முதலீட்டாளர்களை கொண்டு வருகிறோம் என்பது நாடகமாக தெரியவில்லையா? சீமான் கேள்வி!

முதலீட்டாளர்களை கொண்டு வருகிறோம் என்பது நாடகமாக தெரியவில்லையா? சீமான் கேள்வி!

முதலீட்டாளர்களை கொண்டு வருகிறோம் என்பது நாடகமாக தெரியவில்லையா? என சீமான் கேள்வி எழுப்பினார்.

தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் 42வது நினைவு தினத்தை முன்னிட்டு எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் முதலமைச்சரின் வெளிநாடு பயணம் குறித்த கேள்விக்கு, இந்தியாவில் உள்ள மாநிலங்களில் எந்த மாநில முதலமைச்சர் இதுவரை வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார் என கேள்வி எழுப்பினார். ஏற்கனவே துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு சென்றபோது எவ்வளவு முதலீடுகளை முதலமைச்சர் ஈர்த்துள்ளார் எனவும் கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து, முதலீட்டாளர்களை முதலமைச்சர் சென்று அழைத்து வரும் அளவிற்கு தான் தமிழ்நாட்டில் நிர்வாகம் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், கப்பலில் வர்த்தகம் செய்ய வந்தவர்களை எதிர்த்து போராடியதை விடுதலை போராட்டம் என்கிறோம், வானூர்தியில் வர்த்தகம் செய்ய வருபவர்களை நேரில் சென்று அழைக்கிறீர்கள், அன்று ஒரு நாட்டிற்கு அடிமையாக இருந்ததாகவும் இன்று எல்லா நாடுகளுக்கும் அடிமையாக்க துடிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இங்கு இருக்கக்கூடிய நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் 50 விழுக்காடு ஆவது தமிழ் இளைஞர்களுக்கு வேலை கொடுத்து இருக்கிறீர்களா என்பதை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என‌ கேள்வி எழுப்பியுள்ளார். வெளிநாடுகளுக்கு செல்வோம் முதலீட்டைக் கொண்டு வருவோம் என்று அம்மையார் ஜெயலலிதா காலத்திலிருந்து நாடகம் நடைபெற்று வருகிறது என்றும் இதெல்லாம் நாடகம் என்று தெரியவில்லையா என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், 6 லட்சத்து 50 ஆயிரம் கோடி தமிழகத்தில் கடன் இருக்கிறது என்று சொல்கிறீர்கள் தமிழகத்தில் எந்தெந்த துறையில் எவ்வளவு கடன் எதனால் கடன் உள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமா அரசு எனவும்  கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க:"முதலமைச்சர் எங்களைப் பார்த்து சிரிப்பதில்லை" அமைச்சர் காந்தி!