ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு 1.5டன் ஸ்வீட்...! ஆதாரத்துடன் காத்திருக்கும் அமைச்சர்..!

ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு அனுப்பப்பட்ட 1.5டன் ஸ்வீட்..!

ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு 1.5டன் ஸ்வீட்...! ஆதாரத்துடன் காத்திருக்கும் அமைச்சர்..!

அருப்புக்கோட்டை அருகேயுள்ள குறுந்தமடம் கிராமத்தை சேர்ந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பின் அ.தி.மு.க. பிளவுபட்டபோது இவர் ஜெயலலிதா அணியில் திருத்தங்கல் நகர செயலாளராக இருந்தார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசின் செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கத் துறை அமைச்சராக பணியாற்றினார். அதன்பின் மாவட்ட செயலாளர் ஆனார். மீண்டும் 2016 ஆண்டு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மீண்டும் தமிழக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 

பதவியில் இருந்த போது ஆவின் நிறுவனத்தில் பணியாற்றிய அதிகாரிகள், ராஜேந்திரபாலாஜியின் பினாமி என அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2017-2019 ம் ஆண்டுகளில் மட்டும் ரூ.300 கோடி அளவுக்கு வருவாய் இழப்பை அப்போதைய நிர்வாக இயக்குநர் காமராஜ் மற்றும் முன்னாள் பால்வளைத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் ஏற்படுத்தியதாக பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டது. குற்றம்சாட்டியது தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள். 

தனிக்கைத்துறை விசாரணையில் ஆவினில் 2019 மற்றும் 2020ம் நிதியாண்டில் ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக புள்ளி விவரங்களுடன் 108 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் எந்த அளவுக்கு ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளது என்பது குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவினுடைய கூட்டுறவு விதிமுறைகளை மீறி ராஜேந்திர பாலாஜிக்கு சாதகனமான 11 பேருக்கு மொத்த விநியோக உரிமையை கொடுத்துள்ளனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கண்காணிக்க வேண்டிய அப்போதைய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுயலாபத்திற்காக அதிகாரிகளோடு சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடித்திருப்பதாகவும் புகார் எழுந்தது. 

தற்போது திமுக ஆட்சியில் உள்ள நிலையில், மாஜி அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை தோண்டி எடுத்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் செய்த ஊழலை ஆதாரத்துடன் ஆளுநரிடம் புகார் அளித்து வருகின்றனர். அதன்படி சித்தனூரில் அமைந்துள்ள சேலம் ஆவின் பால் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். 

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆட்சியில் ஆவின் ஊழியர்களுக்கான பணி நியமனத்தில் 234 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு பணி நீக்கம் செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

தமிழகம் முழுவதும் 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்த அவர், கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு, தீபாவளி நேரத்தில் 1.5 டன் ஸ்வீட் ஆவின் நிலையத்தில் இருந்து இலவசமாக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதற்கான ஆதாரம் இருப்பதாகவும், நிச்சயம் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். பலூன்களை குத்தி விளையாடிய குழந்தை ராஜேந்திர பாலாஜிக்கா இந்த நிலைமை என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.