மணிப்பூர் முதலமைச்சர் ராஜினாமா செய்ய மக்கள் எதிர்ப்பு !

மணிப்பூர் முதலமைச்சர் ராஜினாமா செய்ய மக்கள் எதிர்ப்பு !

மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங் ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியான நிலையில், ஆளுநரை சந்திக்கச் செல்ல முயன்ற அவரது வாகனத்தை ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழங்குடி அந்தஸ்து கேட்ட மெய்டி இனத்தவர்களுக்கும், இதனை எதிர்த்த குகி பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்ததில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3 மாதங்களாக மாநிலத்தில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், மணிப்பூர் சென்றடைந்த ராகுல்காந்தி மொய்ராங் நிவாரண முகாமுக்கு சென்று மக்களை சந்தித்தார். அப்போது குழந்தைகள், பெண்கள் என கண்ணீருடன் ராகுல்காந்தியிடம் நிலைமை தொடர்பாக எடுத்துரைத்தனர்.

இதனையடுத்து இம்பாலில் ஆளுநர் அனுசுயா உய்கேவை ராகுல்காந்தி சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மணிப்பூருக்கு அமைதி தேவை என்பது மட்டுமே தீர்வாக இருக்க முடியும் என தெரிவித்தார். நிவாரண முகாம்களில் உள்ள குறைபாடுகள் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பிரேன்சிங் பதவி விலகப் போவதாகவும், ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து இம்பாலில் உள்ள பிரேன்சிங் வீட்டின் வெளியே ஏராளமான பெண்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் திரண்டு அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவரது ராஜினாமா கடிதத்தை கைப்பற்றி ஆதரவாளர்கள் கிழித்தெறிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர் பதவி விலகக்கூடாது எனக்கூறி பெண்கள் தொடர்ச்சியாக பேட்டியளித்தனர்.

இதையும் படிக்க:மீண்டும் வேலைக்கு சேர்க்க காவல் ஆய்வாளர் வசந்தி மனு!