இனி இந்தப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம்! இன்று முதல் ‘வெற்றிப் பயணம்’ திட்டம்.. முழு விவரம்!

இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆண்டுதோறும் சுமார் ரூ.6,000 கோடி செலவாகும் என அரசு கணித்துள்ளது...
vetri payana scheme
vetri payana scheme
Published on: 
Updated on: 
1 min read

தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை 10 மணிக்கு (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் கூடுதல் வகை அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா ‘விடியல் பயணம்’ திட்டத்தை முந்தைய திமுக அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் சாதாரண அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஆட்சி அமைந்தால் மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் அனைத்து அரசு பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த விரிவாக்கத் திட்டத்தின் கீழ் திருநங்கைகளும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆண்டுதோறும் சுமார் ரூ.6,000 கோடி செலவாகும் என அரசு கணித்துள்ளது.

தற்போது, 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர்ப்புற சாதாரண பேருந்துகளிலும், 40 கிலோமீட்டர் வரையிலான மலைப்பகுதி சாதாரண பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணம் செய்து வருகின்றனர். புதிய விரிவாக்கத்தின் மூலம் மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகள், புறநகர் சாதாரண அரசு பேருந்துகள் மற்றும் 40 கிலோமீட்டருக்கு மேல் இயக்கப்படும் மலைப்பகுதி சாதாரண பேருந்துகளிலும் இச்சலுகை வழங்கப்பட உள்ளது.

இதன்படி, 7 அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயக்கும் மொத்தம் 18,413 பேருந்துகளில், 12,695 பேருந்துகள் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. மேலும், நாளொன்றுக்கு மொத்தம் 1,68,500 பேருந்து நடைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் தினமும் சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.‘வெற்றிப் பயணம்’ திட்டத்திற்கான மின்னணு பயணச்சீட்டு எந்திரங்களின் (ETM) இணைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த மாத இறுதியில் சோதனை மற்றும் சரிபார்ப்புப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.

இதற்கான சோதனை ஓட்டம் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். இதன் பின்னர், திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள பேருந்துகளில் தமிழகம் முழுவதும் பெண்கள் கட்டணமின்றிப் பயணம் செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com