செல்போனை வெளியே எடுத்தால் ரூ.5000 அபராதம்...! காளகஸ்தி கோயில் நிர்வாகம் அதிரடி...!!

செல்போனை வெளியே எடுத்தால் ரூ.5000 அபராதம்...! காளகஸ்தி கோயில் நிர்வாகம் அதிரடி...!!

செல்போனை வெளியே எடுத்தால் 5000 அபராதம் விதிக்கப்படும் என காளகஸ்தி கோயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது. 

முன்பெல்லாம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வாசலை மிதித்தவுடனே இரண்டு கரங்களையும் தூக்கி கடவுளை வணங்குவதுண்டு. ஆனால் எப்போது கேமரா செல்போன்கள் வரத் தொடங்கியதோ, அன்றில் இருந்து காற்றில் பறந்து போனது பக்தி. 

கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பே கோபுரத்தை ஒரு போட்டோ, வரிசையில் காத்திருக்கும் போது கூட்டத்தை ஒரு போட்டோ, கருவறை தரிசனத்தின் போதும் கூட ரகசியமாய் ஒரு போட்டோ, பிரசாதம் வாங்கி அமர்ந்தபின் பிள்ளைச் சிரிப்புடன் ஒரு செல்பி என கோயிலுக்குள் போட்டோ ஷூட்கள்தான் அரங்கேறி வருகிறது. 

அதிலும் வாகனங்களில் சாமி உலா வரும் போது கையெடுத்து கும்பிட வேண்டிய கைகள் எல்லாவற்றிலும் செல்போனே ஒய்யாரமாய் அமர்ந்துள்ளது. இப்படி கோயிலில் பக்தியை கெடுக்கும் விதமாய் அமைந்த செயலுக்கு தடை போட்டுள்ளது காளஹஸ்தி கோயில் நிர்வாகம். 

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் காளஹஸ்தியில் புகழ் பெற்ற சிவன் கோயில் அமைந்துள்ளது. உள்ளூர் முதல் வெளிநாடு என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

அவ்வாறு கோயிலுக்கு செல்வோர், செல்போன்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதாக பலமுறை குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. மேலும் கோயிலில் பணியாற்றும் அர்ச்சர்கர்களே செல்போனில் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பதாகவும், இதனால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன. 

இதையடுத்து நடவடிக்கையில் இறங்கியது கோயில் நிர்வாகம். இனிமேல் கோயிலுக்குள் தெரிந்தோ தெரியாமலோ செல்பானை எடுத்தால் அதே இடத்தில் வைத்தே 5000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும், அபராதம் கட்டத் தவறினால் செல்போன் பறிமுதல் செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்த கடுமையான சட்டம் கோயில் நிர்வாகத்தின் பார்வையில் சரியென்றே வைத்துக் கொண்டாலும், பக்தர்களுக்கு நெருடலையே ஏற்படுத்தியுள்ளது.