அஞ்சலக சேமிப்பு திட்டங்கள், சுமார் 2.5 சதவிகித வட்டியில் துவங்கி 9 சதவிகிதம் வரை வட்டி விகிதங்களை கொடுத்து வருகின்றது. மேலும் பிறந்த குழந்தைகள் முதல், 60 வயதை எட்டிய முதியவர்கள் வரை, பலரும் பலனடையும் வண்ணம் பல திட்டங்கள் அதில் உள்ளது. அந்த வகையில் பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் ஒரு திட்டம் குறித்து இந்த பதிவில் காணலாம்.
பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல நல்ல திட்டங்களை வகுத்து வருகின்றது. அந்த வகையில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்ற மத்திய அரசு செயல்படுத்தும் திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம்.
மேலும் படிக்க: பத்து வருட சேமிப்பு.. வட்டியாக மட்டும் 1.5 லட்சம் அள்ளித் தரும் அஞ்சலக திட்டம்!
Sukanya Samriddhi Yojana
இந்த 2025ம் ஆண்டு அஞ்சலகம் அளித்த தகவலின்படி, சுமார் 8.2 சதவிகித வட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஒரு பெண் குழந்தை பிறந்த உடனேயே அவர்களுடைய பெற்றோரின் பெயரில் இந்த திட்டத்தை துவங்க முடியும். மேலும் 10 வயதை கடந்த பிறகு இந்த திட்டம் நேரடியாக அவர்களுடைய பெயரில் செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் ஒரு பெண் குழந்தை 10 வயதை கடந்த பிறகு அவர்களுடைய பெயரில் இந்த செல்வமகள் திட்டத்தை திறப்பது சாத்தியமில்லை. ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்குழந்தைகள் வரை இந்த திட்டத்தில் இணைய முடியும். கடந்த 2015ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு இன்றைய தேதியதில் 8.2 சதவிகித வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க: நீங்க 55 ரூபாய் சேமிக்க ரெடியா? மாதம் 3000 தரும் அருமையான திட்டம்!
எப்படி இணைவது?
பெண் குழந்தை பிறந்ததும், அவர்களது ஆதார் அல்லது பிறப்பு சான்றிதழை கொண்டு இந்த திட்டத்தில் இணைய முடியும். முன்பே கூறியதை போல 10 வயதை கடந்த பெண் குழந்தைகள் இந்த திட்டத்தில் இணைய முடியாது. மேலும் இந்த திட்டம் ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டம் என்பதால், இதற்கான ROI மிக அதிகம். அதாவது உங்கள் முதலீட்டிற்கான வருவாய் மிகவும் அதிகம். 1ம் வயது துவங்கி, அந்த பெண் குழந்தையின் 21 வயது வரை பணத்தை சேமிக்க முடியும். மேலும் அந்த பெண்ணிற்கு 18 வயது நிரப்பும்போது, ஒரு கணிசமான தொகையை எடுக்கவும் வழியுள்ளது.
செல்வமகள் திட்டம் எப்படி செயல்படுகிறது?
உங்கள் பெண் குழந்தையின் 2வது வயதில் இருந்து இந்த திட்டத்தில் பணத்தை சேமிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். மாதம் 2000 என்று வருடத்திற்கு 24,000 ரூபாயை சேமித்து வந்தால், 21 ஆண்டுகளின் முடிவில் சுமார் 3,60,000 ரூபாயை நீங்கள் சேமித்திருப்பீர்கள்.
21 ஆண்டுகளின் முடிவில், நீங்கள் சேமித்த பணத்திற்கு, வட்டியாக மட்டும் சுமார் 7,50,000 ரூபாய் கிடைக்கும். அப்படியென்றால் உங்கள் அசலுடன் சேர்த்து, மூன்று மடங்காக 21 ஆண்டுகளின் முடிவில் சுமார் 11,50,000 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். இந்த பணம், அந்த பெண் குழந்தையின் மேற்படிப்பு, திருமணம் போன்ற நல்ல பல விஷயங்களுக்கு பயன்படும்.
இந்த திட்டத்தை பொறுத்தவரை, பெண் குழந்தை பிறந்த அந்த ஆண்டே சேமிப்பை துவங்குவது மிகவும் நல்லது. மேலும் எதிர்காலத்தில் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் பெரிய அளவில் உயரவும் வாய்ப்புகள் உள்ளது. இந்திய குடிமக்களாக உள்ள அனைத்து பெண் குழந்தைகளும் இந்த திட்டத்தில் இணைய முடியும். மேலும் இந்த திட்டத்தில் இணைவதன் மூலம் வரி சலுகைகளும் கிடைக்கிறது.
உங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை தொடர்புகொண்டு இந்த திட்டத்தில் இணைய முடியும். இன்று நீங்கள் சேமிக்கும் இந்த தொகை, நிச்சயம் உங்கள் செல்வமகளின் எதிர்காலத்திற்கு சிறப்பான ஒன்றாக மாறும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்