“விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டு தனமாக இருக்கிறார்” - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! முதலமைச்சர் வாய் திறக்க மாட்டாரா? என ஆவேசம்

தமிழக அரசுக்கு 15 நாள் அவகாசம் அதற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் ரயில் மறியல்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றி கழகம் அரசு கடந்த மாதம் 25ம் தேதி விவசாய பயிர் கடன் தள்ளுபடி குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் ரூபாய் 50,000 வரை பெற்ற சிறு குறு விவசாயிகளுக்கு மட்டும் 100 சதவீதம் கடன் தள்ளுபடி என அறிவித்திருந்தது. மேலும் ரூபாய் 50,001 மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு பகுதி அளவை பொறுத்து தள்ளுபடி சதவீதம் உள்ளது. ஆனால் தேர்தல் பிரசாத்தின் போதும் வாக்குறுதிகள் வெளியிட்ட போதும் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அது சிறு குறு விவசாயிகள் முற்றிலும் மாறுபட்ட கணக்கில் வழங்குவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆளும் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டியில் எதுவுமே இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் வெற்று மண் பானையில் நாமும் போட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் “தமிழக அரசுக்கு 15 நாள் அவகாசம் அதற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் ரயில் மறியல் என தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கர் வரை வைத்துள்ள விவசாயிகள் பெற்ற பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து வெற்றி பெற்றார். ஆனால் பதவி ஏற்ற பிறகு மிகக் குறைந்த அளவில் விவசாயிகளுக்கு தள்ளுபடி அறிவித்தது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்ற பழமொழி தமிழில் உண்டு அதற்கு ஏற்றார் போல் சட்டியில் எதுவும் இல்லை எனக் கூறி வெறும் பண்பானையை கையில் ஏந்தி அதில் நாமமிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் “தமிழ்நாடு முதலமைச்சர் எதுவும் வாய் திறக்க மாட்டார். முதல் போட்ட அமைச்சர் தான் வாயை திறந்து பேசுகிறார்.. விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டு தனமாக இருக்கிறார்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து பேசினரர்கள். சமீபத்தில் ஆதவ் அர்ஜுனா அவர்கள் ஒரு மேடையில், விவசாயத்தை விட விளையாடுவது தான் கஷ்டம் என ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு விவசாயிகள் பலரும் தங்கள் கண்டன கருத்தை பதிவு செய்து வந்தனர். மேலும் சமூக வலைத்தளத்தில் பெரும் எதிர்ப்பை சந்தித்தது.

தற்போது விவசாயிகள், “தமிழக அரசுக்கு 15 நாட்கள் அவகாசம் தருகிறோம், உடனடியாக தமிழக அரசு விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அப்படி செய்யவில்லையென்றால், “விவசாயிகள் சாலை மறியல், ரயில் மறியல் என தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என எச்சரிக்கை விடுத்தனர். விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கும் பயிர்களுக்கு உரிய விலையை தர வேண்டும் என்றும்  குவிண்டால் ஒன்றுக்கு 5000 ரூபாய் தந்தால் விவசாயிகள் எந்தவித நிவாரணம் கேட்க மாட்டார்கள் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டம்  தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சேதுராமன் தலைமையில் நடந்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும் 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com