“தமிழ்நாட்டுக்கே 'திக் திக்' நிமிடம் தான்” - தவெக ஐடி விங் விமர்சனத்திற்கு கனிமொழி எம்பி பதிலடி!

"செஞ்சியில் குழந்தை காணாமல் போய் இதுவரை கிடைக்கவில்லை. தற்போது வரை அந்தக் குழந்தையின் நிலை என்ன என்பதும் தெரியவில்லை.."
cm vijay
Published on: 
Updated on: 
2 min read

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 5 மாதங்களில் தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்குப் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகள் காணாமல் போவது, குழந்தைகள் கொலை செய்யப்படுவது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஒரு மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.

சென்னை எண்ணூர் தாழங்குப்பத்தில் இரண்டரை வயதுக் குழந்தை தவெக நிர்வாகியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இந்தச் செய்தியையே வெளியே வரவிடவில்லை. செஞ்சியில் குழந்தை காணாமல் போய் இதுவரை கிடைக்கவில்லை. தற்போது வரை அந்தக் குழந்தையின் நிலை என்ன என்பதும் தெரியவில்லை. செஞ்சியில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.

ராணிப்பேட்டையில் ஒரு வயதுக் குழந்தை காணாமல் போயுள்ளது. அந்தக் குழந்தைக்கு என்ன ஆனது என்பதே தெரியவில்லை. யாருக்கு எதிராகக் குற்றங்கள் செய்தாலும், ‘எங்களுடைய தவெக ஆட்சி எங்களைப் பாதுகாக்கும்’ என்ற தெனாவட்டுடன் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தொடர்ந்து தவறுகளைச் செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும், அவர்களைப் பாதுகாப்பதற்கும் எதுவும் செய்யவில்லை என்பது தெரிகிறது.

விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகத் தொடர்ந்து பேசினார். ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கூறினார். ‘இது நாடா, காடா?’ என்று அப்போது விஜய் கேட்டார். இப்போது அதையே திமுக தலைவர் ஸ்டாலின் கேட்கிறார்.

‘தாய்மாமன் சீர்’ என்று சொல்கிறார்கள். ஆனால், தாய்மாமன் எங்கே என்றே தெரியவில்லை. மக்களையும் பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும். மனசாட்சி இருந்தால் அதைச் செய்யுங்கள். ‘திமுகவிற்கு திக் திக் நிமிடம்’ என்று தவெக ஐடி விங் விமர்சித்துள்ளது. திமுகவிற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே திக் திக் நிமிடமாக உள்ளது” என்று கனிமொழி தெரிவித்தார்.

மேலும் தனது X தள பதிவில் தவெக அரசின் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து காட்டமான கேள்விகளை முன்வைதுள்ளார். அதில் "மதுரை, மேலூர் அருகே நேற்றைய தினம் காணாமல் போன 7 வயது சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது." தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பில்லை; தவெக ஆட்சியில் தமிழ்நாடே அச்சத்தில் உறைந்து போயிருக்கிறது. "விஜய் மாமா" என்று அழைத்து உங்களுக்கு ஓட்டுக் கேட்ட குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால், முதலமைச்சர் காவல்துறையைக் கையில் வைத்திருந்து என்ன பயன்? உங்களால் கவனிக்க முடியவில்லை என்றால் அந்தத் துறையை வேறு யாரிடமாவது கொடுத்துவிடுங்கள்; மழலைகளின் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com