
சென்னையை அடுத்த ஆலந்தூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பில் தண்ணீர் பந்தலை கட்சியின் தலைவரும் நடிகருமான கருணாஸ் திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு தர்பூசணி, அண்ணாசி பழம், வெள்ளரிக்காய் உள்ளிட்ட பழங்களை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ்,
"கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் சம்பவங்கள், வன்முறை சம்பவங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையில் சாதி, மத ரீதியான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதில் தமிழக முதலமைச்சர் காவல்துறை மூலம் அதிரடி நடவடிக்கைகள் எடுத்தாலும் கூட, ஒரு சாராரை மட்டும் குற்றச்சாட்டு சொல்வது நம்முடைய பிரச்சனை அல்ல.
இது சமூகத்திற்கான பிரச்சனை. தவறு செய்ய கூடியவர்கள் யார் என்று கண்டுபிடித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தான் சரியாக இருக்கும். இளைஞர்களிடம் கஞ்சா, மது போன்ற பழக்க வழக்கங்கள் அதிகரித்து வருகின்ற சூழலில் தவறுகளுக்கு தள்ளப்படுகின்றனர். மன ரீதியான ஆலோசனைகள் வழங்கி குற்றங்களை தடுக்க வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி ஒரு சந்தர்ப்பவாதி. ஒட்டுமொத்த அதிமுக பெயரிலோ எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரிலோ கோடான கோடி தொண்டர்கள் மீது அன்பு இல்லாத அரக்கத்தனமான சுய நல போக்கு எண்ணம் கொண்டவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் எடப்பாடி பழனிசாமி குறித்து சொல்லி வருகிறேன். எடப்பாடி தனிப்பட்ட ஒருவருடைய ஒரு மாவட்டத்திற்குள் முடங்கி போன ஒரு சாதி ரீதியான கட்சியாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதை மக்கள் அறிந்து உள்ளனர். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்த போது தொண்டர்கள் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
ஆனால் கூட்டணியை அமீத்ஷா அறிவித்ததன் மூலம் குற்றங்களை, ஊழல்களில் இருந்து காப்பாற்றி கொள்ளவும் பா.ஜ.க.விடம் அதிமுக இயக்கத்தை அடமானம் வைத்து விட்டனர். இந்த கூட்டணியால் எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை. கூட்டணியால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக மகிழ்ச்சியாக இல்லை. நிர்வாகிகள் அழுது புலம்புகின்றனர். அதிமுக கட்சி மாறி சுய நலம் கொண்ட எடப்பாடியின் அமைப்பாக மாறிவிட்டது.
பா.ஜ.க.வுடன் திமுக மறைமுக கூட்டணி என்று கூறும் விஜய் பா.ஜ.க.வுடன் மறைமுக கூட்டணி என்றால் என்ன செய்வார். இஷ்டத்திற்கு சொல்ல வேண்டியது. இப்போது தான் வடை கடை போட்டு உள்ளார். வடை சுடுகிறார். வடையை மக்கள் எவ்வளவு பேர் வாங்குகின்றனர். காக்கா எத்தனை தூக்கி கொண்டு போகிறது என்பது இனி தான் தெரியும்" என கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்