திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்கள்..!

போக போக முக்கிய நிர்வாகிகளும் கட்சி தாவலுக்கு வாய்ப்பு..!

திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்கள்..!

அதிமுக என்ற கட்சியிலிருந்து நிர்வாகிகள் வெளியேற தொடங்க ஆரம்பித்து விட்டனர். கடலூரை சேர்ந்த 7 கவுன்சிலர்கள் அதிமுகவில் இருந்து விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். இரட்டை தலைமையாலும், பதவிகள் கிடைக்காததாலும், சீனியர் நிர்வாகிகள் தயவு தாட்சனையின்றி கட்சியிலிருந்து நீக்கப்படுவதாலும் பிற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். சசிகலாவை பற்றி பேசினால் நீக்கம், தலைமைக்கு எதிராக கருத்தை பதிவு செய்தால் நீக்கம், தலைமையின் முடிவுக்கு எதிராக பேசினால் நீக்கம் என அதிமுகவில் இருந்து நீக்கம் மட்டுமே அதிகரித்து வருகிறது. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகாவது அதிமுக மீண்டும் ஒற்றைத் தலைமையின் கீழ் ஒருங்கிணையும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தது அதிருப்தியை ஏற்படுத்தியது. பிறகு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியதால் அதிருப்தியடைந்த சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவேன் என்ற நோக்கத்தில் சில முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இருப்பினும் அவரை கட்சிக்குள் விடக்கூடாது என்பதற்காக பலதரப்பட்ட முயற்சியில் அதிமுக தலைமை ஈடுபட்டு வருகிறது. மூத்த நிர்வாகியான அன்வர் ராஜா முதல், பாஜக தலைமை அறிவுரை வழங்கியும் கூட சசிகலாவை கட்சிக்குள் மீண்டும் சேர்க்கவே கூடாது என்பதில் உறுதியாக உள்ளது அதிமுக தலைமை. சசிகலாவுக்கு ஆதரவு அளித்ததற்காக அன்வர் ராஜாவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 

சரி எப்படியும் இவர் சசிகலாவோடு இணைவார், அல்லது திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கபட்ட சூழலில், தனது ராமநாதபுரம் வீட்டில் அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் அன்வர் ராஜா. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் கூட அதிமுகவில் இருப்பது போன்றே அவர் ஒட்டியிருந்த போஸ்டர் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே தொடர் ரெய்டுகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்ற யோசனையில் முன்னாள் அமைச்சர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். அவர்களை சமாதனப்படுத்துவதா? அல்லது ரெய்டில் இருந்து தங்களை காத்துக் கொள்வதா? அல்லது எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை செய்வதா? அல்லது அதிருப்தி நிர்வாகிகளை சமாளிப்பதா என ஒன்றும் புரியாமல் அதிமுக தலைமை திகைத்து நிற்கிறது. இந்த சூழலில், அதிருப்தியாளர்களை சரிசெய்யும் முயற்சியை அதிமுக தலைமை கையாள தவறியதால், தற்போது அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறத் துவங்கிவிட்டனர். கடைசியாக அதிமுகவில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில், இரட்டை தலைமைக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. யாருக்கு பதவிகளை கொடுப்பது என்பது ஒரு பக்கமும், ஏற்கனவே பதவியில் இருந்தவர்களை நீக்கி புதியவர்களுக்கு பதவி வழங்கப்பட்டது முதல் பல்வேறு குழப்பங்கள் நிலவியது அதிமுக உட்கட்சி தேர்தலின் போது. கடலூரில் தேர்தலின் போது இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதனால் கடலூர் திருவந்திபுரம் சாலையில் பரபரப்பான சூழல் நிலவியது. 

கடலூரில் அதிமுகவில் திடீர் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் தான் கடலூர் மாவட்டத்தைச் ஏழு அதிமுக கவுன்சிலர்கள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மனோகரன், கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கள் பகுதி மக்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் இருந்ததாகவும் , ஆளுங்கட்சியாக இருந்த போதே தங்களுக்கு எவ்வித உதவியும் அரசு சார்பிலும் கட்சி சார்பிலும் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினார். இதன் காரணமாகத்தான் திமுகவில் இணைவதாகவும், இந்தாட்சியில் மக்களுக்கு நல்ல திட்டங்களை செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் தெரிவித்தார். இப்போது தான் கவுன்சிலர்கள் கட்சி தாவ ஆரம்பித்து இருக்கின்றனர். போக போக கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களும் மாற்று கட்சிக்கு தாவ வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.