மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன்? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன்? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மவுனம் காப்பது ஏன் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார். 

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். மதுரையில் நடத்தப்பட இருக்கும் மாநாடு குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மௌனம் காத்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் இருந்து தண்ணீரை பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவில்லை எனில், கள்ளச்சாராயம் அதிகரித்து விடும் என கூறிய அவர், மது குடிப்பவர்களை மீட்டெடுக்க நடவடிக்கை வேண்டும் எனக் கூறினார். மேலும், கைதியாக இருப்பவர் எப்படி அமைச்சராக இருக்க முடியும் என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, தார்மீக அடிப்படையில் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என்றும் கூறினார். 

தற்போதைய ஆட்சியில், மருத்துவ சிகிச்சைக்கு சென்றால் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என புகார் தெரிவித்த அவர், அரசின் அலட்சியப் போக்கால் குழந்தையின் வலது கை அகற்றப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உயர் தர சிசிச்சை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க:சேலத்தில் கொடிகட்டி பறக்கும் லாட்டரி விற்பனை; நடவடிக்கை எடுக்குமா காவல்துறை!