தமிழகத்தின் வரலாறு...முதலமைச்சரால் நடைபெறும் பணிகள் குறித்து...அறிஞர்கள் வரலாறு எழுதவேண்டும்...அமைச்சர் வலியுறுத்தல்!

தமிழகத்தின் வரலாறு...முதலமைச்சரால் நடைபெறும் பணிகள் குறித்து...அறிஞர்கள் வரலாறு எழுதவேண்டும்...அமைச்சர் வலியுறுத்தல்!

தமிழகத்தின் வரலாற்றையும், குறிப்பாக திராவிட ஆட்சியில் முதல்வரால் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் மாநாட்டில் கலந்து கொண்ட அறிஞர்கள் வரலாறு எழுத வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

இந்திய வரலாற்று பேரவையின் 81 வது மாநாடு:

சென்னை தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் இந்திய வரலாற்று பேரவையின் 81 வது மாநாட்டின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாட்டில் நடைபெறும் 5வது இந்திய வரலாற்று பேரவையின் மாநாடு இதுவாகும். குறிப்பாக  இம்மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்கள் வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டை துவக்கி வைத்த முதலமைச்சர்:

இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்திய வரலாற்று பேரவையின் 81 வது மாநாட்டினை துவக்கி வைத்தார். அவருடன் சேர்ந்து அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, தா.மோ அன்பரசன் உள்ளிட்ட இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: மிளகாய் பொடி தூவி தலையை துண்டித்த கொடூரர்கள்... விசாரணையில் போலீசார்...ஆந்திராவில் பரபர! 

மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர்:

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்திய வரலாற்று பேரவையின் 4-வது மாநாட்டை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்ததாகவும், தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் 5-வது மாநாடு நிகழ்ச்சியை நான் தொடங்கி வைப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமிழ்நாட்டில் வரலாறு மாநாட்டினை நடத்த தேர்வு செய்ததற்கு நன்றி எனவும் கூறினார்.

மதவாத கட்சியாக இருக்க கூடாது:

தொடர்ந்து பேசிய அவர், வரலாற்றை படித்தால் வேலை கிடைக்குமா? சம்பளம் கிடைக்குமா? என்பதே இங்கு பல பேரின் எண்ணமாக உள்ளது. ஆனால் அந்த எண்ணத்தை கடந்து, வரலாற்றை படித்தால் நம்மைநாமே அறிந்து கொள்ள முடியும், எனவே, வரலாற்றைப் படிப்போம்!! வரலாற்றை படைப்போம்என்று கூறினார். இதனைத்தொடர்ந்து, எந்த ஒரு கட்சியும் மதவாத கட்சியாக இருக்க கூடாது என்றும், மதவாத கட்சியாக இருந்தால் ஜனநாயகமே அழிந்து விடும் என்றும் தெரிவித்தார். 

வரலாறு என்றால் என்ன?:

முதலமைச்சர் முகஸ்டாலின் பேசியதையடுத்து மேடையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வரலாறு என்றால் என்ன? கடந்த கால நிகழ்வுகளும், கடந்த கால செயல்களும் காலத்தின் அடிப்படையில் அமைவது தான் வரலாறு எனவும், தமிழகத்தின் வரலாறு குறிப்பாக திராவிடத்தின் வரலாறு பேசப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, வரலாற்றை சரியாக புரிந்து கொண்டு படிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், வரலாற்றை காலத்திற்கு ஏற்ப படிக்க வேண்டும் எனவும் கூறினார். அதேபோல் இந்தியாவின் வரலாறு முழுமையாக எழுத பட வேண்டும் என்று தெரிவித்த அவர், ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் வரலாறு முழுமையாக மறைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

எனவே, தமிழகத்தின் வரலாற்றையும் குறிப்பாக திராவிட ஆட்சியில் முதல்வரால் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் இங்குள்ள அறிஞர்கள் வரலாறு எழுத வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி வலியுறுத்தினார்.