கலாஷேத்ரா விவகாரம்..! தற்போதைய நிலையே நீடிக்க...! உயர் நீதிமன்றம் உத்தரவு...! 

கலாஷேத்ரா விவகாரம்..! தற்போதைய நிலையே நீடிக்க...! உயர் நீதிமன்றம் உத்தரவு...! 

கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள பொது பாதையில் சாலை அமைப்பது தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரில், மத்திய கலாச்சார துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தின் வழியாக மயானத்துக்கு செல்லும் பாதை அமைந்திருந்தது. கலாஷேத்ரா அறக்கட்டளை கோரிக்கையை ஏற்று ஒரு ஏக்கர் 43 செண்ட் பரப்பில் அமைந்துள்ள பாதை குத்தகைக்கு வழங்கப்பட்டதுடன், மயானத்தை வேறு இடத்துக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், நிலம் ஒதுக்கீட்டை ஏன் ரத்து செய்யக் கூடாது? என விளக்கமளிக்க கலாஷேத்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீசை எதிர்த்த வழக்கில், வளாகத்தின் தென் மேற்கு பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை மயானம் அமைக்க ஒதுக்கும்படி, கலாஷேத்ராவுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி 1990ம் ஆண்டு ஒரு ஏக்கர் 16 செண்ட் நிலம் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதன்பின் கலாஷேத்ராவின் பயன்பாட்டில் இருந்து வந்த ஒரு ஏக்கர் 46 செண்ட் பாதை நிலம், 2004 வரை ஒரு கோடியே 66 லட்சம் ரூபாய் தொகைக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.

கல்வி நிறுவனம் என்பதால், இந்த பாதை நிலத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி கலாஷேத்ரா முன் வைத்த கோரிக்கையை ஏற்று, நில நிர்வாக ஆணையர், நிலத்தை வழங்க 2010ம் ஆண்டு பரிந்துரைத்தார். ஆனால் அந்த பரிந்துரை மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சென்னை மாநகராட்சி, பொது பாதையில் சாலை அமைக்கும் பணிகளை துவங்கியுள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி கலாஷேத்ரா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கலாஷேத்ரா வளாகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் விடுதி அமைந்துள்ளதாக கூறி, பொது பாதையில் சாலை அமைப்பதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.