வேட்பாளர்களை விட.. இடைத்தேர்தல் "ரிசல்ட்டுக்கு" பதற்றத்துடன் காத்திருக்கும் "முக்கிய புள்ளிகள்".. தவெகவில் யார் தலை உருளப்போகிறதோ!

"கூட்டணியில் ஏதேனும் அதிருப்தி இருக்கிறதா?" என்ற கேள்வினை எழுப்பியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
TVK Bypoll 2026
TVK Bypoll 2026
Published on
Updated on
3 min read

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்று கூட்டணி ஆட்சியில் தற்போது தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் விசிக போன்ற கட்சிகள் உள்ள நிலையில், இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டினை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2026 சட்டமன்ற தேர்தலில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகிய இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

இவ்வாறு மக்களின் தீர்ப்பினை மீறி தங்களது பதவியை ராஜினாமா செய்து வேறொரு கட்சிக்கு தாவுவது என்பது 'குதிரை பேரம்' தான் என்று பல்வேறு கட்சி தலைவர்கள் இந்த நிகழ்வினை விமர்சித்து வந்தனர். இது அந்த தொகுதி மக்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தையும், கோபத்தினையும் கொடுத்தது.

இதுயெல்லாம் ஒருபுறம் இருக்க 'இதுதான் டிவிஸ்ட்டே' என்று கூறுவதுபோல், அதிமுக-வில் இருந்து ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்த அதே வேட்பாளர்களை அதே தொகுதியில் தவெக நிறுத்தியுள்ளது.

இந்த தொகுதிகளில் "யாரை தவெக சார்பில் நிறுத்துவார்கள்?" என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களின் தீர்ப்பிற்கு எதிராக செலயல்பட்ட அவர்கள் இருவரையுமே மீண்டும் அந்த தொகுதியில் போட்டியாளர்களாக நிற்கவைப்பது என்பது பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. அதே சமயதில் தவெக-விற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

மேலும், தங்களது தொகுதிகளுக்கு செல்லும் அந்த இரண்டு வேட்பாளர்களையும் அந்த தொகுதி மக்கள், கட்டமான வார்த்தைகளால் விமர்சிப்பதுடன், "அவர்களுக்கு மீண்டும் வாக்களிக்கமாட்டோம்" என்றும் தங்களது நிலைப்பாட்டினை தெரிவித்து வருவதை ஊடகங்கள் வாயிலாக நம்மால் பார்க்கமுடிந்தது.

மேலும், அவர்கள் இருவரும் வாக்கு சேகரிக்க வேண்டி தங்களது தொகுதிக்கு செல்லும்போது எல்லாம், மக்கள் அவர்களை நோக்கி சராசரி கேள்விகளை முன்வைத்த வண்ணமே இருக்கிறார்கள். மக்கள் மட்டுமின்றி தவெக-வின் இந்த முடிவிற்கு அரசியலில் உள்ள முக்கிய புள்ளிகள் கூட தங்களது எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக, இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த கார்த்திக் சிதம்பரம் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதாவது, "என் பார்வையில், ராஜினாமா செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்திருக்கக் கூடாது," என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். "தவெக-வுக்கு கூடுதல் எம்.எல்.ஏ.க்கள் தேவையில்லை.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சுமுகமாக ஆட்சி அமைக்கத் தேவையான சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவும் அதனிடம் உள்ளது," என்று அவர் கூறியதோடு, தவெக நீண்டகால உறுப்பினர்களை வேட்பாளராக நிறுத்தி, புதியவர்களைக் காத்திருக்கச் சொல்லியிருக்க வேண்டும்" என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக காங்கிரஸ் தவெக-வுடன் கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி, மேலும், MP-ஆக இருக்கும் ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது என்பது தற்போது அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளது. இவர் மட்டுமின்றி சிபிஐ(எம்) கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், “தேர்தல் முடிவுகள் வந்த 20 நாட்களில் பொறுப்பற்ற முறையிலும், நெறிமுறை தவறி ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் எக்காரணம் கொண்டு வெற்றி பெற கூடாது.

அவ்வாறு வெற்றி பெற்றால் திமுக, அதிமுகவில் இருந்து பலர் ராஜினாமா செய்து அந்த கட்சியில் இணைய ஊக்கமளிப்பதாக அமையும்" என்று பேசியதோடு, "மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு துரோகம் இழைத்த இரண்டு வேட்பாளர்கள் தோற்கடிப்படுவது முதன்மையான கடமை என்பதை வலியுறுத்துகிறேன்" என்று தங்களது நிலைப்பாட்டினை கூறினார்.

மேலும், "எந்த கூட்டணியிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லை. முரண்படும் விவகாரங்களில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டாயம் எதிர்த்து நிற்கும்” என சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த இருவரின் கருத்துக்களும் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

மேலும், இவர்களது இந்த கருத்துக்களை பார்க்கும்போது, "கூட்டணியில் ஏதேனும் அதிருப்தி இருக்கிறதா?" என்ற கேள்வினை எழுப்பியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

மேலும், இந்த இடைதேர்தலானது தவெக-விற்கு வெற்றியினைக் கொடுக்குமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. தவெக ஆட்சி பொறுப்பில் அமர்ந்ததில் இருந்து சமூக ஒழுங்கு சீர்கேடு, அடிக்கடி தொடரும் மின்வெட்டு போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆங்காங்கே பல பகுதிகளில் மக்கள் தொடர் மின்வெட்டினை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதையும் நம்மால் ஊடகங்கள் வாயிலாக பார்க்கமுடிகிறது.

மின்வெட்டு பிரச்சனை ஒரு பக்கம் இருக்க,இன்னொரு பக்கம், குடிநீர் தட்டுப்பாடு, கொலை, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து வருவது என்பது மக்கள் இந்த ஆட்சியில் அதிர்ப்தியாக இருப்பதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக மின்வெட்டு குறித்து சட்டத் துறை மற்றும் எரிசக்தித் துறை அமைச்சரான சி. டி. ஆர். நிர்மல் குமாரின் பதில்களால் மக்கள் இன்னும் அதிர்ப்தி அடைவதாக கூறப்படுகிறது. இதனால், அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்ட சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படலாம் அல்லது அவர்களது துறைகள் மாற்றப்படலாம் என்ற பேச்சுகளும் அரசியல் வட்டாரங்களில் சலசலக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த, சலசலப்பினால் இந்த இடைத்தேர்தலின் மீதே தவெக அமைச்சர்களின் பார்வை இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தவெக அரசு மக்களின் ஆதரவோடு அதிக வாக்கு வித்தியாசத்தில் சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது.

தற்போது, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் தவெக மற்ற கட்சி வேட்பாளர்களிடம் 3000 அல்லது 5000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும் அது "வெற்றிகரமான தோல்வியாகவே பார்க்கப்படும்" என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதனால், மக்களை விட இந்த முறை இடைத்தேர்தல் ரிசல்ட்-டிற்காக தவெக அமைச்சர்களே தங்கள் பதவிகளை பாதுகாக்க மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com