Sathankulam Hindi Signboard 
தமிழ்நாடு

"இருமொழிக் கொள்கை.. அதில் விளையாட வேண்டாம்" - எச்சரிக்கும் ஸ்டாலின்! இரவோடு இரவாக ஸ்டிக்கர் ஒட்டியதன் பின்னணி என்ன?

இந்தி எழுத்துக்கள் மட்டும் இரவோடு இரவாக பச்சை நிற ஸ்டிக்கர் மூலம் மறைக்கப்பட்டிருப்பது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

Vinvizhi Leninton

தூத்துக்குடியில் மாவட்டத்தில் உள்ள, சாத்தான்குளத்தில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகையில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி எழுத்துக்கள் இடம்பெற்றிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது இந்தி எழுத்துகள் பச்சை நிற ஸ்டிக்கர் மூலம் மறைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது இரவோடு இரவாக நிகழ்த்தப்பட்டுள்ளதால் மக்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

மேலும், இந்த இந்த விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது கண்டனத்தினை பதிவு செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் SH-93 சாலைப் பகுதியில் புதிதாக பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழிகாட்டிப் பலகை என்பது அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டிப் பலகையில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கான வழிகாட்டுதல்கள் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே ஊர் பெயர்கள் இடம்பெறும் நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட இந்த பெயர் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தியிலும் ஊர் பெயர்கள் இடம்பெற்றிருந்தது பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏற்கனவே, தமிழ்நாட்டில் இருக்கின்ற வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்களையே 'தமிழில் இடம்பெறச் செய்ய வேண்டும்' என அரசு வலியுறுத்தி வரும் நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட இந்த வழிகாட்டிப் பலகையில் இந்தி மொழி இடம்பெற்றிருப்பது குறித்து சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் இது குறித்து பெரும் விவாதம் என்பது எழுந்துள்ளது.

இந்நிலையில், பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்புகள் எழுந்த நிலையில் நேற்று இரவு வழிகாட்டிப் பலகையில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துக்கள் அனைத்தையும் உடனடியாக பச்சை நிற ஸ்டிக்கர் மூலம் மறைந்துள்ளனர். தற்போது, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள பெயர்கள் மட்டுமே வெளிப்படையாகத் தெரியும் வகையில் பலகை காணப்படுகிறது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, சாத்தான்குளம் அமைந்துள்ள பகுதியில் கன்னியாகுமரி-தூத்துக்குடி இடையேயான முக்கிய போக்குவரத்து பாதையாக இருப்பதாகவும், அருகில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம், உடன்குடி அனல் மின் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இருப்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் இப்பகுதிக்கு வந்து செல்வதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் ஊர்களின் பெயர்களை எளிதில் அறிந்து கொள்வதற்காக தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் ஊர்களின் பெயர்கள் இடம்பெறச் செய்ததாக அதிகாரிகள் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிகாரிகள் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தி எழுத்துக்கள் மட்டும் இரவோடு இரவாக பச்சை நிற ஸ்டிக்கர் மூலம் மறைக்கப்பட்டிருப்பது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

இதுகுறித்து மீண்டும் இன்று காலையில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, "வழிகாட்டிப் பலகை அமைக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மூலமாக இந்தி எழுத்துக்கள் மறைக்கப்பட்டிருக்கலாம்" என தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எப்போதும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் இடம்பெறும் ஊறுகளின் பெயர் பலகையில் திடீரென இந்தி எழுத்துக்கள் இடம்பெற்றது ஏன்?, அவற்றை மறைக்க உத்தரவிட்டது யார்?, எந்த அடிப்படையில் அவை மறைக்கப்பட்டன? என்ற கேள்விகள் தற்போது பொதுமக்கள் மத்தியிலும், சமூக வலைத்தளத்திலும் மீண்டும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.

இதுமட்டுமின்றி, மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுமார் 30 கி.மீ. இணைப்புச் சாலை முழுவதும் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம்பெற்றுள்ள பெயர் பலகையால் சர்ச்சை வெடித்துள்ளது.

தற்போது, இந்தியில் ஊர்களின் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது அதிகாரப்பூர்வ X தளபக்கத்தில் "இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது.

தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல. எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?. வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன். இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்!", என்று அவர் தனது கண்டனத்தினை பதிவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்