"விழுந்த இடத்திலிருந்து எழுவோம், புயல் அடித்தாலும் நிலைத்து நிற்போம்" நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மக்கள் முன்னிலையில் அதிரடியாக முழங்கினார்.
"காற்றடித்தால் பறந்து போவதற்கு நாம் சருகுகள் அல்ல புயலே அடித்தாலும் இடியே இடித்தாலும் இதே இடத்தில் நிலைத்து நிற்போம்". "நாங்கள் விழுந்த இடத்திலிருந்துதான் எழுந்திருக்கிறோம் எத்தனை முறை விழுந்தாலும் எங்களால் மீண்டும் எழுந்துவிட முடியும் என்ற வலிமை எங்களிடம் உண்டு" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முள்ளிவாய்க்கால் நினைவு நாளையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிப்பூர்வமாக மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
கூட்டத்தில் தொடர்ந்து பேசிய சீமான் நம் மொழி உலக மக்கள் அனைவருக்கும் தாயான மொழி எல்லா மொழிகளும் மனிதனால் பேசப்பட்டவை நம் மொழி மட்டும்தான் இறைவனால் பேசப்பட்டது. இத்தகைய வரலாற்றின் மாண்பு கொண்ட ஒரு இன மக்கள் நாம். அற்பத் தேர்தலில் தோல்வியடைந்து நாம் தமிழர் கட்சி ஒருபோதும் பின்னோக்கிச் செல்லாது. ஒவ்வொரு தோல்வியும் நமக்கு ஒவ்வொரு முன்னேற்றத்தைத் தந்து கொண்டிருக்கிறது. நாம் ஏந்தியுள்ள தத்துவம் நிலையானது. உலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை என்றாலும் நமக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது அது நமக்கு என்றும் வழிகாட்டும் என்று மக்கள் முன்னிலையில் பேசினார்.
தமிழீழப் போராட்டம் மற்றும் தேசியத் தலைவர் பிரபாகரன் குறித்து உருக்கமாகப் பேசிய அவர், "சரண் அடைந்து வாழ்வதைவிட சண்டையிட்டுச் சாவது மேல், மண்டியிட்டு வாழ்வதைவிட மரணித்து விடுவது மேல். எனக்குத் தேவை விடுதலை என களத்தில் தலையைச் சாய்த்தவன் பிரபாகரன். உலக வரலாற்றில் எத்தனையோ விடுதலை இயக்கங்கள் இருக்கலாம். ஆனால், உடலிலே சயனைடு குப்பியைத் தொங்கவிட்டு களத்தில் இறங்கிய இனம் நம் இனம். இன்று தலைவர் பிரபாகரன் படத்தை பார்த்தாலே சிலர் நடுங்குகிறார்கள் சீமானும் அவரது பிள்ளைகளும் மீண்டும் மீண்டும் பேசி இந்த உணர்வை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிறார்கள் என்பதுதான் இவர்களின் பிரச்சனை. ஈழம் என்பது எங்களுக்கு வெறும் மூன்றெழுத்துச் சொல்லல்ல, அது தமிழ் தேசியத்தின் விடுதலை. நம்மிடம் இருந்த ஆயுதங்களை விட எதிரிகளிடம் ஆயுதங்கள் அதிகமாக இருந்தன. தனித்துத் தாயகம் என்ற புனிதக் கனவை நோக்கிப் போராடிய நம் இனம், களத்தில் ஆயுதம் தாங்கி நிற்க 50,000 பேர் தயாராக இருந்தனர். ஆனால், வல்லரசு நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்து இந்தியத் துணைக்கண்டம் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து நம்மை அழித்துவிட்டனர். போர்க்களத்தில் ஒற்ற மகனாகத் தனித்து நின்றார் பிரபாகரன்".
2008, 2009 ஆம் ஆண்டுகளில் கொத்துக் கொத்தாக நமது மக்கள் கர்ப்பிணிகள் குழந்தைகள் என அனைவரும் சரணடைந்த நிலையிலும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைக் கேட்க ஒரு நாதியும் இல்லை பல ஆண்டுகளாக நாங்கள் சேவலைப் போல கூவிக் கொண்டிருக்கிறோம். கூரை மீது ஏறி நின்று கூறினாலும் கேட்காத நிலையில் தான் இந்த அதிகாரம் இருக்கிறது, என்று சர்வதேச சமூகத்தைச் கடுமையாக சாடிப்பேசினார். தேர்தல் அரசியல் மற்றும் தற்போதைய ஆட்சி குறித்து விமர்சித்த சீமான் தேர்தலில் தோற்றுப்போனால் உங்களுடைய பிள்ளைகள் துவண்டு விட மாட்டார்கள், எங்களுக்கு இருப்பது வயிற்றுப் பசி அல்ல வரலாற்றின் பசி சோற்றுப் பசி இல்லை சுதந்திரப் பசி. உடலில் கடைசி உயிர் இருக்கும் வரை உலகில் கடைசித் தமிழன் இருக்கும் வரை தமிழ் தேசியம் இருந்தே தீரும். இன்று எங்கள் குரல்வளை நெரிக்கப்படலாம் இதை இன்று தள்ளிப் போடலாம். ஆனால், எங்களை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது.
2019 மே 18 இதே நாளில் நாம் ஏற்றிய கொடி இன்றும் பறக்கிறது இலக்கு அருகில் உள்ளது பயண தூரம் சற்று அதிகமாக உள்ளது. நம் மக்கள் நமது அரசியலைப் புரிந்து கொள்ள இன்னும் 25 ஆண்டுகள் ஆகும். அவர்களுக்குத் தேவை கருத்தல்ல, கவர்ச்சிதான். வேட்பாளர் யார் என்று தெரியாமல் அவர் படித்தவரா? வேலை செய்வாரா? என்று கூட பார்க்காமல் வாக்களிக்கும் சூழல் தான் இங்கு மக்கள் மத்தியில் உள்ளது. ஜனநாயகம் குறித்து ஹிட்லர் சொன்னது போல, மக்கள் ஒருபோதும் அறிவுத் தலைமையைத் தேட மாட்டார்கள் கவர்ச்சியை நோக்கித்தான் செல்வார்கள் என்று மேற்கோள் காட்டி பேசினார்.
கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து வெயில் மழை என்று பாராமல், எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் பயணித்திருக்கிறேன், விதைக்கிறேன், முளைக்கவில்லை. மறுபடி மறுபடி உழுது விதைத்துக் கொண்டே இருக்கிறேன். நம்மிடம் உண்மை நேர்மை உள்ளது, நம்பிக்கையோடு உழைப்போம் என்று நம்பிக்கையோடு பேசினார். இதனையடுத்து, தமிழகத்தில் தற்போது 10 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அது தெரியாமல் அரசியலில் போட்டியிடுகிறார்கள். வட்டி கட்டவே 5 லட்சம் கோடி போய்விடும். இந்த லட்சணத்தில் எப்படி இலவசங்களை, ஆறு சிலிண்டர்களைக் கொடுக்க முடியும்? நீங்கள் ஈரானைக் கைப்பற்றினால்தான் அது சாத்தியம் என்று தமிழக முதல்வரின் இலவசங்களை கடுமையாக சாடி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், நான் நம்மாழ்வாரின் மகன் மாட்டுச் சாணத்திலிருந்து எரிவாயு தயாரித்துக் கொடுக்கிறேன். படித்த இளைஞர்களுக்கு 4,000 ரூபாய் கொடுப்பதாகக் கூறிவிட்டு, இப்போது கடனாகிப் போச்சு என்கிறார்கள் என்று தற்போதைய அரசை விமர்சித்து பேசினார்.
ஈழ அகதிகள் மற்றும் மீனவர் பிரச்சனை குறித்துப் பேசுகையில், 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தலைமுறை தாண்டி வாழும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை கொடுப்பதில் என்ன சிக்கல்?. திபெத்தியர்களுக்குப் பள்ளிக்கல்வி மருத்துவம் கொடுத்து அங்கீகரிக்கும் இந்த நாடு நம் தொப்புள்கொடி உறவுகளை மதிக்கவில்லை. கச்சத்தீவை மீட்டெடுக்க திமுகவால் முடியவில்லை. அற்பப் பதவிக்காக என் இனத்தைக் கொன்று குவித்தவர்களுடன் அன்று நின்றார்கள் என்று திமுகவை சாடி பேசினார்.
இப்போது திமுகவின் தயவால் வென்ற 5 சீட்டு காங்கிரஸ்காரர்களுக்கு ஓட்டு வங்கி கிடையாது. இந்தத் தோல்வியும் அவமானமும் திராவிடக் கழகத்திற்கு வந்தது எனக்கு மகிழ்ச்சியே. எங்களை வரவிட்டால் மணல் கொள்ளை கல்குவாரி கல்வி வியாபாரம், மருத்துவ வியாபாரம் எதையும் செய்ய விடமாட்டேன் என்று பயப்படுகிறார்கள். நான் 5 விழுக்காடு மக்களுக்கானவன் அல்ல, 95 விழுக்காடு உழைக்கும் மக்களுக்காக வந்தவன். தனித் தமிழகம் மட்டுமே இதற்குத் தீர்வு. அதிகாரம் இல்லை என்பதால் பேசி வருகிறோம். அதிகாரம் வந்தால் நமது இலக்கு அதை நோக்கிச் செல்லும். மேலும், தனது உரையின் நிறைவாக ஒரு சுடுகாட்டில் நின்று கத்தியிருந்தால் கூட ஒரு பிணத்தை எரித்திருக்கலாம், ஆனால் 15 ஆண்டுகாலமாக இந்த மண்ணிற்காகப் போராடி வருகிறேன். விடுதலை நெருப்பை அணையவிடாமல் பற்ற வையுங்கள் என்று மக்களை பார்த்து கூறினார். நாம் இறுதிச் சுற்று ஓட்டத்தைத் துவக்கியுள்ளோம். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2031 சட்டமன்றத் தேர்தல் என அனைத்திலும் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் என்று உறுதிபட முழங்கிச் சீமான் தனது உரையை முடித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.