முதலீடுகளை ஈர்க்கும் தமிழ்நாடு? – சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை

தரவு மையத்தின் திறப்பு நிகழ்வும் இருதரப்புப் பேச்சுவார்த்தையும் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான கவனத்தை ஈர்த்துள்ளன
cm vijay
Published on: 
Updated on: 
2 min read

சென்னை அம்பத்தூரில் சிங்கப்பூரைச் சேர்ந்த கேபிட்டாலேண்ட் (CapitaLand) நிறுவனத்தின் பிரமாண்ட தரவு மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் ஆகியோர் இணைந்து திறந்து வைத்து பார்வையிட்டனர். 56 மெகாவாட் மின்சாரத் திறன் கொண்ட இந்தத் தரவு மையத்தில் 4,900 சர்வர் ரேக்குகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய், அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட SIDCO பட்டரைவாக்கம் பகுதியில், அமைக்கப்பட்டுள்ள கேபிட்டாலேண்ட் நிறுவனத்தின் தரவு மையத்தை சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங்குடன் இணைந்து திறந்து வைத்து பார்வையிட்டார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் தரவு மையங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இணையச் சேவைகள், கிளவுட் கம்ப்யூட்டிங், தரவுகளைச் சேமித்தல் மற்றும் செயலாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு இத்தகைய மையங்கள் பயன்படுகின்றன. அந்த வகையில், 56 மெகாவாட் மின்சாரத் திறனையும் 4,900 சர்வர் ரேக்குகளையும் கொண்ட இந்தத் தரவு மையம் சென்னையின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகக் கருதப்படுகிறது.

cm vijay

தரவு மையத்தைப் பார்வையிட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் தலைமையிலான குழுவினர் இருதரப்புப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாடு – சிங்கப்பூர் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இந்தச் சந்திப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, அத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ச. விஜயகுமார், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிங்கப்பூர் அரசின் சார்பில் இந்தியாவுக்கான சிங்கப்பூர் உயர் ஆணையர் சைமன் வோங், சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதர் வில்லியம் சிக், சிங்கப்பூர் பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநர் ஜெர்மைன் லாய், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் முதுநிலை இயக்குநர் பிரான்சிஸ் சோங், எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் மண்டல இயக்குநர் ஜெஸ்ஸி என்ஜி உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து நடைபெற்ற இந்தச் சந்திப்பு, மாநிலத்துக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் அமைந்தது. தரவு மையத்தின் திறப்பு நிகழ்வும் இருதரப்புப் பேச்சுவார்த்தையும் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான கவனத்தை ஈர்த்துள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com