குழந்தை பிறந்த பின் பாலியல் வன்கொடுமை வழக்கா? “லிவ் இன் ரிலேஷன்ஷிபில் இதெல்லாம் சகஜம்” உச்ச நீதிமன்றம் கொடுத்த ஷாக்!

ஒருவருக்கொருவர் சம்மதத்துடன் உறவில் இருக்கும் போது, ​​குற்றம் என்ற கேள்விக்கே இடமில்லை..
livein relationship
Published on
Updated on
2 min read

திருமண பந்தம் இல்லாத நிலையில், லிவ் இன் உறவுகளில் உள்ள அபாயங்களை சுட்டிக்காட்டியுள்ள உச்ச நீதிமன்றம், சேர்ந்து வாழும் உறவிலிருந்து வெளியேறுவது ஒரு குற்றச்செயல் ஆகாது என்று கூறியுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக பொய் சொல்லி, தன்னை ஒரு ஆண் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தாக்கியதாகவும் இளைஞர் மீது குற்றம் சாட்டி பெண் ஒருவர் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த போது, ​​நீதிபதி பி.வி. நாகரத்னா இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். மேலும், பரஸ்பர சம்மதத்துடன் சேர்ந்து வாழும் உறவுகளுக்கும், பாலியல் குற்றங்களுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. வயது வந்தவர்கள் திருமணத்திற்கு அப்பாற்பட்ட, லிவ் இன் உறவில் சேர்ந்து வாழத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அத்தகைய உறவுகளில் உள்ள உள்ளார்ந்த அபாயங்களையும் யோசித்து முடுவெடுக்க வேண்டும் என்று நீதிபதி நாகரத்னா குறிப்பிட்டார்.

"இது லிவ் இன் உறவு, திருமணம் செய்துகொள்ளாமல் அந்த ஆணுடன் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார், இப்போது கற்பழிப்பு மற்றும் தாக்குதல் என்று கூறுகிறார். இது என்ன?" என்று, பரஸ்பர சம்மதத்துடன் கூடிய ஒரு உறவு எப்படி பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுக்கு வழிவகுக்கும் எனக் கேள்விகளை அடுக்கினார் நீதிபதி நாகரத்னா. இத்தகைய கேள்விகள் பெரும்பாலும் " குற்றம் சாட்டப்பட்டவரை களங்கப்படுத்துவதாக" விமர்சிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்ட நீதிபதி, சம்மதம் என்பதும் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார். "ஒருவருக்கொருவர் சம்மதத்துடன் உறவில் இருக்கும் போது, ​​குற்றம் என்ற கேள்விக்கே இடமில்லை" என்றும் அவர் காட்டமாக பேசினார்.

சேர்ந்து வாழும் உறவுகளில் இதுதான் நடக்கிறது. பல ஆண்டுகளாக அவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் பிரிந்த போது, ​​அந்தப் பெண், அந்த ஆண் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கிறார். “திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளில் (live in together) இவையெல்லாம் சகஜமானவையே," என்று நீதிபதி மேலும் கூறினார். மனுதாரரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, “குற்றம் சாட்டப்பட்டவர் அந்தப் பெண்ணுக்கு 18 வயதாக இருந்தபோது அவரைச் சந்தித்து, திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார்.” அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏற்கனவே திருமணமாகி நான்கு மனைவிகள் இருந்தனர், ஆனால் அந்தப் பெண்ணுக்கு அது தெரியாது என்றும் அந்த வழக்கறிஞர் வாதிட்டார்.

அதற்கு நீதிபதி “முதலில் திருமணம் செய்து கொள்ளாமல், அந்த நபருடன் வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொண்டது ஏன்” என்று கேள்வி எழுப்பினார். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றவர்களுடனும் இவ்வாறு செய்துள்ளார் என்று வழக்கறிஞர் கூறியபோது, “​​நீதிமன்றம் மனுதாரரின் வழக்கை மட்டுமே கவனிப்பதாகவும் இதற்குரிய ஆதாரங்களை மட்டும் கணக்கில் கொள்ளும் என்றும்”  நீதிபதி கூறினார். நீதிமன்றம் அப்பெண்ணுக்கு அனுதாபம் தெரிவித்ததோடு, அவர் குழந்தைக்கு ஜீவனாம்சம் கோரலாம் என்றும் கூறியது. ஆனால், சேர்ந்து வாழ்ந்தவர்கள் உறவை முறித்துகொள்வது  ஒரு குற்றச் செயலுக்கு அடிப்படையாக அமைய முடியாது என்றும் அது குறிப்பிடப்பட்டது.

"முறையற்ற உறவு இருக்கலாம், ஆனால் அத்தகைய உறவில் பிறந்த குழந்தைகள் முறையற்றதாக இருக்க முடியாது. திருமணம் நடந்திருந்தால், அவளுடைய உரிமைகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்," என்று நீதிபதி குறிப்பிட்டார். மேலும் மத்தியஸ்தம் மூலம் இப்பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தியது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com