அதிமுக தலைவராக விரும்புகிறாரா அல்லது சாதி சங்க தலைவராக விரும்புகிறாரா ஓ.பி.எஸ்?

அதிமுக தலைவராக விரும்புகிறாரா அல்லது சாதி சங்க தலைவராக விரும்புகிறாரா ஓ.பி.எஸ்?

ஓ.பி.எஸ் மற்றும் வி.கே சசிகலா இருவரும் இணைந்து அதிமுகவை வழிநடத்த வேண்டும் என தேவர் கூட்டமைப்புகளின்  தலைவர்கள் இருவருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளனர்.

ஓ.பி.எஸ், சசிகலா இருவருக்கும் கடிதம்:

ஓபிஎஸ் – ஈபிஎஸ் – சசிகலா என்ற முக்கோண அரசியலில் அதிமுக சிக்கித்தவிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.  அதிமுகவை கைப்பற்றுவதில் கடும் போட்டி இருக்கும் நிலையில் தான், பிரதமர் மோடியின் தமிழக வருகை, எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகிய இருவரையும் தனியாக சந்திப்பதை பிரதமர் மோடி தவிர்த்துவிட்டார். இதனால், ஓபிஎஸ் – ஈபிஎஸ் மோதல் மேலும் அதிகரித்துள்ளது. 

அதிமுகவில் அடுத்து என்ன நடக்க போகிறது? ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஸின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும்? சென்னை வந்த மோடி ஏன் ஈ.பி.எஸையும், ஓ.பி.எஸையும் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை? இப்படியாக ஒரு பரபரப்பான சூழலில் நகர்ந்து கொண்டிருக்கிறது அதிமுக. 
இந்த சூழலில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக கூட்டணியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தேவர் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஓ. பன்னீர்செல்வத்திற்கும், வி.கே சசிகலாவுக்கும் தனித்தனியாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். 

ஓ.பி.எஸ் சசிகலா இருவரும் ஒன்றிணைய வேண்டும்:

தேவர் கூட்டமைப்பினர் எழுதிய கடிதத்தில், ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா இருவரும் இணைந்து அதிமுகவை வழிநடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த காலங்களில் அதிமுகவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய சமுதாயம் தேவர் சமுதாயம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். எனவே தங்களுடைய ஒட்டுமொத்த கோரிக்கையை ஏற்று இருவரும் இணைந்து அதிமுகவை வழிநடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்து தனித்தனியாக கடிதம் எழுதிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கையெழுத்து:

ஓ.பி.எஸ்க்கும் சசிகலாவுக்கும்  தனித்தனியாக எழுதிய கடிதத்தில் 50க்கும் மேற்பட்ட தேவர்  கூட்டமைப்பின் தலைவர்கள் கையெழுத்திட்டிருப்பதாக தகவல் கூறப்படுகிறது. 

சந்தேகம்:

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்து கொண்டிருக்கும் நிலையில், தேவர்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் எழுதிய கடிதத்தை  ஓ.பி.எஸ் ஏற்று, ஈ.பி.எஸ் மீது தற்போது உள்ள பிரச்சனையில் அதிமுகவை கைப்பற்றுவதற்காக சசிகலாவிடம் கூட்டணி வைப்பாரா? அல்லது இந்த கடிதத்தை ஒரு ட்ரம்ப் காடாக வைத்து ஓ.பி.எஸ்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிமுகவை கைப்பற்ற சசிகலா திட்டம் வகுப்பாரா? என்ற சந்தேகம் அரசியல் வல்லுனர்களிடம் எழும்பி வருகிறது.