Kallakurichi Collector complaint 
தமிழ்நாடு

“MLA பாவம் என்று முட்டுகொடுத்த கூட்டணி.. அமைச்சர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்?" - அட்டாக் Mode-ல் எதிர்க்கட்சிகள்! என்ன செய்ய போகிறது விஜய் அரசு?

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்ததாக வெளியான செய்தி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Vinvizhi Leninton

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு தவெக MLA அருள் விக்னேஷ் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியது மற்றும் அவரது வீட்டிற்கு போதையில் சென்று தகராறில் ஈடுபட்டது போன்ற காரணங்களால் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்ததாக வெளியான செய்தி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அரசு தரப்பில் இருந்து மாவட்ட ஆட்சியர் அவ்வாறு எந்த புகாரும் அளிக்கவில்லை என்று கூறிய நிலையில் தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது.

பின்னணி:

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு தவெக MLA அருள் விக்னேஷ் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான தகவல் ஒட்டுமொத்த தமிழகத்தினையும் உலுக்கியது. மேலும், இது குறித்து தவெக MLA அருள் விக்னேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தான் அவ்வாறு எதுவும் செய்யவில்லை என்று கூறினார். மேலும், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த தேசிய மகளிர் ஆணையம், மாவட்ட ஆட்சியரின் புகாருக்காகக் காத்திருக்காமல் தாமாக முன்வந்து விசாரித்து, 7 நாள்களுக்குள் நடவடிக்கை அறிக்கை அளிக்கத் தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்யவும், டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாக்கவும் உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர். திரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் அரசு விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கானது நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு நேற்று (நவ. 23) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, "வெறும் செய்திகளின் அடிப்படையில் மட்டும் காவல்துறைக்கு எப்படி உத்தரவிட முடியும்? ஆட்சியர் தரப்பில் ஏதேனும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா? அல்லது அதற்கான ஆதாரங்கள் உள்ளனவா?" என்று கேள்வி எழுப்பினார். இதற்குக் அரசு தரப்பில் இருந்து, "மாவட்ட ஆட்சியர் தலைமை செயலர் உட்பட இதுவரை யாரிடமும் புகார் அளிக்கவில்லை" என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, சென்னை உயர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதி விக்டோரியா கௌரி, மதுரையில் நடைபெற்ற பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசியபோது, "சமீபத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து தகாத குறுஞ்செய்திகள் வந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இது பணியிடத்தில் நடக்கும் துன்புறுத்தல் இல்லையா? ஆட்சியரின் கணவர் புகார் அளித்துள்ளார். ஆனால், மாநில காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனக் குறிப்பிட்டுப் பேசியது பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் புகார் அளித்திருந்தார் என்பது தொடர்பான தகவலானது 'தி இந்து' செய்தியில் வந்ததையடுத்து, பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

எதிப்பு குரல் எழுப்பும் கட்சி தலைவர்கள்:

மு.க.ஸ்டாலின்:

ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.

தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன.

ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம். பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது.

பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தனது கருத்தினை காட்டமாக தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை:

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், அந்தப் புகாரில் “Inappropriate Advances” மற்றும் “Unwarranted Messages” குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாகவும் The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ள செய்தி, தமிழகம் இதுவரை கண்டிராத ஒன்று.

இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளும், நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த கவனத்துடன் விசாரிக்கப்பட வேண்டியவை. குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை எவ்வித அரசியல் தலையீடுமின்றி, வெளிப்படையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

இந்த விவகாரத்தில் உரிய விசாரணையும் கடுமையான நடவடிக்கையும் எடுக்கத் தவறினால், அரசு நிர்வாகத்தின் மீதும், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாகிவிடும் என்று பதிவிட்டிருந்தார்.

தமிழிசை சௌவுந்தர்ராஜன்:

இப்பொழுது ஆட்சியரிடம் இருந்து புகார் வந்திருக்கிறது என்ற செய்தி வந்திருக்கிறது... குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று சொன்ன சட்டமன்ற உறுப்பினர் என்ன சொல்லப் போகிறார்?. அமைச்சர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் ஏன் கூட்டணிக்கு பரிந்து பேசிய மாணிக் தாக்கூர் என்ன சொல்ல போகிறார்....?.. பொய் சொல்வதை எவ்வளவு துணிச்சலாக சொல்கிறார்கள்..? மறுபடியும் சொல்கிறோம் பெண்களைப் பாதுகாப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக அரசு இப்பொழுதாவது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்... பதவியில் இருக்கும் பெண்களே இப்படி பரிதவிக்க வேண்டி இருக்கிறது என்றால்... சாமானிய பெண்களுக்கு உதவி செய்ய இந்த அரசு எப்படி முன் வரும்?... தாமாக புகார் அளிப்பது கூட தாமதமாகத்தான் முடிகிறது என்றால் தமிழ்நாட்டின் தங்கைகளின் நிலை என்ன?... தவறு நிரூபிக்கப்பட்டால் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் அரசியலில் இருப்பதற்கே தகுதியற்றவர் ஆகிறார்.. என்று காட்டமாக தனது கருத்தினை முன்வைத்தார்.

டிடிவி தினகரன்:

"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குதான் " என்பதைப் போல கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் விவகாரத்தில் அம்பலப்பட்டு நிற்கிறது தவெக அரசு - இனியாவது நடவடிக்கை எடுப்பாரா அல்லது வழக்கம் போல வேடிக்கை மட்டும் பார்பாரா முதலமைச்சர் திரு ஜோசப் விஜய்.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனக்கு தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் முறையான புகாரை அளித்திருப்பதாக இன்று நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்படி ஒன்று நடக்கவே இல்லை, அது வெறும் வதந்தி, எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட அவதூறு, மாவட்ட ஆட்சியரே புகார் அளித்தால் விசாரிப்போம் என வாய்க்கு வந்தபடியும், மாவட்ட ஆட்சியரையே மிரட்டும் வகையிலும் பேசிக் கொண்டிருந்த தவெக அமைச்சரவையின் வெத்துவேட்டு பேச்சாளர்களும், வாய்ச்சொல் வீரர்களோடு இரண்டு அமைச்சர் பதவியைப் பாதுகாக்கப் பாவம், புண்ணியம் எனப் பேசி தற்போது உண்மை வெளிவந்தவுடன் பல்டி அடித்திருக்கும் கூட்டணிக் கட்சித் தலைவரும் மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.

மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண் ஆட்சியரிடம் அநாகரிகமாக நடந்து, தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், தன் சொந்தக் கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய முதலமைச்சரே, அது குறித்து தற்சமயம் வரை வாய் திறக்காமல் அவரைப் பாதுகாக்க முயன்றிருப்பது வெட்கக்கேடானது.

தவெக எம்.எல்.ஏ. தொடர்பான புகாரின் மீது அடிப்படை விசாரணையை மேற்கொள்ளத் தவறிய காவல்துறையை விட, குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு எதிராகவும் பேசிய ஆளுங்கட்சியினரின் குரூரமான மனநிலை மிகவும் ஆபத்தானது.

அரசு நிர்வாகத்தின் பெண் உயர் அதிகாரிக்கு தவெக எம்.எல்.ஏ. செய்த இத்தகைய இழிசெயல் சமூக வலைத்தளங்களில் தொடங்கி, அரசியல் கட்சித் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், தேசிய மகளிர் ஆணையம், மாண்புமிகு நீதிபதி என அத்தனை நிலைகளையும் கடந்து, உயர்நீதிமன்றத்தின் மூலமாகத்தான் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், இந்தத் தரங்கெட்ட தவெக ஆட்சியில் சாமானிய பெண்களின் நிலையைச் சிந்தித்துப் பார்க்கவே மனம் பதறுகிறது.

எனவே, இனியும் காலம் தாமதிக்காமல் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதோடு, அவருக்கு ஆதரவாகவும் மக்களை திசைதிருப்பும் நோக்கிலும் பேசிய ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று விமர்சித்து பதிவிட்டிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி:

ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.

மாற்றிப் பேசி, உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு, தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர், “MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின்

மாநிலத் தலைவர், என வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள், இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர். ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? அதிமுக சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது.

அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது. ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்?. All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்?.

அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது?. நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற மனநிலை தானே இது?. மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?. இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள்?

“நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற

விஜயின் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. விஜய் அவர்கள்.

இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்!. இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!. மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!. எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட அதிமுக துணை நிற்கும்! என்று காட்டமாக விளாசி தனது பதிவினை பதிவிட்டிருந்தார்.

கனிமொழி:

தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகச் செய்திகள் வெளியானபோதே, இதுகுறித்து விசாரித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். அன்று என்னையும், பிற அரசியல் தலைவர்களையும், தி.மு.க.வையும் கேள்வி கேட்டவர்களும், பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதைக்கூட அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டியவர்களும் இன்று என்ன சொல்லப் போகிறார்கள்?. ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகத் துணிச்சலுடன் காவல்துறையில் புகார் அளித்து, பணியிடங்களில் அத்துமீறல்களைச் சகித்துக்கொண்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன்.

இத்தனை நாட்களாகியும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் விஜய், இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது பெண்களின் பாதுகாப்பைவிட, இத்தகைய கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தனது கட்சிக்காரரைப் பாதுகாப்பதுதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்வாரா?. தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சரமாரி கேள்விகளால் துளைத்தார் கனிமொழி.

மறுத்த தவெக-வினர்.. என்ன செய்யப்போகிறது அரசு?:

இந்த விவகாரம் தொடர்பாக திமுக MP கனிமொழி சமூக ஊடகத்தில் பார்த்ததாக கூறி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்ததை சுட்டிக்காட்டி, அது வதந்தி என்று குறிப்பிட்டார். மேலும், கனிமொழி குறித்த போல் எதுவும் நடக்கவில்லை என்று அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். மேலும், முதலைமைச்சர் விஜய், தவெக MLA-களுக்காக கூட்டிய கூட்டத்தில் வைத்து MLA அருள் விக்னேஷை கண்டித்ததாகவும் செய்திகள் கசிந்தது. அவ்வாறு நடக்கவில்லை என்றால் எதற்காக முதலவர் கண்டித்தார்? என்றும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது.

மேலும், மாணிக்கம் தாகூர் இந்த விவகாரம் குறித்து, அந்த MLA பாவம்.. நான் அப்புடியெல்லாம் பேசலாங்க. வேணும்னா CCTV-கூட செக் பண்ணிக்கோங்க. இல்லாத ஒன்றையும் இருக்கின்ற ஒன்றையும் நீங்கள் ஒப்பிடுவது எவ்வளவு தவறு என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். தற்போது, இந்த காணொளிகள் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு விமர்சனத்திற்குள்ளாக்கப்படுவதோடு, முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் MLA அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுப்பாரா? குறிப்பாக, 'அப்படி ஒன்று நடக்கவே இல்லை' என்று பேசியவர்கள் மீதும் நடவடிக்கை பாயுமா? என்று பல்வேறு கல்விகள் இந்த விவாகத்தில் எழுப்பப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்