மருத்துவ படிப்பு இடைநிறுத்தம்... 15 லட்சம் செலுத்த கூறிய நிர்வாகம்!!

மருத்துவ படிப்பு இடைநிறுத்தம்... 15 லட்சம் செலுத்த கூறிய நிர்வாகம்!!

மருத்துவ மேற்படிப்பிலிருந்து 2 நாட்களில் விலகிய மாணவி 15 லட்ச ரூபாய் செலுத்த வேண்டுமென்ற சென்னை மருத்துவ கல்லூரி முதல்வரின் உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்த உயர் நீதிமன்றம், மாணவியின் சான்றிதழை திருப்பி வழங்க உத்தரவிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு மருத்துவ மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் இடம் கிடைத்த மாணவி அஷ்ரிதா சென்னை மருத்துவக் கல்லூரியில் மே 1ஆம் தேதி சேர்ந்தார். அதன்பின்னர் இரண்டு நாட்களிலேயே சொந்த காரணங்களுக்காக படிப்பை தொடர முடியவில்லை என கூறி, தன்  சான்றிதழ்களை திருப்பித்தரும்படி கோரினார். ஆனால் படிப்பை பாதியில் நிறுத்தினால் 15 லட்ச ரூபாய் செலுத்த வேண்டுமென்ற விதிப்படி, அந்த செலுத்தும்படி கல்லூரி முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவை எதிர்த்து மாணவி தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தனி நீதிபதி மாணவர் சேர்க்கைகான கடைசி தேதி 2019ஆம் ஆண்டு மே 31 முடிவடையும் நிலையில், மே 3ஆம் தேதியே படிப்பிலிருந்து விலகுவதாக விண்ணப்பித்துள்ளதால், சான்றிதழ்களை வழங்கும்படி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தேர்வு குழு, கல்லூரி டீன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மனுக்கள் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது தேர்வுக் குழு மற்றும் கல்லூரி முதல்வர் தரப்பில் ஒரு மாணவருக்கு அரசு பல லட்ச ரூபாய் அளவிற்கு செலவுகளை செய்யும் நிலையில், ஒரு இடம் காலியாவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றும், மருத்துவ படிப்பில் மதிப்புமிக்க ஒரு இடம் வீணாகிறது என்றும் கூறி, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேதி முடிவதற்கு முன்பாகவே இந்த மாணவி தனக்கு வழங்கபட்ட இடத்தை ஒப்படைத்து விட்டதால், அந்த இடத்தை அவருக்கு அடுத்தபடியாக பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு ஒதுக்கி இருக்க முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.  

கட்டணம் வசூலிப்பது தொடர்பான விளக்க குறிப்பில் சில தெளிவின்மை இருக்கத்தான் செய்கிறது என குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், சான்றிதழ்களை பெற 15 லட்ச ரூபாயை மாணவி செலுத்த வேண்டுமென பிறப்பித்த உத்தரவு செல்லாது என கூறி, தனி நீதிபதி உத்தரவை உறுதிசெய்து, அரசின் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  மேலும், 2 வாரத்தில் சான்றிதழ்களை மாணவியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிக்க:   இந்தியாவில் முதல்  மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டுவர.....!!!