

உத்தரபிரதேசம்: லக்னோவில் கணவரைக் கொலை செய்து, அவரது உடலை மரப்பெட்டியில் வைத்து, ஆதாரங்களை அழிப்பதற்காகக் பாலத்தின் அடியில் உள்ள கால்வாயில் வீசியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக, அவரது மனைவி, மனைவியின் காதலன் மற்றும் காதலனது கூட்டாளி ஆகியோரை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் மகன் எனக் கூறப்படும் 16 வயது சிறுவன் ஒருவர் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுஃபியா பானு (35), அவரது காதலன் எனக் கூறப்படும் முன்னா என்ற முச்சத் (52) மற்றும் முகமது இக்பால் என்ற வாசிர் அகமது (40) எனக் காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்தியையும், சடலத்தைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட மின்சார ஆட்டோவையும் மீட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டதாக அடையாளம் காணப்பட்டவர் ராம்கிஷோர் வால்மீகி. இவரது முதல் மனைவின் பெயர் கவிதா தேவி.
கவிதா தேவிதான் சூஃபியா மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் என மூன்று பேர் சேர்ந்து அவரது கணவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர்தான் இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராம்கிஷோர், சூஃபியாவுடன் சுமார் நான்கு ஆண்டுகளாக திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளார். அதன் பின்னர் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரைத் திருமணமும் செய்துகொண்டதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
அதன் பின்னர் சுஃபியாவிற்கு முன்னா என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் ராம்கிஷோர் இரண்டாவது மனைவியின் கள்ளத்தொடர்பு குறித்து அறிந்துள்ளார். இந்த விவகாரத்தால் இவர்களது திருமண உறவில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், ராம்கிஷோர் தனது முதல் மனைவியுடன் மீண்டும் தொடர்பு கொண்டு அவருக்கு நிதியுதவி அளித்தும் வந்துள்ளார். இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக சூஃபியாவிற்கு தெரியவந்துள்ளது. மேலும், கணவரின் இந்த செயல் குறித்து அவர் வருத்தமடைந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து, முன்பு குறிப்பிட்ட மூவரும் ராம்கிஷோரைக் கொல்லத் திட்டம் தீட்டியுள்ளனர். செப்டம்பர் 14-15-ம் தேதிகளின் இரவில், சூஃபியா வீட்டின் கதவைத் தாழிடாமல் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து, முன்னாவும், இக்பாலும் வீட்டிற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. ராம்கிஷோர் தூங்கிக் கொண்டிருந்தபோது, இருவரும் அவரைக் கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
கொலைக்குப் பிறகு, சம்பவ இடத்தைச் சுத்தம் செய்து, இரத்தக்கறை படிந்த பொருட்களை மறைத்து, உடலை ஒரு மரப்பெட்டியில் வைத்து, கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்ததாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மறுநாள் இரவு, அந்தப் பெட்டி ஒரு மின்சார ஆட்டோவில் ஏற்றப்பட்டு, பாவகேடா கால்வாய்ப் பாலத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, பாலத்தின் அடியில் மூவரும் வீசியுள்ளனர்.
இந்த வழக்கை முடிவிற்கு கொண்டு வர, காவல்துறையினர் அந்த மின்சார ஆட்டோவின் நடமாட்டத்தைக் கண்காணித்ததோடு, சந்தேகிக்கப்படும் வழித்தடத்தில் இருந்த சுமார் 180 சிசிடிவி கேமராக்களின் காட்சிகளையும் ஆய்வு செய்துள்ளனர். தொழில்நுட்பக் கண்காணிப்பு, களப்பணி மற்றும் உள்ளூர் உளவுத் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கைதுகள் நடந்ததாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், புலனாய்வாளர்கள் குற்றவாளிகளின் வாக்குமூலங்களை தடயவியல் முடிவுகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களைக் கொண்டு சரிபார்த்து வருவதாக கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்