தினமும் யோகா செய்தால் இதய நோயாளிகளுக்கு என்ன நடக்கும்? ஆய்வு சொல்லும் சுவாரஸ்ய தகவல்!

யோகா பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மூன்று மாதங்களில் மொத்தம் 20 வழிகாட்டப்பட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
தினமும் யோகா செய்தால் இதய நோயாளிகளுக்கு என்ன நடக்கும்? ஆய்வு சொல்லும் சுவாரஸ்ய தகவல்!
Published on: 
Updated on: 
2 min read

இதய பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் இனி வழக்கமான வாழ்க்கையை வாழ முடியுமா என்ற கவலை பலருக்கும் இருக்கும். சிறிது தூரம் நடந்தாலே மூச்சுத்திணறல், மாடிப்படி ஏறினால் அதிகப்படியான சோர்வு, அன்றாட வேலைகளைக்கூடச் செய்ய முடியாத நிலை என இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், இதய நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் யோகா எந்த அளவுக்கு உதவுகிறது என்பது குறித்து இந்தியாவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆய்வு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. சுமார் 3,500 இதய நோயாளிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், முறையான யோகா பயிற்சி மேற்கொண்டவர்கள் மற்றவர்களைவிட அதிக தூரம் நடக்க முடிந்ததுடன், அவர்களின் அன்றாட வாழ்க்கைத் தரத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆய்வு இந்தியாவின் 16 மருத்துவ மையங்களில் நடத்தப்பட்டுள்ளது. இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 3,492 பேர் இதில் பங்கேற்றனர். இதயத்தின் முக்கிய ரத்தத்தை வெளியேற்றும் திறன் குறைந்து, ஒவ்வொரு துடிப்பிலும் இதயம் வெளியேற்றும் ரத்தத்தின் அளவு 40 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக இருந்த நோயாளிகளே ஆய்வில் இடம்பெற்றனர். இவர்களில் ஒரு பிரிவினருக்கு வழக்கமான மருத்துவச் சிகிச்சையுடன் சிறப்பான யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு வழக்கமான சிகிச்சையுடன் உடல்நலம் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

யோகா பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மூன்று மாதங்களில் மொத்தம் 20 வழிகாட்டப்பட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. நேரடியாகவும் இணையம் வழியாகவும் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதனுடன் வீட்டிலேயே தினமும் சுமார் 50 முதல் 55 நிமிடங்கள் வரை யோகா செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. வெறும் உடல் அசைவுகள் மட்டுமின்றி, மூச்சுப் பயிற்சி, எளிய ஆசனங்கள், தியானம் மற்றும் மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகளும் இதில் இடம்பெற்றிருந்தன. மேலும், உணவுப் பழக்கம், மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வது, புகைப்பழக்கத்தை நிறுத்துவது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியின் முடிவுகள் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, ஆறு நிமிட நடைப்பயிற்சி சோதனையில் யோகா செய்தவர்கள், மற்ற பிரிவினரைவிட சராசரியாக 25.5 மீட்டர் அதிகமாக நடக்க முடிந்துள்ளது. இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பலருக்கு சிறிது தூரம் நடப்பதுகூட சிரமமாக இருக்கும் நிலையில், இந்த முன்னேற்றம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதேபோல், நோயாளிகளின் அன்றாட வாழ்க்கைத் தரத்தை அளவிடும் பரிசோதனையிலும் யோகா பயிற்சி பெற்றவர்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது. அவர்களின் வாழ்க்கைத் தர மதிப்பீட்டில் சுமார் 8 புள்ளிகள் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வின் மற்றொரு முக்கியமான அம்சம், நோயாளிகளின் உடல் சோர்வு மற்றும் பலவீனத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதுதான். அன்றாட வேலைகளைச் செய்வதில் இருந்த சிரமம் குறைவதுடன், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு தொடர்பான அறிகுறிகளிலும் மாற்றங்கள் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நோயாளிகளைப் பராமரிக்கும் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்திலும் சில முன்னேற்றங்கள் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் மட்டும் சுமார் 80 லட்சம் முதல் ஒரு கோடி பேர் இதய செயலிழப்புடன் வாழ்ந்து வருவதாக ஆய்வில் பங்கேற்ற நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 18 லட்சம் புதிய பாதிப்புகள் கண்டறியப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதய மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் குறைவாகவே உள்ளன. இதனால் பல நோயாளிகளுக்கு முறையான பயிற்சி கிடைப்பதில்லை. இந்தச் சூழலில் குறைந்த செலவில், எளிதாகப் பின்பற்றக்கூடிய யோகா பயிற்சி ஒரு துணை சிகிச்சை முறையாக உதவக்கூடும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.

இந்த ஆய்வில் ஒரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். யோகா செய்ததால் உயிரிழப்புகள் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது கணிசமாகக் குறைந்துவிட்டது என்று ஆய்வு நிரூபிக்கவில்லை. யோகா பிரிவில் உயிரிழப்பு, மருத்துவமனை அனுமதி அல்லது பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டவர்களின் விகிதம் 21 சதவீதமாகவும், மற்ற பிரிவில் 22.8 சதவீதமாகவும் இருந்தது. இந்த வேறுபாடு மருத்துவ ரீதியாக உறுதியானதாகக் கருதப்படவில்லை. இந்த ஆய்வு அமெரிக்க இதயச் சங்கத்தின் 2026 அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வு முடிவுகளாகும்; முழுமையான ஆய்வுக் கட்டுரை இன்னும் சக ஆய்வாளர்களின் மதிப்பாய்வைப் பெறவில்லை.

இதய நோயாளிகள் யோகா செய்தால் மருந்துகள் தேவையில்லை என்று நினைக்கக் கூடாது. இதய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உடற்பயிற்சியைத் தொடங்குவதும் ஆபத்தானது. நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ற பயிற்சிகளைத் தகுதியான பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் மேற்கொள்வதே பாதுகாப்பானது. இதய நோயாளிகள் சிறப்பாக வாழ்வதற்கு மருந்துகள், சரியான உணவு, மருத்துவக் கண்காணிப்பு ஆகியவற்றுடன் யோகாவும் துணையாக இருக்கலாம் என்பதையே இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.