இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷி காந்த் உள்ளிட்டோர் நடித்து செப்டம்பர் 25ம் தேதி திரையரங்களுகளில் வெளியான திரைப்படம்தான் 'டோரதி'. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை இந்த திரைப்படம் மட்டுமின்றி 'இசைஞானி' இளையராஜா-வும் ஏற்படுத்தினார் என்றுதான் கூறவேண்டும். இந்த திரைப்படம் வெளியாகிய பின்னர் பலரும் எதிர்மறையான கருத்துக்களை முன் வைக்க தொடங்கினர். இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் இந்த திரைப்படத்தை தூக்கிவைத்து கொண்டாடுகின்றனர். இதுமட்டுமின்றி திருநங்கைகளிடம் இந்த திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
'டொராண்டோ' சர்வதேச திரைப்பட விழாவில் 'சென்டர்பீஸ்' பிரிவில் உலக அளவில் முதல்முறையாகத் திரையிடப்பட்டதன் மூலம் தமிழ் சினிமா ஒரு புதிய மைல்கல்லையும் எட்டியது.
டோரதி ஒரு பார்வை:
இத்திரைப்படத்தில் சுப்பு, கார்த்தி என்று இரு நண்பரகள் இருக்கிறார்கள் (கார்த்திக் சுப்புராஜ் பெயரில் பாதி பாதியை நடிகர்களுக்கு வைத்தது போல இருக்கிறதல்லவா?). சிறுவயது முதலே இவர்கள் இருவரும் ஒன்றாகவே இருக்கிறார்கள். ஆணாதிக்க மனம் படைத்த செல்வந்த குடும்பத்தில் பெண் வாசமே இல்லாமல் சிறுவயது முதலே வளரும் சிறுவன்தான் சுப்பு. மறுபுறம் கார்த்தி, ஏழ்மையான குடும்பத்தில் பணியாரம் சுடும் தாய்க்கு மகனாக இருக்கிறார் .
வாலிபர்களாக இருக்கும் இவர்களது வாழ்வில் 'டோரதி' என்ற ஒரு பெண் வருகிறாள். இந்த 'டோரதி' என்ன மாதிரியான மாற்றத்தை அவர்களுக்குள் கொண்டு வருகிறாள்?. பின்னாளில் தனது உயிர் நண்பனான சுப்புவின் உயிரை எடுக்கச் சொல்லி சுப்புவின் அப்பாவே கார்த்தியிடம் சொல்கிறார். இதை ஏன் சொல்கிறார்?, எதற்கு சொல்கிறார்?, கார்த்தி தனது உயிர் நண்பனான சுப்புவை கொலை செய்தானா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
என்ன மாதிரியான வேலைப்பாடு:
பொதுவாகவே, திருநங்கைகள் குறித்த திரைப்படமும், அவர்களை மையப்படுத்தி வரும் திரைப்படமும் தமிழ் சினிமாவில் மிகவும் குறைவு. அந்த விதத்தில் இப்போது வந்திருக்கும் இந்த திரைப்படம் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு திரைப்படம்தான். பல இயக்குநர்கள் திருநங்கைகளை சினிமாவில் ஒரு காட்சி பொருளாகவும், கேலிக்குள்ளானவர்களாவும் காட்டும் நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்த கதையை கையாண்ட விதத்திற்கு 10/10 மதிப்பெண்ணே கொடுக்கலாம்.
ஒரு இடத்திலும் "என்னடா கதை இது?" என்ற எண்ணம் எந்த இடத்திலும் வராமல், அவர் கதையை நகர்த்திய விதம் அருமை. இதுமட்டுமின்றி ஒளிப்பதிவு என்பது திரைப்படத்திற்கு ஒரு பெரிய பக்கபலமாகவே இருந்தது. ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு 'ஃப்ரேமும்' எஸ். திருநாவுக்கரசு செதுக்கியிருய்கிறார் என்றுதான் கூறவேண்டும். அடுத்தது இசை, 'இசைஞானி' இளையராஜா திரைப்படத்திற்கு ஒரு மிகப்பெரிய மற்றொரு பக்கபலம். திரைப்படத்தில் வந்த பாடல்களாக இருக்கட்டும், பின்னணி இசையாக இருக்கட்டும் அனைத்துமே பார்வையாளர்களை வேறொரு உலகத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது. 'கல்யாண விருந்து' பாடல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பார்வையாளர்களிடமிருந்து மிகுந்த வரவேற்பை பெற்றது.
நடிகர்களின் அபார நடிப்பு:
திரைப்படத்தில் வந்த ஒவ்வொருவரும் போட்டிபோட்டு நடித்துள்ளார்கள் என்றுதான் கூறவேண்டும். ரஜினி காந்த்-தின் ரசிகனாக திரைப்படத்தில் வரும் ரிஷி காந்த்தை பார்க்கும்போது உண்மையிலேயே ரஜினி காந்த்-தின் உடல்மொழி தெரிகிறதே, என்று பலரையும் ஒருமுறையாவது யோசிக்கவைக்கும். தான் ஒரு ரஜினி ரசிகர் என்பதை 'ஜஸ்டிஃபை' செய்கிறார் ரிஷி காந்த். அதேபோல் நம்மில் ஒருவனாகவும் ரிஷிகாந்த் இருக்கிறார். அதாவது திருநங்கையாக மாறும் நம் குடும்பத்தில் ஒருவரோ அல்லது நமது நண்பனோ யாராக இருந்தாலும், அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதில் நம்மில் பலருக்கும் ஒரு நெருடல் அல்லது மனப்பக்குவம் இல்லாமை போன்ற உணர்வுகளை அப்படியே திரையில் பிரதிபளித்துள்ளார்.
சனந்த், உண்மையிலேயே தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார். இவரது கதாபாத்திரம் கத்திமேல் நடப்பதுபோன்ற ஒன்று, அதிகமாகவும் ஆகக்கூடாது, அதேசமயம் குறைவாகவும் இருக்கக்கூடாது. அந்த விதத்தில், சுப்பு கதாபாத்திரத்தில் ஆணாக வேறு வழியில்லாமல் ஊருக்காக நடிப்பதாக இருக்கட்டும், திருநங்கையாக மாறி தனக்காக வாழ்வதாக இருக்கட்டும் அதில் சனந்த் கச்சிதமாக பொருந்தி உணர்ந்து நடித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ், சிறிது நேரம் மட்டுமே திரைப்படத்தில் பயணித்தாலும் கூட அவரது கதாபாத்திரம் பார்வையாளர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தது. நாமும் சத்தமிட்டு கதறி அழும்போது நம்மை புரிந்துகட்டியணைத்துக்கொண்டு ஆறுதல் தரும் ஒரு 'தேவதை' தான் டோரதி எனும் கீர்த்தி சுரேஷ்.
அடுத்து, 'விசில்' வீரய்யா-வாக வரும் முத்துக்குமார். ஒரு ஆணாதிக்க மனம் கொண்டவராகவும், வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிக்கும் ஒருவராகவும், சாதிவெறி பிடித்த, கௌரவம்தான் பெரிது என்று இருக்கும் தந்தையாகவும், கொடூரமான ஊர்காரராகவும், அவர் திரையில் வரும்போது எல்லாம் பார்வையாளர்களை அவர் மீது வெறுப்பை அள்ளி வீச வைக்கிறார். அப்போதே ஒரு நடிகனாக அவர் தனது வேலையை திறம்பட செய்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.
மொத்தத்தில் திரைப்படத்தில் நடித்த அனைவரையும் இயக்குநர் நன்றாக வேலைவாங்கி இருக்கிறார் என்று தான் கூறவேண்டும். ஏனெனில் ஒரு இடத்திலும் கூட அவர்களது நடிப்பு என்பது நடிப்பு என்று அணுகும் வகையில் இல்லாமல் இயல்பாகவே இருக்கிறது. ஒருபுறம் அந்த வாழ்விடத்திற்கு இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் கூட்டி சென்றார்கள் என்றால் மறுபுறம் டோரதி-யில் நடித்த நடிகர்கள் நம்மை அங்கேயே வாழ வைத்துவிட்டார்கள். குறிப்பாக அந்த புரட்டாவும், சால்னாவும் கூடதான். நினைத்தாலே அந்த மிலிட்டரி ஹோட்டலுக்கு செல்வது போன்று இருக்கிறது.
மனதை பிழியும் வசனங்கள்:
திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு வசனமும் மனதில் ஆழமாக சென்று பார்வையாளர்களான நம்மையே கேள்விகேட்பது போன்று அமைந்திருந்தது. பாலின பாகுபாடு குறித்து சுப்பு பேசுவதாக இருக்கட்டும், "இன்னும் 10 வருசத்துல எங்களை இந்த உலகம் ஏத்துக்கும்.. உங்களைத்தான் ஜந்து மாதிரி பார்க்கும்" என்று ஒரு திருநங்கை சொல்லும்போது அந்த காலம் இன்று வரை வரவில்லையே என்ற ஏமாற்றத்தை தருவதோடு, திருநங்கைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களை நோக்கி வீசப்படும் உக்கிரமான கேள்வியாகவும் அமைகிறது. "நாம யாருப்பா அடுத்தவன் வாழ்க்கையை தீர்மானிக்க" என்ற வசனமாக இருக்கட்டும், "அம்மாகிட்ட ஓடி வந்துருக்கலாம்ல டி" என்ற வசனமாக இருக்கட்டும் இதயத்தை கையோடு பிடுங்கி எடுப்பது போன்ற உணர்வை தந்துவிடுகிறது.
அதேசமயம் திரைப்படத்தில் பெண்ணடிமைத்தனம், சாதிய வெறி, பாலின பாகுபாடு, ஆணாதிக்கம் போன்றவற்றை காட்சிப்படுத்தும்போது, அதில் கூறப்படும் கருத்துக்கள் துப்பாக்கியில் இருந்து கிளம்பும் குண்டுகள் போன்று இருக்கிறது.
திரைப்படம் முழுக்க இதுபோன்ற பல வசனங்கள் நெஞ்சை தொட்டு செல்ல மறக்கவே இல்லை.
பிளஸ்-மைனஸ்:
திரைப்படத்தின் பிளஸ் என்று பார்த்தால், திரைப்படமே பிளஸ்தான், கதையில் இருந்து, இசையில் இருந்து, கதாபாத்திர தேர்வில் இருந்து அனைத்துமே அற்புதமாக அமைந்திருக்கிறது. எந்த இடத்திலும் 'போர்' அடிக்காமல் கதையை நகர்த்தி, 'கூராயுதம்' எனும் வசனங்களால் பார்வையாளர்களை கேள்விகளால் துளைத்து, திரையரங்கில் இருந்து வரும்போது 'பெரும் தாக்கதோடு' வரவைத்து விட்டார் இயக்குநர். இனி வாழ்க்கையில் எந்த திருநங்கைகளை பார்த்தாலும் இந்த 'டோரதி' திரைப்படம் கட்டாயம் கண்ணுக்கு முன் வந்து செல்லும் அளவிற்கு தாக்கத்தை தந்துவிட்டார்.
அதேபோல் திரைப்படத்தில் பெண்கள் சுப்புவை புரிந்து கொள்ளும் அளவிற்கு கூட எந்த ஆணும் குறிப்பாக அவனது நண்பனும் கூட புரிந்துகொள்ளவில்லை என்ற வேதனைத் தரும் இடத்தை அழகாக காட்டி இருப்பார் இயக்குநர். அதேபோல தனம் என்னும் பெண்ணைப் பற்றி 'ஒரு மடி தேவபட்டது. நான் சொல்லி அழ" என்று சுப்பு கூறும் காட்சி ஆளையே உலுக்கி விடும்.
அதேசமயம் இந்த திரைப்படத்தில் மைனஸ் இல்லையா? என நீங்கள் கேட்டால், இருக்கிறது. டோரதி (கீர்த்தி சுரேஷ்) இறந்துபோவதற்கு காரணமாக கடைசி வரை இயக்குநர் எந்த காரணத்தையும் கூறவில்லை. அதை நம் கையில் விட்டுவிட்டார் என்று எடுத்துக்கொண்டாலும், அந்த தற்கொலை போன்று காட்டப்பட்ட கொலையை, எதோடு முடிச்சி போட்டு விடை கண்டுபிடிக்க என்று தெரியவில்லை. அதேபோல் கார்த்தி, சுப்பு மீது காதலில் விழும் காட்சி சட்டென்று வந்து பட்டென்று முடிந்து விடுகிறது. ஒரு பேச்சிலேயே தான் காதலில் விழுந்ததை கார்த்தி கண்டுபிடித்துவிட்டாரா? என்பதை பார்க்கும்போது, இன்னும் கொஞ்சம் காட்சிகளை வைத்து 'ஜஸ்டிஃபை' செய்திருக்கலாமோ என்று தோன்ற வைக்கிறது.
சமூகத்தின் பார்வையில் டோரதி:
டோரதி திரைப்படம் கொண்டாடப்பட்டாலும், பலராலும் இது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக திரைப்படத்தின் 'கிளைமாக்ஸ்'. இந்த கிளைமாக்ஸை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "படம் ரொம்ப நல்ல இருக்குது.. இந்த காலத்திற்கு ரொம்ப தேவைப்படும் படம். ஆனால், கிளைமாக்ஸ் மட்டும் அப்படி இல்லாமல் இருந்திருக்கலாம். கடைசி 10 நிமிடத்தை மட்டும் தவிர்த்திருக்கலாம்" என்று ஒரு தரப்பினரும்.
"கலாச்சாரத்தை சீரழிக்கவே இதுபோன்ற திரைப்படத்தை எடுக்கிறார்கள். இதை யாரும் ஊக்குவிக்காதீர்கள்", என்று ஒருதரப்பினரும் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர். "இதை ஏன் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?", "இதை ஏன் அவர்களால் ஒரு காதலாக பார்க்கமுடியவில்லை?". இந்த திரைப்படத்தின் முடிவை சொற்பமான எண்ணிக்கையில் உள்ள சிலர் மட்டுமே ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், பலரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுவாகவே நமது தமிழ் சினிமா திருநங்கைகளை கேலிக்குள்ளாக்கியும், அவர்களை இழிவான வார்த்தைகளால் அழைத்தும், ஒரு ஆணால் அவர் செய்யும் உதவியால் மேலே வருவதுபோல்தான் காட்டியுள்ளது.
குறிப்பாக திருநங்கைகளை முன்னுதாரணமாக காட்டிய திரைப்படங்களாவன: தர்மதுரை, காஞ்சனா, பேரன்பு, அருவி, கார்கி, பாவக்கதைகள் (தங்கம்) போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் திருநங்கைகளை அழகாக காட்டிய திரைப்படங்கள். அந்த வரிசையில் தற்போது 'டோரதி' இணைந்துள்ளது.
திருநங்கைகளாக பொதுவாக திரைப்படத்தில் காட்டப்படுபவர்கள், ஒன்று அந்த திரைப்படத்தின் முடிவில் சாதித்து இருக்கவேண்டும், இல்லை அடுத்தவரின் தயவால் உயர்ந்திருக்க வேண்டும், அப்படியும் இல்லை என்றால் அந்த திருநங்கையில் முடிவு பரிதபமாக இருக்கவேண்டும் அல்லது முடிய வேண்டும். ஆனால், 'டோரதி' அப்படி இல்லை. சுப்பு, யாருடைய தயவினையும் வேண்டி இல்லை. பரிதாபம் வேண்டியும் நிற்கவில்லை, சுப்பு சாதிக்கவும் இல்லை. தானும் மற்றவர்களை போல சராசரியாகவே வாழ நினைக்கும் ஒரு ஆள்தான் சுப்பு.
அதிலும் குறிப்பாக காதலில் விழுந்து தனது காதலனோடு வரும் அந்த கிளைமாக்ஸ் காட்சிதான் திரைப்படத்தின் முடிவே. கார்த்தி தான் சிறுவயதில் இருந்து நினைத்த ஒன்று, கனவாகவே போய்விடும் என்று சுப்பு கிண்டல் செய்யும்போது, அதனை திரைப்படத்தின் இறுதியில் நிறைவேற்றி இருப்பார். அது இயக்குநரின் பார்வையில் இருந்து சரியாகவே இருக்கிறது. அதே சமயம் கதைக்கும் தேவைப்படும் ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், அங்குதான் கலாச்சாரத்தை கட்டிக்காப்பவர்களுக்கு பிரச்சனையே ஏற்படுகிறது.
பெண்ணடிமைத்தனம், சாதிவெறி, ஆணாதிக்கம் போன்றவற்றை எதிர்க்கும் அளவிற்கு முற்போக்குவாதியாக இருப்பவர்கள் 'திருநங்கையின் காதலையும்', திருநங்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கும் முற்போக்காக இல்லை என்றுதான் சில சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். இதேபோன்று மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த 'காதல்: த கோர்' திரைப்படம் பலராலும் கொண்டாடப்பட்டது.
தமிழ் சினிமாவில் இதுபோன்ற ஒரு திரைப்படம் வரவே வராது என்றுதான் பலரும் கூறினார்கள். ஆனால், அதையே மிஞ்சும் அளவிற்கு வந்த 'டோரதி', சமூகத்தில் பலரால் ஏற்றுக்கொள்ள படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்களுக்கு பார்ப்பதற்கே 'அருவருப்பாக இருக்கிறது'. 'LGBTQ' என்ற வார்த்தையில் T என்று எழுத்திலேயே இவ்வளவு தடுமாற்றம் என்றால் மீதமிருக்கும் ஒவ்வொரு எழுத்துக்களையும் சமூகம் எப்போது ஏற்றுக்கொள்ளும்? என்று கேள்விகள் பல முன்வைக்கப்படுகிறது.
இந்த திரைப்படம் 90'களில் வருவதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், 2026-லும் இத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு அலைகள் எழத்தான் செய்கிறது. இது ஒரு ப்ரோபோகெண்டா (Propaganda) திரைப்படம், இளைஞர்களை இன்ப்ளூயன்ஸ் செய்து தவறான பாதையில் வழிநடத்தும் என்பது போன்ற பல குற்றசாட்டுகள் இந்த 'டோரதி' திரைப்படத்தின் மீது பார்வையாளர்களால் வைக்கப்படுகிறது.
இறுதியாக, திரைப்படத்தில் சொல்வதுபோன்றதுதான் 'கடும் நெடும் பயணங்களை தொடங்கி வைத்து நட்பு.. கடும் நெடும் பயணங்களை முடித்து வைத்தது காதல்' அவ்வளவுதான் டோரதி. 'டோரதி' எனும் பெயரை தன்னோடும், 'தனத்தை' கையோடும் வைத்து அழகாக இயக்குநர் முடித்திருப்பார். மேலும், இந்த டோரதிகள் நம்மிடையே கேட்பது மரியாதையும், அங்கீகாரமும் மட்டுமே.. அதனால் அன்பை விதைத்து விட்டுத்தான் செல்வோமே.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்