
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் பிரபல டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ். இவர் பல சர்வதேச போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்ற நிலையில் கடந்த வருடம் ராதிகா சர்வதேச போட்டியில் விளையாடிய போது அவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த சம்பவத்திற்கு பிறகு ராதிகா போட்டிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும் தனது டென்னிஸ் மீதான ஆர்வத்தை விடாமல் இருந்துள்ளார்.
எனவே தனது வீட்டிற்கு அருகிலேயே டென்னிஸ் அகாடமி ஒன்று வைத்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு டென்னிஸ் பயிற்சி கொடுத்து வந்துள்ளார். இதற்கிடையே ஒரு ஆல்பம் பாடலையும் நடித்து வெளியிட்டுள்ளார். அடுத்தடுத்து சோசியல் மீடியாவில் ரீல்ஸ் பதிவிட்டு ஆக்ட்டிவாக இருந்து வந்துள்ளார். இவற்றை கவனித்த ஊர் மக்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ராதிகாவின் தந்தை தீபக்கிடம் தவறாக பேசியுள்ளனர்.
உங்கள் மகளின் சம்பாத்தியத்தில் வாழ்கை நடத்துகிறீர்கள் என்று மகளை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கும் தந்தை எனவும் பிற்போக்குத்தனமாக பேசியுள்ளனர். இதனால் கோபமடைந்த தீபக் ராதிகாவிடம் டென்னிஸ் அகாடமியை நடத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதற்கு ராதிகா மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. பின்னர் ராதிகாவின் தாய் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் இது குறித்து தந்தை மற்றும் மகளுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ராதிகா ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து ஆத்திரமடைந்த தீபக் ராதிகாவிடம் சென்று “அகாடமி வேண்டாம் என்றால் அதையும் கேட்க மாட்ட ரீல்ஸ் செய்தேய் என்றால் அதையும் கேட்க மாட்டிய” என சத்தம் போட்டுள்ளார். இதற்கு ராதிகா இனி என் வாழ்க்கையில் நீங்கள் தலையிட வேண்டாம் என கூறி தந்தையை காயப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
மறுநாள் வியாழக்கிழமை ராதிகாவின் தாய்க்கு பிறந்த நாள் என்பதால் அவருக்கு பிடித்த உணவை ராதிகா சமைத்து கொண்டு இருந்துள்ளார். அப்போது தீபக்கிற்கு போன் செய்த அவருடைய நண்பர் ஒருவர் “உனது மகளின் வீடியோ தான் இப்போது ட்ரெண்டில் உள்ளது என கூறியுள்ளார்” இதை கேட்டு ஆத்திரம் அடைந்த தீபக் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து ராதிகாவை சுட்டுள்ளார். காயப்பட்ட ராதிகா அலறல் சத்தம் கேட்டு கீழ் வீட்டில் இருந்த தீபக்கின் அண்ணன் மற்றும் அவரது மகன் தீபக்கின் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அங்கு ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த ராதிகாவையும், கையில் துப்பாக்கியுடன் இருந்த தீபக்கை பார்த்து அதிர்ச்சியடைந்த அண்ணன் மற்றும் அவரது மகன் ராதிகாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் ராதிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். எனவே போலீசில் தனது தந்தை குறித்து ராதிகாவின் சகோதரர் தீரஜ் புகாரளித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தீபக்கை கைது செய்துள்ளனர். இளம் டென்னிஸ் வீராங்கனை தனது தந்தையால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.