“தவெக-வை முடக்க சதி செய்த திமுக” - ஆதாரங்கள் உள்ளதாக கூறி.. திமுக மீது நேரடி குற்றம் சாட்டிய ஆதவ் அர்ஜுனா!

எவ்வளவு நெருக்கடி செய்து இந்த இடத்தை கொடுத்தார்கள் என்ற ஆதாரத்தை நாங்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம்..
“தவெக-வை முடக்க சதி செய்த திமுக” - ஆதாரங்கள் உள்ளதாக கூறி.. திமுக மீது நேரடி குற்றம் சாட்டிய ஆதவ் அர்ஜுனா!
Published on
Updated on
2 min read

கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த விவகாரத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. அதோடு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரம் குறித்த பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதில் தற்போது தீர்ப்பளித்துள்ள ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு கரூர் சம்பவத்தை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமையிலும் ஒரு குழு அமைகப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் ஓய்வு பெற்ற இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்களாக இருக்க கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா “கரூரில் நடந்தது முதல் பிரச்சார கூட்டம் இல்லை, இதற்கு முன்பே நான்கு இடங்களை பிரச்சார கூட்டம் நடைபெற்றுள்ளது. எல்லா மாவட்டங்களிலும் எங்களுக்கு காவல்துறை ஆதரவு அளித்தது இல்லை, நாமக்கல்லில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு காவல்துறை கொடுத்த அனுமதி நேரத்தில் கரூருக்கு சென்று விட்டோம்.

கரூருக்கு சென்ற போது காவல்துறையினர் தான் எங்களுக்கு வரவேற்பு அளித்தது மற்ற எந்த மாவட்டங்களிலும் இது போன்று நடக்கவில்லை. காவல் துறையினர் அந்த திட்டமிட்ட இடத்தில் நின்று பிரச்சாரம் செய்ய வலியுறுத்தினர். கூட்டத்தில் தவறுகள் இருந்தால் ஏன் எங்களை வரவேற்க வேண்டும? தமிழக வெற்றி கழகத்திற்கு எவ்வளவு நெருக்கடி செய்து இந்த இடத்தை கொடுத்தார்கள் என்ற ஆதாரத்தை நாங்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழங்குவோம்.

ஏன் எங்களுக்கு தமிழக அரசின் மீது விசாரணை குழுவின் மீதும் நம்பிக்கை இல்லை என்றால், அந்த சம்பவம் நடந்த பிறகு அனைவரும் நாங்கள் ஓடிவிட்டோம் என்றார்கள். ஆனால் நாங்கள் கரூர் எல்லையில் காத்துக் கொண்டிருந்தோம். அப்போது காவல்துறை ‘நீங்கள் வர வேண்டாம் வந்தால் பிரச்சனைகள் நடக்கும்’ என்று வலியுறுத்தினார்கள். இதற்கான ஆதாரத்தையும் நாங்கள் தாக்கல் செய்வோம்.

நாங்களும் மனிதர்கள் தான், 75 மாற்றும் 60 வருட அரசியல்வாதிகள் கிடையாது. இந்த இழப்பு நடந்த முதல் நான்கு நாட்கள் எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாது. எங்கள் வீட்டில் உறவுகளை இழந்து இருந்தால் நாங்கள் ஊடகத்தின் முன் நின்று பேசிக்கொண்டு இருக்கமாட்டோம், என்ன நடந்தது என்று கருத்து தெரிவிக்க மாட்டோம். இந்த சந்தர்ப்பத்தை திமுக பயன்படுத்திக்கொண்டது.

இதனை பயன்படுத்திக் கொண்டு திமுக எவ்வாறு நடனமாடியது என்பது மக்களுக்கு தெரியும். திட்டமிட்டு கரூர் சம்பவம் நடந்ததில் இருந்து அதாவது 27 ஆம் தேதியில் இருந்து அடுத்த ஞாயிற்றுகிழமை வரை நீதிமன்றங்கள் விடுமுறை எனவே எங்களால் சட்ட ரீதியாகவும் எதிர்த்து போராட முடியவில்லை. உண்மையை சொன்னால் உண்மைக்கு எதிராக பேசுகிறார்கள் என கைது செய்யப்பட்டனர்.

எங்களது கட்சியின் மாவட்ட நிர்வாகிகளையும் கைது செய்தது, இதனை எல்லாம் வைத்து நாங்கள் திமுக தவெக-வை முடக்க திட்டமிட்டு விட்டது என நாங்கள் புரிந்து கொண்டோம். இதற்கு ஆதாரமாக சில காரணங்களை கூறுகிறேன்.

1. அரசு சார்பில் ஒரு ஆணையம் விசாரணை மேற்கொண்டிருக்கும் நிலையில் தனியாக எதற்கு தங்கள் மீது தவறு இல்லை என விளக்கமளிக்க வேண்டும்.

2. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழக வெற்றி கழகத்தினரை குறிப்பாக தலைவரை கடுமையான வார்தைகளால் பேசி நாங்கள் தான் குற்றவாளிகள் என்ற பிம்பத்தை உருவாகிவிட்டது.

கரூரில் உயிரிழந்த 41 நபர்களின் குடும்பத்தையும் நான் தனிப்பட்ட முறையில் தத்தெடுக்க போகிறேன். தமிழக வெற்றிக்கழகம் வாழ்க்கை முழுவதும் அவர்களுடன் பயணிக்கும் மேலும் அவர்களின் உயிரிழப்பிற்கு நிச்சயம் நீதி வாங்கி தருவோம்” என கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com