“நிர்மல் குமார் மீதும் ஊழல் புகாரா?” – டெல்லி போல் போராட்டம் வெடிக்கும்.. தவெக அரசுக்கு வார்னிங்!

"ஆட்சிக்கு வந்து ஆறு மாத காலம் ஆகிவிட்டது. ஆனால் நீங்கள் கடந்த ஆட்சியின் மீது குற்றம் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.."
minister Nirmal Kumar
Published on: 
Updated on: 
2 min read

தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின்வெட்டு தொடர்பாகவும் ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் கொள்முதல் செய்ய உள்ளதாக வெளியான அறிவிப்பிற்கும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமுருகன் காந்தி "தமிழ்நாடு இதுவரைக்கும் ஒரு யூனிட்டை 35 ரூபாய் கொடுத்து வாங்கியதில்லை. இது நாளை பொதுமக்களின் தலையில் தான் வந்து விழும் என்றும் குறிப்பிட்டார். 

தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு யூனிட்டை 35 ரூபாய் கொள்முதல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்த அவர் தமிழக அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அமைச்சர் காலநிலை மாறுபாடு காரணமாக மின்சார தேவை அதிகரித்து இருக்கிறது என்று சொல்கிறார் அது உண்மைதான். அந்த மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு தமிழ்நாடு மின்சார வாரியமே மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

நாமே உற்பத்தி செய்யும் பொழுது அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும். காடம்பாறை, வட சென்னையிலும், மேட்டூர் அனல் மின் நிலையம், உடன்குடி, தூத்துக்குடி அனல்மின் நிலையம் என்ற மின் உற்பத்தி நிலையங்களில் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதிலேயே நம்முடைய மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

நீங்கள் ஆட்சிக்கு வந்து ஆறு மாத காலம் ஆகிவிட்டது. ஆனால் நீங்கள் கடந்த ஆட்சியின் மீது குற்றம் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். திமுக காலத்தில் இடைக்கால ஒப்பந்தம் போட்டார்கள், அதில் குறைந்த விலை கொடுத்து மின்சாரத்தை கொள்முதல் செய்தனர். நாம் உற்பத்தி செய்தாலும் வெளியில் இருந்து ஒப்பந்தம் போட்டு கொள்முதல் செய்தாலும் ஒரு யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

வெளிசந்தையில் 35 ரூபாய் கொடுத்து வாங்கினால் பல ஆயிரம் கோடி நட்டம் நமக்குதான் ஏற்படும். நம்முடைய மாநிலத்தில் மட்டும் தான் வெயில் இருக்கிறதா? ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் வெயில் அதிகமாகத்தான் இருக்கிறது. அங்கே அதிகபட்சம் வாங்க கூடிய மின்சாரங்கள் 16 ரூபாயில் இருந்து 20 ரூபாய்க்கு தான் வாங்குகிறார்கள். ஆனால் தமிழ்நாடு 32 ரூபாயிலிருந்து 37 ரூபாய் வாங்குகிறது. எல்லா மாநிலங்களிலும் வெயில் தாக்கம் ஒரே மாதிரிதான் இருக்கிறது.

போன ஆட்சியை விட இந்த ஆட்சியில் அதிகமாக விலை கொடுத்து வாங்குவது ஏன்? கடைசியில் இது அனைத்தும் மக்கள் தலையில் தான் விழும். இது பொதுமக்களின் பணம். உடனடியாக இந்த ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மின்சாரம் விலை ஏறிக்கொண்டே செல்கிறது, சம்பளம் ஏறவில்லை. மின்சாரம் இல்லையென்றால் படிக்க முடியாது, அனைத்து விதமான வளர்ச்சிக்கும் மின்சாரம் தேவையாக இருக்கிறது. தண்ணீர் எப்படியோ அதே போல மின்சாரம் தேவையாக இருக்கிறது.

நீங்கள் திமுக ஆட்சியில் இருக்கும் போது கேள்வி கேட்டீர்களா என்று சிலர் கேள்வி கேட்பார்கள். கடந்த ஆட்சியிலும் கூட நாங்கள் கேள்வி கேட்டுளோம், சண்டை போட்டு இருக்கிறோம். ஒப்பந்தம் போடப்பட்டதால் நாம் வாங்காத மின்சாரத்துக்கு கூட தனியாருக்கு பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது. 

இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் எதிர்ப்பதை போல நாங்கள் மின்சார வாரியத்திற்கும் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவோம். இதனை நாங்கள் எச்சரிக்கையாக விடுக்கிறோம். நீங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டு இருக்கிறீர்கள். விவசாயிகள், வணிகர்கள், சிறு குறு தொழில் செய்பவர்கள் அனைவரையும் திரட்டுவோம். டெல்லியில் நடக்கும் போராட்டம் போல இங்கு போராட்டம் நடக்கும்.

மின்சார வாரியம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கோடி கோடியாக பணத்தை வாரி வழங்கின்றனர், பணி நிரந்தரம் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு உங்களுக்கு தர வேண்டிய பணத்தை தனியாருக்கு வாரி வழங்குகின்றனர். இதனை பார்த்து நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். தவெக அரசு மின்சார வாரியத்தை சரி செய்ய வேண்டும், இல்லையென்றால் அமைச்சர் நிர்மல் குமார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு வரும். தனியார் காற்றாலை நிறுவனத்தால் வருடந்தோறும் 15,000 கோடி நட்டம் ஏற்படுகிறது. காற்றாலை தனியாரிடம் இருந்து அரசு எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com