டிஷனரை இயக்கியபடி காரில் தூங்க விட்டுச் சென்றதாக அவர் தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து வீட்டிற்குத் திரும்பியதும், பிரியங்கா உறங்கிக்கொண்டிருந்த தன் மகளைத் தூக்கிக்கொண்டு படுக்கையில் கிடத்தியுள்ளார். மறுநாள் காலை, குழந்தை கண்விழிக்கவில்லை என்று கூறியுள்ளார். அவர் உடனடியாக வைட்ஃபீல்டில் உள்ள வைதேகி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். ஆரம்பத்தில், உணவு நஞ்சாக மாறி குழந்தை இறந்திருக்கலாம் என சந்தேகித்த காவல்துறை, இந்த வழக்கை இயற்கைக்கு மாறான மரணமாகப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை உறுதியற்றதாக இருந்ததாலும், குழந்தையின் தாய் பிரியங்காவின் கூற்றில் முரண்பாடுகளை புலனாய்வாளர்கள் கண்டறிந்ததாலும், காவல்துறை குழந்தையின் உள்ளுறுப்பு மாதிரிகளை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளது.

சம்பவம் நடந்த உடனேயே பிரியங்காவின் நண்பர் மோகன் முன்ஜாமீன் கோரியதால் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் ஒன்றாக இருப்பதற்காக குழந்தையைக் கொலை செய்ததாக அக்குழந்தையின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், குழந்தையின் தந்தை பிரவீன் பிரேதப் பரிசோதனை அறிக்கையை இங்கிலாந்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான தனது சகோதரிக்கு அனுப்பியுள்ளார். அவரோ, "இதில் சதி நடந்திருக்கலாம்" எனச் சந்தேகிப்பதாகக் கூறினார்.

பிரியங்காவும் மோகனும் இணைந்து வாழத் தொடங்கிய வாழ்க்கைக்குக் குழந்தை தடையாக இருந்ததால், அவர்கள் குழந்தையைக் கொலை செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டி பிரவீன் காவல்துறையை அணுகியுள்ளார். தனது புகாரில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பு தன் மகள் வயிற்றில் உதைக்கப்பட்டு, மூச்சுத்திணறடிக்கப்பட்டதாகவும் பிரவீன் குற்றம் சாட்டியுள்ளார். பிரியங்கா ஒரு வழக்குக்காக 2025-ல் பெங்களூரு சென்ற பிறகு, அவருடனான தனது 17 வருட திருமண வாழ்வில் விரிசல்கள் தோன்றத் தொடங்கியதாக பிரவீன் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். அந்தப் பயணத்தின் போது, ​​கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிப்பதாகக் கூறிவந்த ரியல் எஸ்டேட் அதிபரான தனது முன்னாள் கல்லூரித் தோழர் மோகனுடன் அவர் மீண்டும் தொடர்புகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, 2025 டிசம்பரில் இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டு, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக துபாய்க்குப் பயணம் செய்ததாக அவர் கூறினார். பிரிவுக்குப் பிறகு, தம்பதியரின் மூத்த மகள் பிரவீனுடன் தங்கியிருக்க, ஆறு வயது மகள் சீகேஹள்ளியில் உள்ள ஒரு வாடகை வில்லாவில் பிரியங்கா மற்றும் மோகனுடன் வசித்து வந்துள்ளார். மகள்களைப் பார்ப்பதற்கான அணுகலைத் துண்டித்து விடுவதாக பிரியங்கா மிரட்டியதால், தான் விவாகரத்துப் பத்திரங்களில் கையெழுத்திட்டதாக பிரவீன் தனது தரப்பில் இருந்து கூறியிருக்கிறார்.

மோகனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டபோது, ​​இந்த வழக்கின் முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை தங்களிடம் இன்னும் இல்லை என, காவல் துணை ஆணையர் சைதுலு அடாவத் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். விசாரணையாளர்கள் சூழ்நிலை மற்றும் மருத்துவ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றத்தை அணுகியதை அடுத்து, வெள்ளிக்கிழமை மோகனின் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். காவல்துறையினர் தற்போது இந்த வழக்கை ஒரு கொலை வழக்காக மாற்றி, குழந்தை காரில் மூச்சுத்திணறி இறக்க விடப்பட்டதா? அல்லது வாகனத்தில் விடுவதற்கு முன்பு விஷம் கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com