

ஜெம் வீரமணி வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தி, மகேந்திர சிம்மன் ஆகியோரின் போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் கிரானைட் அதிபர் வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாக, சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களைத் தவிர கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். SRMU தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணையின்போது, இருவரையும் விசாரிக்க காவல்துறை அனுமதி கேட்டது.
இந்நிலையில், சாந்தி, மகேந்திர சிம்மன் ஆகியோரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம், மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.
இவர்களிடம் துணை போலீஸ் கமிஷனர் கீதாஞ்சலி, உதவி கமிஷனர் ராஜலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
வீரமணியால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் எத்தனை பேர்?, எவ்வளவு நாட்களாக இந்தக் குற்றம் நடந்தது?, வேறு யார் யாருக்கெல்லாம் இந்தக் குற்றச் சம்பவத்தில் தொடர்பு உள்ளது? என விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
போலீசாரின் பல கேள்விகளுக்கு பதிலளித்த சாந்தி, சில கேள்விகளுக்கு மௌனமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருவரும் அளித்த வாக்குமூலத்தை போலீசார் எழுத்து மூலமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
போலீஸ் காவல் நேற்று மாலையுடன் முடிவடைந்ததை அடுத்து, இருவரும் நீதிபதி பத்மா முன்பு போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின், இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் விசாரணை முடியும் வரை இருவரும் புழல் சிறையில் வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண வேண்டும்.
முன்னதாக, சாந்தி மற்றும் மகேந்திர சிம்மனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த மனுவில், வீரமணி சாந்தியின் வீட்டில் வைத்து சிறுமிகளை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியதாகவும், சாந்தி தன்னிடம் உள்ள ஆதாரங்களை அழிப்பதற்கும், மறைப்பதற்கும் வீரமணி தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.24.63 லட்சத்தை சாந்திக்கு அனுப்பியுள்ளார் என்றும் காவல்துறை கூறியுள்ளது.
வீரமணியின் இச்சைக்கு சிறுமிகளை பலியாக்கியதுடன், பெண்களின் தனிப்பட்ட வீடியோக்களையும் எடுத்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
"இதுபோன்ற குற்றச் செயல்களின் மூலம் சாந்தி, வீரமணியிடம் பெற்ற ரூ.2 கோடியை தனது கணவர் மகேந்திர சிம்மனின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார். தங்களின் சுயலாபத்துக்காக சாந்தியும், மகேந்திர சிம்மனும் வீரமணியை பாலியல் குற்றத்தில் ஈடுபடத் தூண்டியுள்ளனர்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளையும், ஆதாரங்களையும் அழித்துவிடுவர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். மேலும், வெளிநாடுகளுக்குத் தப்பிவிடுவர் என்பதால், இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என அதில் கோரியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்